உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்.
(லூக்கா நற்செய்தி 11:41)
பரிசேயர்கள் காரண காரிய தொடர்பு இல்லாமல் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அவர்கள் சாப்பிடுமுன் கை கழுவ வேண்டும். இது ஒரு சடங்கு.
காரணம், சுத்தமாக்குதல்.
காரியம், கை கழுவுதல்.
மனிதனுக்கு வெளியில் தெரியக்கூடிய உடல் மட்டுமல்ல,
ஊனக்கண்ணால் பார்க்க முடியாத ஆன்மாவும் இருக்கிறது.
சாப்பிடுமுன் கை கழுவுவது வெளிப்புற சுத்தத்திற்காக.
மனிதன் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால்
உட்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும், வெளிப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
வெளிப்புற சுத்தத்தை நோக்கமாகக் கொண்டு கை கழுவுவது போல,
உட்புறச் சுத்தத்திற்காகவும் செய்யவேண்டியதைச் செய்ய வேண்டும்.
ஆனால் அவர்கள் ஆன்மாவின் சுத்தத்துக்காக எதுவும் செய்யவில்லை.
ஆகையால்தான் அவர்கள் காரண காரியத் தொடர்பின்றி சடங்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றேன்.
இறை வசனத்தைத் தியானிப்போம்.
"உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்."
உட்புறம் என்றால் என்ன?
உட்புறம் மனிதனின் உள்ளத்தை குறிக்கிறது.
நமது ஐம்புலன்கள் நமது வெளிபுறத்தை உருவாக்குவது போல
நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், மற்றும் நோக்கங்கள் ஆகியவை நம்முடைய உட்புறத்தை உருவாக்குகின்றன.
உருவம் இல்லாத கருத்துகளாகிய (Concepts) எண்ணங்கள், உணர்வுகள், நோக்கங்கள் ஆகியவற்றின் உறைவிடம் நமது உள்ளம்.
மனிதன் பரிசுத்தமானவனாக இருக்க வேண்டுமென்றால் அவனது உள்ளம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
வெளிப்புற சுத்தம் மட்டும் அவனைப் பரிசுத்தமானவனாக மாற்றாது.
தர்மம் என்றால் என்ன?
நம்மிடம் உள்ளவற்றைத் தாராளமாக பகிர்ந்து கொள்வதுதான் தர்மம்.
பணத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தர்மம் அல்ல.
மற்றவர்களுக்கு உதவுவதற்காக நம்முடைய நேரத்தையும் திறமைகளையும் பகிர்ந்து கொள்வதும் தர்மம் தான்.
இவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால்
நமது எண்ணங்களும், உணர்வுகளும், நோக்கங்களும் ஒத்துழைக்க வேண்டும்.
முதலாவது பகிர்ந்து கொள்ள எண்ண வேண்டும், அதாவது, விரும்ப வேண்டும்.
பகிர்ந்து கொள்வதன் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும்.
மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு உதவுவது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
மகிழ்ச்சியான உணர்வுகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நமது உட்புறம் பரிசுத்தமானதாக இருந்தால் நமது பகிர்வு மற்றவர்களையும் பரிசுத்தமானவர்களாக மாற்றும்.
நமது நேரத்தையும், திறமைகளையும் மற்றவர்களை
பரிசுத்தமானவர்களாக மாற்றுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
"அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்."
நமது தூய்மையான எண்ணங்களையும், உணர்வுகளையும், நல்ல நோக்கத்தோடு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது
நமது உள்ளும் புறமும் மட்டுமல்ல, மற்றவர்களுடைய உள்ளும் புறமும் தூய்மையாகும்
ஆனால் நமது உள்ளத்தில் உள்ள எண்ணங்களும், உணர்வுகளும், நோக்கங்களும் பாவகரமானவைகளாக இருந்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நம்மைப் போல ஆக்கி விடுவோம்.
ஆகவே நமது வெளிப்புறத்தை மட்டுமல்ல, உட்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பரிசேயர்கள் பல வெளிப்புறச் சடங்குகளை கடைபிடித்தாலும்,
அவர்களின் உள்ளம் தூய்மையாக இல்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.
வெளிப்புறச் சுத்திகரிப்பை விட உட்புறச் சுத்திகரிப்பே முக்கியம்.
நாம் வெளியில் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும், நம் உள்ளத்தில் பொறாமை, கோபம், பொய் பேசுதல் போன்ற பாவங்கள் இருந்தால், நாம் உண்மையிலேயே தூய்மையானவர்களாக இருக்க முடியாது.
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல் மிகவும் முக்கியம்.
தர்மம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்:
நாம் தர்மம் செய்யும் போது, நம் உள்ளத்தில் உள்ள சுயநலம், பொறாமை போன்ற குணங்கள் குறையும்.
அதற்கு பதிலாக, நம் உள்ளத்தில் கருணை, அன்பு, மற்றும் இரக்கம் போன்ற நல்ல குணங்கள் வளரும்.
உள்ளம் தூய்மையானவர்கள், தூய்மையான வாழ்க்கையை வாழ்வார்கள்.
அவர்கள் மற்றவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்துவார்கள்,
சமூகத்திற்கு நன்மை செய்வார்கள்,
மேலும் கடவுளுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவார்கள்.
சுருக்கமாகச் சொன்னால்
நமக்கு வெளிப்புறச் சுத்திகரிப்பை விட உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதே முக்கியம்.
தர்மம் செய்வதன் மூலம் நாம் நம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி,
ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழ்வோம்.
"தர்மம் தலை காக்கும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment