Tuesday, September 24, 2024

"இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்றார். (லூக்கா நற்செய்தி 9:48)

அவர்களிடம், "இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 9:48)

பிறரன்பின் அவசியத்தை வித்தியாசமான சமயங்களில்,

வித்தியாசமான கோணங்களிலிருந்து 

இயேசு நமக்கு வலியுறுத்துகிறார்.

குழந்தைகள் வயதளவில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள்தான் பெரியவர்கள்.

இயேசு அனைவரையும் நேசித்தாலும் குழந்தைகளை விசேஷமான விதமாக நேசிக்கிறார்.

நாம் கடவுளை நேசிக்க வேண்டும்.

கடவுளை நேசித்தால் அவரை நமக்கு உரியவராக ஏற்றுக் கொள்வோம்.

கண்ணால் காண முடியாத கடவுளை ஏற்றுக் கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.

குழந்தைகளை நமது கண்களால் பார்க்க முடியும்.

குழந்தைகளை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவையே ஏற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளை நேசிப்பவர்கள் இயேசுவையே நேசிக்கிறார்கள்.

இயேசுவே நேசித்து ஏற்றுக் கொள்பவர்கள் அவரது தந்தையையே நேசித்து ஏற்றுக் கொள்கிறார்கள்.

கண்ணால் காணக்கூடிய குழந்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனால் காண முடியாத கடவுளை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவேதான் இயேசு,

"இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். 

என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்."
என்று கூறுகிறார்.

குழந்தைகளை ஏற்றுக் கொள்வது எப்படி?

ஒவ்வொரு இல்லத்திலும் சிறுவர்கள் இருக்கிறார்கள்.

திருமணத்தின் நோக்கமே குழந்தைப்பேறும், குழந்தைகளை வளர்ப்பதும்தான்.

நாம் பெற்ற குழந்தைகளை நாம் ஏற்றுக் கொண்டால் அவர்களை நல்லவர்களாக, இறைவனுக்கு ஏற்றவர்களாக வளர்ப்போம்.

அதாவது நாம் குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதமாக வளர்க்காவிட்டால் அவர்களை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சிறு பருவத்திலிருந்தே அவர்களை அன்பு, பிறருக்குக் கொடுத்தல், நன்றியுணர்வு, செபம், பொறுமை போன்ற பண்புகளில் வளர்க்க வேண்டும்.

அப்படி வளரும் குழந்தைகள் தான் விண்ணக வீட்டுக்கு ஏற்றவர்களாக வளர்வார்கள்.

அப்படி வளர்க்காமல் தான்தோன்றித் தனமாக வளர்க்கும் பெற்றோர் பிள்ளைகளை இறைவனுக்கு எதிரிகளாக வளர்க்கிறார்கள்.

அவர்கள் பிள்ளைகளை உண்மையாக நேசிக்கவில்லை.

அப்படி வளர்ப்பது பிள்ளைகளை பாவத்துக்கு இட்டுச்செல்லும்.

பாவம் ஆன்மீக நோய்.

பிள்ளைகளை நோயாளிகளாக வளர்ப்பவர்கள் உண்மையான பெற்றோர் அல்ல.

தங்கள் பிள்ளைகளை மட்டுமல்ல மற்ற பிள்ளைகளையும் ஆன்மீகப் பார்வையுடன் நோக்க வேண்டும்.

அவர்களோடு பழகும் போது முன்மாதிரிகையாகப் பழக வேண்டும்.

நம்முடன் பழகும் எந்தக் குழந்தைகளும் நல்லவர்களாக வளர‌ வேண்டும்.

இயேசு குழந்தைகளின் நண்பர்.

நாமும் குழந்தைகளோடு இயேசுவாகப் பழக வேண்டும்.

"உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்."

"கடைசியானவர்கள் முதலானவர்கள்.

பணிவிடை செய்பவர்கள் தலைவர்கள் ஆவர்"  

என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கும் பிரதிபலிக்கின்றன.

ஆன்மீகத்தில் ஒருவரது பரிசுத்தத்தனத்தின் அளவுதான் அவர் எந்த அளவுக்குப் பெரியவர் என்பதைத் தீர்மானிக்கிறது.

அருள் நிறைந்த மரியாள் தான் விண்ணக மண்ணக அரசியானாள்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

அன்னை மரியாளை,

"அருள் மிகப் பெற்ற மரியே" என்று அழைப்பவர்கள்

தங்களைத் திருத்திக் கொண்டு,

"அருள் நிறைந்த மரியே."
என்று அழைக்க வேண்டும்.

அன்னையை மதிப்புக் குறைந்த வார்த்தைகளால் அழைப்பது நான்காவது கட்டளைக்கு எதிரானது.

சிறியவர்கள் ஏன் பெரியவர்கள்?

சிறுவர்கள் மாசு மறு அற்றவர்கள். கள்ளங்கபடு இல்லாதவர்கள். உள்ளதை உள்ளபடியே சொல்லக் கூடியவர்கள்.

வயதில் வளர வளர இத்தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே வருகின்றன.

வயது வளர வளர பரிசுத்தத்தனம் குறைந்து கொண்டே வருகிறது.

ஞானஸ்நானம் பெற்ற சிறு குழந்தை மரிக்க நேர்ந்தால் அதன் ஆன்மா நேரடியாக மோட்சத்துக்குச் சென்று விடும்.

பெரியவர்கள் இறந்தால் உத்தரிக்கிற வழியாகவே செல்ல வேண்டும்.

ஆகவேதான் கடவுளின் முன்னால் 

சிறியவர்கள் பெரியவர்கள்.
பெரியவர்கள்  சிறியவர்கள்.

அதற்காக நம்மால் வயதில் வளராமல் இருக்க முடியுமா?

முடியாது.

ஆனால் முயற்சி செய்தால் பரிசுத்தத் தனத்தில் வளரலாம்.

அது கடினமா?

இல்லவேயில்லை.

இலேசானது மட்டுமல்ல, இனிமையானதும் கூட.

அன்பு செய்வதைவிட இனிமையான செயல் வேறு என்ன இருக்கிறது?

கடவுளை அன்பு செய்வோம்.
அயலானை அன்பு செய்வோம்.

அன்புக்கு எதிரான எதையும் செய்யாதிருப்போம்.

அன்பு செய்து கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

Love, and do as you like.
(St. Augustine)

அதாவது என்ன செய்தாலும் அதில் அன்பு இருக்க வேண்டும்.

இறைவனை நேசிப்போம்.
அயலானை நேசிப்போம்.

பாவமற்ற தன்மையில் சிறியவர்களாகவே இருப்போம்.

மோட்சத்தில் நாம் பெரியவர்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment