Tuesday, September 10, 2024

'மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."(லூக்கா நற்செய்தி 6:22)


" மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்."
(லூக்கா நற்செய்தி 6:22)

இறைமகன் மனுமகனாகப் பிறந்த போது அவரால் படைக்கப்பட்டவர்களில் அவரை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள்,

ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருந்தார்கள்.

சாதாரண பாமர மக்கள் அவரைக் குணமளிப்பவராகவும் மீட்பவராகவும், மெசியாவாகவும் ஏற்றுக் கொண்டார்கள்.

அவர் சென்ற இடமெல்லாம் அவரது நற்செய்தியைக் கேட்கவும், நோய்களிலிருந்து குணம் பெறவும் ஏராளமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

ஆனால் அதிகார வர்க்கத்தினராகிய பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் எங்கே தங்கள் அதிகாரமும், செல்வாக்கும் பறிபோய்விடுமோ எனப் பயந்து அவரை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

மறுத்தது மட்டுமல்ல அவரது பாடுகளுக்கும் சிலுவை மரணத்துக்கும் காரணமாக இருந்தார்கள்.

ஆனால் இயேசு தனது மரணத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்.

தனது பாடுகளையும் சிலுவை மரணத்தையும் நமது பாவங்களுக்குப் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

தாயைப் போல பிள்ளை,
குருவைப் போல சீடர்கள்.

இயேசுவைக் குருவாக ஏற்றுக் கொண்ட அன்றைய சீடர்களும் சரி, இன்றைய சீடர்களும் சரி,

இயேசுவைப் பிடிக்காதவர் களிடமிருந்து இயேசுவுக்குக் கிடைத்ததையே எதிர் பார்க்க வேண்டும்.

அவர்கள் நம்மை வெறுத்து, ஒதுக்கும்போதும், 

நம்மைப் பொல்லாதவர்கள் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போதும்

நாம் பேறுபெற்றவர்கள்.

ஏனெனில் கடவுளுக்குக் கிடைத்தது நமக்கும் கிடைக்கிறது.

இயேசுவுக்குக் கிடைத்த‌ வெறுப்பும்,  அவமரியாதையும் அவருடைய சீடர்கள் என்பதால் நமக்கும் கிடைக்கும்.


அதோடு இயேசு வாழும் விண்ணுலகில் நமக்கும் இடம் கிடைக்கும்.

அவரைப் போல வாழ்ந்ததற்கு நமக்குக் கிடைக்கும் கைம்மாறு நித்திய பேரின்ப வாழ்வாக இருக்கும்.

இவ்வுலகில் இயேசுவைப் போல் சிலுவையைச் சுமந்து வாழ்ந்தால் மறுவுலகில் அவரோடு ஒன்றித்து நித்திய காலமும் பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

இயேசுவின் பொருட்டு நாம் பிறரால் வெறுக்கப் படவும், துன்புறுத்தப் படவும் நேர்ந்தால் 

நாம் துள்ளி மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்று ஆண்டவர் சொல்கிறார்.

"தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது."
(லூக்கா நற்செய்தி 14:27)


 "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்."
(மத்தேயு நற்செய்தி 2:3)

இவை குழந்தை இயேசுவைப் பார்க்க வந்த மூன்று அரசர்களின் வார்த்தைகள்.

இயேசு அரசர்.

அவர் பிறந்த அரண்மனை மாட்டுத் தொழுவம்.

அரசரைப் பெற்ற பேரரசி ஒரு தச்சுத் தொழிலாளியின் மனைவி.

அரசர் வளர்ந்தது நாசரேத்திலிருந்த தச்சுப் பட்டறை.

அவர் ஆட்சி செய்தது பாவிகளின் ஆன்மாக்கள்.

அவரது சிம்மாசனம் கல்வாரிச் சிலுவை.

அவரது ஆபரணங்கள் மூன்று ஆணிகளாலும் ஒரு ஈட்டியாலும் குத்தப்பட்ட ஐந்து காயங்கள்.

எந்த உலக அரசனும் தனது குடிமக்கள் தன்னைப் போல் அரசாங்கத் தோரணையுடன் வாழ வேண்டும் என்று ஆசைப் பட மாட்டான்.

ஆனால் இயேசு அரசர் ஆசைப்படுகிறார்.

அவருடைய குடிமக்களாகிய நாம் அவருடைய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அவரைப் போலவே அவரது சிம்மாசனமாகிய சிலுவையை நாமே சுமந்து சென்று அவருடைய தோரணையில் நாம் அதில் அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

கல்வாரி வரையில் சிலுவையைச் சுமந்து சென்ற இயேசு கல்வாரியில் சிலுவையோடு ஒன்றித்து விட்டார்.

நாம் இயேசுவோடு ஒன்றிக்க வேண்டுமா?

சிலுவையோடு ஒன்றிக்க வேண்டும்.

சிலுவையோடு ஒன்றிக்காமல் இயேசுவோடு ஒன்றிக்க முடியாது.

இயேசுவின் சிலுவைப் பாதையில் அன்னை மரியாளும் உடன் நடந்தாள்.

நாமும் இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்தால் அன்னை மரியாளும் நம்முடன் வருவாள்.

கல்வாரிச் சிலுவை சிம்மாசனம் அருகில் அன்னை மரியாளும் நின்றாள்.

நாம் சிலுவையோடு வாழும்போது அன்னை மரியாளும் நம்முடன் வாழ்வாள்.

அன்னை மரியாளையும், இயேசுவையும், சிலுவையையும் பிரிக்க முடியாது.

நாம் சிலுவையைச் சுமந்து வாழ்ந்தால் நம்மையும், இயேசுவையும், மரியாளையும் பிரிக்க முடியாது, நித்திய காலமாக.

துள்ளிக் குதித்து மகிழ்ச்சியுடன் சிலுவையைச் சுமப்போம்,

விண்ணகக் கல்வாரிக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment