Friday, September 13, 2024

" ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?". (மாற்கு நற்செய்தி 8:36)




"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"
(மாற்கு நற்செய்தி 8:36)



காலை 10 மணிக்குத் திருமணம்.

அருள் அவருடைய அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளுடன் காலை எட்டு மணிக்கே திருமணத்திற்குப் போவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்.

போகிற வழியில் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு போஸ்ட்டரைப் பார்த்து விட்டு,

அப்பாவிடம்,    "அப்பா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது.

நீங்கள் கல்யாண வீட்டுக்குப் போங்கள். நான் வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.''

"அப்படி என்ன வேலை?"

"போஸ்ட்டரைப் பாருங்கள். இன்று ரஜினி படம் ரிலீஸ்.

முதல் நாளில் முதல் ஆளாக இருந்து படம் பார்ப்பது என் வழக்கம்.

நீங்கள் போங்கள். நான் படம் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்."

"படம் எத்தனை மணிக்கு?"

"பத்தரைக்கு ஆரம்பிக்கும். ஒரு மணிக்கு முடியும்."

"ஏண்டா கொஞ்சமாவது அறிவு இருக்கா?

10 மணிக்கு பொண்ணு கழுத்ல தாலி கட்டணும்.

நீ மேட்ணி பார்த்து விட்டு ஒரு மணிக்கு வருவேன்னு சொல்ற!"

" சாரிப்பா. போஸ்டர்ல ரஜினி படத்தைப் பார்த்தவுடனே நான் கல்யாண மாப்பிள்ளைங்கிறதே மறந்து போச்சு."

"என்ன அப்பாவும் மகனும் குசுகுசுன்னு பேசுறீங்க?

பேசறத கொஞ்சம் சத்தமாகத்தான் பேசுங்களேன்." அம்மா.

"சினிமா போஸ்டரைப் பார்த்தவுடன் ரஜினி கழுத்துல தாலி கட்டட்டுமான்னு கேட்கிறான்."

"சினிமாக் கிருக்கன் "

"ரஜினி படத்தைப் பார்த்தவுடனே தான் கல்யாண மாப்பிள்ளை என்பதை மறந்து விட்டான்."

சில கிறித்தவர்கள் உலகப் பொருட்களைப் பார்த்தவுடன் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

நமது ஆன்மா படைக்கப்படும் போதே திருமண நிச்சயதார்த்தத்துடன் தான் படைக்கப் படுகிறது.

மணமகள் ஆன்மா.
மணமகன் இயேசு.

திருமணம் நடைபெற வேண்டிய இடம் விண்ணகம்.

உலகம் விண்ணக வீட்டுக்குச் செல்லும் வழி.

திருச்சபை வழித்துணை.

மணமகளாகிய ஆன்மா மணமகனாகிய இயேசுவின் ஞாபகமாகவே பயணிக்க வேண்டும்.

திருச்சபையின் வழிநடத்துதலின் படி பயணிக்க வேண்டும்.

ஆன்மா வழியில் நடமாடும் சாத்தானிடம் தன்னைப் பறி கொடுத்து விடக்கூடாது.

பாவ வாழ்க்கை தான் சாத்தான்.

மனிதன் உலகில் படைக்கப் பட்டிருப்பது விண்ணக வாழ்வுக்காக.

நிரந்தரமாக உலகில் வாழ்வதற்காக அல்ல.

நம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிற நமது ஆன்மாவை  விண்ணகம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை.

ஆன்மாவின் நோக்கத்தை மறந்து 

மனிதன் இவ்வுலகில் பணம் ஈட்டுவதிலும், 

சொத்துக்களைச் சேர்ப்பதிலும்,

 சிற்றின்பத்தை அனுபவிப்பதிலும்

 தனது முழு வாழ்க்கையையும் செலவழித்தால் 

அவன் வாழ்ந்தும் பயனில்லை.

அவன் ஈட்டும் பணமும், சேர்க்கும் சொத்தும் ஆன்மீக வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். 

அவற்றின் உதவியோடு பிறர் அன்புப் பணிகளைச் செய்யும்போது நமது ஆன்மா அருள் வாழ்வில் வளர்கிறது.

மாறாக சிற்றின்ப  அனுபவத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டால் ஆன்மா நிலைவாழ்வை இழக்க நேரிடும்.

நிலை வாழ்வை இழக்க நேரிட்டால் உலக வாழ்க்கையால் எந்த பயனும் இல்லை.

அனுபவிக்க மட்டும் மனிதன் ஈட்டும் உலகப் பொருட்கள் அவனுக்குத் தற்காலிக இன்பத்தைத் தரலாம்.

ஆனால் நித்திய பேரின்பத்தைப் பறித்து விடும்.

இறையன்பிலிருந்து பிரித்து விடும்.

ஈட்டியதை இழந்து விடுவோமோ என்ற பயத்துடன் வாழவைக்கும்.

ஆகவே உலகப் பொருட்களை ஈட்டுவதில் காட்டும் ஆர்வத்தை

இறையருளை ஈட்டுவதில் காட்டுவோம்.

பொருளில் அல்ல,

அருளில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment