யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.
(லூக்கா நற்செய்தி 11:30)
இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இயேசுவின் போதனையை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள், ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருந்தார்கள்.
ஏற்றுக் கொள்ளாதவர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தான் சரியான போதகர் என்று நிரூபிக்க அடையாளம் காட்ட வேண்டும் என்று கேட்டார்கள்.
இயேசு பழைய ஏற்பாட்டுத் தீர்க்கத்தரிசி யோனாவைத் தனக்கு அடையாளமாகக் கோடுக்கிறார்.
யோனா கடலுக்குள் எறியப்பட்ட போது ஒரு பெரிய மீன் அவரை விழுங்கி விட்டது.
யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.
மூன்றாவது நாள் மீன் அவரைக் கரையில் கக்கி விட்டது.
" யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்."
என்று இயேசு கூறுகிறார்.
மூன்றாம் நாள் கக்கப்பட்ட யோனாவின் போதனையை நம்பி நினிவே நகர மக்கள் மனம் திரும்பினார்கள்.
யோனாவை அடையாளமாகக் காட்டியதன் மூலம் இயேசு தனது மரணத்தையும், அடக்கத்தையும், மூன்றாம் நாள் உயிர்க்கப் போவதையும் முன்னறிவிக்கிறார்.
இயேசு போதிக்கும் போது நம்பாதவர்கள் அவரது உயிர்ப்பைப் பார்த்த பிறகாவது அவருடைய வார்த்தைகளை ஏற்று மனம் திரும்ப வேண்டும்.
யோனா நினிவே நகர மக்களை மனம் மாறச் செய்தார்.
இயேசுவும் மக்கள் மனம் மாறவே போதிக்கிறார்.
இயேசுவின் போதனையை மக்கள் ஏற்றுக் கொண்டு, மனம் திரும்பி, இறை அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நினிவே நகர மக்கள் யோனாவின் வார்த்தைகளை நம்பி,
சாக்கு உடை உடுத்தித் தவம் செய்ததோடு
தங்களை மன்னிக்கும்படி கடவுளை நோக்கி மன்றாடினார்கள்.
தம் தீய வழிகளையும், தாம் செய்துவந்த கொடுஞ்செயல்களையும் விட்டொழித்தார்கள்.
கடவுளும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
இயேசுவின் போதனையைக் கேட்பவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும்.
கடவுள் இரக்கமுள்ளவர்.
நாம் பாவம் செய்தாலும் மனம் திரும்பி மன்னிப்புக் கேட்க கால அவகாசம் கொடுக்கிறார்.
அதை மனம் திரும்பவும் மன்னிப்புக் கேட்கவும் பாவப் பரிகாரம் செய்யவும் நாம் பயன்படுத்த வேண்டும்.
கால அவகாசம் கொடுத்ததற்காக நன்றி கூற வேண்டும்
பாவ வாழ்க்கையை விட்டதோடு நின்று விடாமல் புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.
நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து,
நம்மை மன்னிக்க
மனிதனாகப் பிறந்த இயேசு நமக்கு எல்லா வகையிலும் முன்மாதிரிகையாக வாழ்ந்தார்.
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
(மத்தேயு நற்செய்தி 5:3)
என்று நமக்குப் போதித்த இயேசு,
நமக்கு முன்மாதிரிகையாக அவரே ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து,
ஏழையாக மரித்தார்.
பகைவர்களை நேசியுங்கள் என்று போதித்த இயேசு
தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்து நமக்கு முன் மாதிரிகை காட்டினார்.
உலக இறுதியில் மரித்தோர் அனைவரும் உயிர்ப்பர் என்பதை நாம் நம்பும் பொருட்டு அவரே மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.
அவர் உயிர்த்தது அவர் இறைவன் என்பதற்கு ஆதாரம்.
உலகைச் சார்ந்ததாகிய நமது உடல் (Material body)விண்ணகம் செல்வதற்காக ஆன்மீக உடலாக
(Spiritual body) மாறி உயிர்க்கும்.
ஆகவே நமது உடலுக்கு உரிய மரியாதையைக் கொடுப்போம்.
அதைப் பாவம் செய்யப் பயன்படுத்தாமல் புண்ணிய வாழ்வு வாழப் பயன்படுத்துவோம்.
இயேசு தனது பரிசுத்தமான உடலை நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் பயன்படுத்தினார்.
தவ முயற்சிகள் செய்வதன் மூலம் நாமும் நமது உடலைப் பாவப்பரிகாரம் செய்யப் பயன்படுத்துவோம்.
தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆன்மாவுக்கு அது செய்யும் நன்றிக் கடனாக இருக்கட்டும்.
இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து விண்ணகம் சென்றது போல
நமது உடலும் உலக இறுதி நாளில் உயிர்த்து விண்ணகம் செல்ல அதை வாழ்த்துவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment