Saturday, September 14, 2024

" ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். (லூக்கா நற்செய்தி. 7:6,7)



 "ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். 
உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். 
(லூக்கா நற்செய்தி. 7:6,7)

கப்பர்நாகூமிலுள்ள நூற்றுவர் தலைவர் ரோமையர் படைப் பிரிவைச் சார்ந்தவர்.

உண்மையான பிறரன்பு உள்ளவர்.

யூதர்கள் ரோமையர்களால் ஆளப்பட்டு வந்தனர்.

நூற்றுவர் தலைவர் யூதர் அல்ல, ஆனாலும் அவர்களை உண்மையான அன்புடன் நேசித்தார்.

அவர்களுக்கு ஒரு செபக்கூடம் கூட கட்டிக் கொடுத்திருக்கிறார்.

யூதராகிய இயேசுவின் மீது யூதர்களுக்கு இருந்த விசுவாசத்தை விட அவருக்கு அதிக விசுவாசம் இருந்தது.

பரிசுத்தராகிய அவர் முன் நிற்கக்கூட தான் தகுதி அற்றவன் என்று நினைக்கும் அளவுக்குத் தாழ்ச்சியுள்ளவர்.

அவருடைய பணியாளர் ஒருவர் சாகக் கிடந்தார்.

இயேசுவால் அவரைக் காப்பாற்ற முடியும் என்று உறுதியாக நம்பினார்.

இயேசுவிடம் நேரடியாக வந்து உதவி கேட்க அவருடைய தாழ்ச்சி இடம் கொடுக்கவில்லை.

ஆகவே ஒரு பணியாளர் மூலம் இயேசுவுக்குச் செய்தி அனுப்பினார்.

இயேசு அவருடைய இல்லத்துக்குப் போய்க்கொண்டிருந்த போது 

திரும்பவும் ஒரு ஆள் அனுப்பி 


"உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். 
உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்." என்று சொல்லச் செய்தார்.

இயேசுவும் அவரது விசுவாசத்தைப் பாராட்டி நோயாளியை வார்த்தையாலே குணமாக்கினார்.

நூற்றுவர் தலைவரிடமிருந்த ஆழமான விசுவாசம், நம்பிக்கை, தாழ்ச்சி ஆகிய புண்ணியங்கள் நம்மிடம் இருக்கின்றனவா என்பதை ஆராய்வோம்.

நாம் திவ்ய நற்கருணை வாங்குமுன் செந்தூரியன் பயன் படுத்திய அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி நாம் செபிக்க தாய்த் திருச்சபை நமக்கு அறிவுறுத்துகிறது.

"தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், என் ஆன்மா குணமடையும்."

இந்த செபத்தைச் சொல்லும் போதெல்லாம் என் மனதில் ஒரு எண்ணம் ஓடும்.

செந்தூரியனின் செபத்தைக் கேட்டு அதன்படி இயேசு அவர் வீட்டுக்குப் போகவில்லை.

ஆனால்  இயேசு என்னிடம் வரப் போகிறார்.

நானும் என் நாவில் அவரை வரவேற்கப் போகிறேன்.

பிறகு எதற்கு இந்த செபம்?

இந்த செபத்தை ஏன்  திருச்சபைத் தாய் திருவிருந்தில் சேர்த்திருக்கிறாள்?

ஒவ்வொரு நாளும் பள்ளிக்குப் புறப்படும் போது நமது தோளில் புத்தகப் பை தொங்கும்.  உள்ளே Tiffin box இருக்கும்.

அவற்றைப் பார்த்துக் கொண்டே அம்மா கேட்பார்கள்,

''எல்லாம் எடுத்துக் கிட்டியா?"

"ஆமாம்மா."

"Tiffin box?"

"எடுத்துக் கோண்டேன்மா."

"சரி, பத்திரமா‌ போய்வா. சாயங்காலம் சீக்கிரம் வந்து விடு.''

எதற்காக தினமும் இந்த விசாரிப்பு?

நம் மேல் நமக்கு அவர்களுக்கு உள்ள அக்கறை.

அம்மாவின் இந்த தினசரி விசாரிப்பு நாம் பள்ளிக்கூடம் புறப்டுமுன்பே நம் மனதில் தோன்றும்.

நாமும் எல்லாவற்றையும் ஞாபகமாக எடுத்து வைப்போம்.

அதேபோல் தான் திருச்சபைத் தாயும் நாம் நற்கருணை வாங்கும் முன் இந்த செபத்தை சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்திருக்கிறாள்.

இந்த செபத்தை சொல்லும்போது நம் மனதில் எழும்ப வேண்டிய கேள்விகள், 

"எனக்குள் வரயிருப்பவர் யார்?
அவர் எப்படிப் பட்டவர்?
பரிசுத்தராகிய அவர் என்னிடம் வரவேண்டிய அளவுக்கு நான் பரிசுத்தமாக இருக்கிறேனா?"

இந்தக் கேள்விகள் நமது உண்மை நிலையைப் புரிய வைக்கும்.

 கேட்டுப் பழக்கமாகிவிட்ட இக்கேள்விகள் மறுநாள் திருப்பலிக்கு வருமுன்பே நம் மனதில் எழும்.

கேள்விகளும் பதில்களும் உள்ளத்திலிருந்து வந்தால் திருப்பலிக்கு வரும்போதே நம்மைத் தயாரித்துக் கொண்டு வருவோம்.

தேவைப் பட்டால் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து விட்டு வருவோம்.

நம் மனதை எப்போதும் பரிசுத்தமாக வைத்திருப்பதற்காகத்தான் இந்த செபம் திரு விருந்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது. 

நற்கருணை நாதர் நமக்குள் வந்தவுடன்,

"ஆண்டவரே, என் ஆன்மீக வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன.

எனக்கு அவை பெரியவை.

ஒரு சொல்லால் உலகைப் படைத்த உமக்கு அவை
 ஊதி விட்டால் பறந்து போகும் தூசி போன்றவை.

ஆகவே ஒரு வார்த்தை சொல்லும். உமது அடியான் நான் முற்றிலும் குணமாவேன்."

இதை எப்போதும் சொல்லக்கூடிய மனவல்லப செபமாகவும் பயன்படுத்தலாம்.

"வார்த்தையான இயேசுவே, உமது வார்த்தையால் எனக்கு சுகம் தாரும்.

இயேசுவே, உமது வார்த்தையால் என்னை வழி நடத்தும்."

ஒவ்வொரு வினாடியும் நாம் நமது உள்ளத்தில் இயேசுவை வரவேற்கத் தயாராக இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment