"புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.
(லூக்கா நற்செய்தி 10:3)
தந்தை தன் மகனுக்கு ஏதாவது ஒரு பணியைக் கொடுக்கும் போது
அதைச் செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்லி விடுவது வழக்கம்.
அப்போதுதான் எதிர்பார்த்த பிரச்சினைகளைச் சந்திக்கும் போது பணி செய்பவர்க்கு மனச் சோர்வு ஏற்படாது.
நமது ஆண்டவர் தனது சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது,
"ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்."
என்று கூறுகிறார்.
"நீங்கள் செய்யப் போகும் பணி பஞ்சு மெத்தையில் படுத்து உறங்குவது போல் இருக்காது.
முட்செடிகள் மேல் செருப்பு இல்லாமல் நடப்பது போலிருக்கும்.
நீங்கள் நற்செய்தி அறிவிக்கப் போகும் மக்கள் உங்களை வரவேற்று உபசரித்து வாழ்த்தக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.
ஆடுகளைக் கடித்து உண்ணும் ஓநாய்களைப் போலிருப்பார்கள்.
நீங்கள் எதிர்ப்புகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடும்.
எனது சீடர்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் உழைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இறுதி வெற்றி உங்களுக்கு தான்."
நாம் இயேசுவின் சீடர்கள்.
நமது பணியும் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நற்செய்தி அறிவிப்பது தான்.
ஓநாய்களால் ஆடுகளுக்கு ஏற்படும் அத்தனையும் நமக்கும் ஏற்படும்.
"நற்செய்தியை அறிவியுங்கள் பார்ப்போம்" என்று சவால் விடுவார்கள்.
அடி, உதை, கொலை... ஆண்டவர் சந்தித்த அத்தனையையும் சந்திக்க நேரிடும்.
நாம் வழிபாடு செய்யும் ஆலயங்கள் இடிக்கப் படலாம்.
இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்?
தைரியத்தோடு செயல்பட வேண்டும்.
ஒரு வீடு பற்றி எரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.
தகப்பனார் வெளியே.
குழந்தை உள்ளே.
குழந்தையைக் காப்பாற்ற தந்தை எப்படிச் செயல்படுவார், நாம் அப்படிச் செயல்பட வேண்டும்.
நோக்கம் மட்டும் நம் கண் முன் இருக்க வேண்டும்.
செயல்பாட்டின் போது ஏற்படும் துன்பங்கள் துன்பங்களாகத் தெரியக்கூடாது.
போர்க்களத்தில் வீரன் எதிரிகள் மேல் மட்டும் கண்ணாய் இருப்பான்.
தன் மீது பாயும் குண்டைப் பற்றிக் கவலைப் பட மாட்டான்.
நற்செய்தி அறிவிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.
நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கவலைப் படக் கூடாது.
மரணத்தால் கூட நம்மைத் தடுக்க முடியக் கூடாது.
"வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து."
ஒரு மரணத்தால் ஆயிரம் பேரை மனம் திருப்ப முடியும்.
வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு செயல் புரிய வேண்டும்.
எல்லாம் வல்ல கடவுள் நம் பக்கம் இறுக்கும் போது நம்மைத் தோற்கடிக்க யாரால் முடியும்?
கடவுள் நம்மை வழி நடத்துகிறார்.
கடவுள் நம்மை இடறி விழாமல் காப்பாற்றுகிறார்.
கடவுள் நம்மைப் பாதுகாக்கிறார்.
கடவுள் நமக்குத் தைரியத்தைத் தருகிறார்.
கடவுள் எதிரிகளின் சவால்களைச் சமாளிக்க நமக்கு உதவுகிறார்.
ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.
நாம் செயல்புரிவது பரிசுத்த தம திரித்துவத்தின் பெயரால்.
தந்தையின் சித்தப்படி மகன் நம்மை அனுப்புகிறார்.
தூய ஆவி நம்மை வழி நடத்துகிறார்.
மூவொரு கடவுள் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?
கடவுளின் துணையுடன் நற்செய்தியை வாழ்வோம்.
கடவுளின் துணையுடன் நற்செய்தியை அறிவிப்போம்.
கடவுளின் துணையுடன் வெற்றி பெறுவோம்.
நம்முடன் நம்மால் நற்செய்தி அறிவிக்கப்பட்ட அனைவரும் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment