Friday, October 4, 2024

" கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.". (எபிரேயர் 2:10)

" கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே."
(எபிரேயர் 2:10)

இறை வசனத்தைக் கருத்துக்களின் அடிப்படையில் பிரித்து தியானிப்போம்.

"கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார்."

"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தனை வணங்க."

கடவுள் அனைத்து சூரிய நட்சத்திரக் கூட்டங்கள் உட்பட்ட பிரபஞ்சத்தைப் படைத்துவிட்டு இறுதியில் மனிதனைப் படைத்தார்.

பிரபஞ்சத்தை எதற்காகப் படைத்தார்?

மனிதனுக்காக. பிரபஞ்சத்தைப் பார்த்து அதைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து, அவர்தான் தன்னையும் படைத்தார் என்பதை மனிதன் புரிந்து கொள்வதற்காக.

மனிதனை எதற்காகப் படைத்தார்?

அவரை அறிந்து, அவரை அன்பு செய்வதற்காக.

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்வதற்காக.

அன்பு செய்கின்ற அவரை அன்பு செய்வதற்காக.

தமிழ் நாட்டில் குலத் தொழில் என்ற சொற்றொடர் உண்டு.

தந்தை செய்யும் தொழிலையே மகனும் செய்வது.

நம்மைப் படைத்த கடவுளாகிய தந்தையின் தொழிலையே நாமும் செய்வது நமது குலத்தொழில்.

கடவுள் என்ன தொழில் செய்கிறார்?

நித்திய காலமாக அன்பு செய்கிறார்.

அன்பு செய்வதற்காகவே நம்மைப் படைத்தார்.

அவர் நித்திய காலமும் அன்பு செய்வது போல, நாம் வாழ்நாள் முழுவதும் அன்பு செய்ய வேண்டும்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்ய வேண்டும்.

அதற்கு உதவிகரமாக இருப்பதற்காகவே நாம் வாழும் பிரபஞ்சம்.

ஆக, நாம் உட்பட பிரபஞ்சம் முழுவதையும் கடவுள் 
தானே, தனக்காகவே படைத்தார்.

நாம் வாழும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களை இறைவனுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.

நாம்தான் பயன்படுத்த வேண்டும், ஆனால் சுய மகிழ்ச்சிக்காக அல்ல, கடவுளின் மகிமைக்காக.

நாம் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாதா?

இருக்க வேண்டும், ஆனால் நமது மகிழ்ச்சியைக் கடவுளின் மகிமைக்காக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

கடவுள் தான் உலகைப் படைத்தார்,

கடவுள் தான் அதைக் காப்பாற்றுகிறார்,

கடவுள் தான் அதை ஆள்கிறார்.

அவரது தெய்வீகமும், இறையாண்மையும் அவரது படைப்புகள் அனைத்திலும் பிரதிபலிக்கின்றன.

ஆகவே அனைத்தும் அவரது மகிமைக்காகவே.


"அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது"

கடவுள் தமது தந்தை,  நாம் அவரது மக்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மக்களை ஏதாவது ஒரு குறிக்கோளை நோக்கமாக வைத்துதான் வளர்ப்பார்கள், அதற்கான பயிற்சியைக் கொடுப்பார்கள்.

நிலபுலன்கள் நிறைய உள்ளவர்கள் பயிர்த்தொழிலை நோக்கமாக வைத்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் பயிற்சி கொடுத்து வளர்ப்பார்கள்.

டாக்டர் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அத்தொழிலை மையமாக வைத்து வளர்ப்பார்கள்.

நித்திய பேரின்ப மகிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் 

அவரது மக்களாகிய நம்மை

 நித்திய பேரின்பத்தையும்,
அவரது மாட்சிமையையும், அதாவது, மகிமையையும் மையமாக வைத்தே  

பராமரித்து வருகிறார்.

அவரது நித்திய பேரின்பத்திலும், மாட்சியிலும் பங்குகொள்ள அழைத்துச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு நம்மைப் பராமரித்து வருகிறார்.

அதாவது நமது வாழ்வின் நோக்கம் விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வது.

மகிமையோடு வாழும் இறைவனோடு ஒன்றித்து வாழ்வது.


"அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரை"

அவரது மக்களாகிய நாம் பாவம் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதிலிருந்து விடுதலை பெற்று புண்ணிய வாழ்வில் வளர்ந்தால் தான் நம்மால் விண்ணகப் பேரின்ப வாழ்வில் பங்கு பெற முடியும்.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக தந்தை இறைவன் தன் ஒரே மகனை பூமிக்கு அனுப்பினார்.


"துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார்."

தந்தையால் அனுப்பப்பட்டு மண்ணகம் வந்த இறைமகன் தனது பாடுகளின் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும் நம்மை மீட்டார்.

நம்மை மீட்பதற்காக அவர் வாழ்ந்த வாழ்வு துன்பங்கள் நிறைந்த வாழ்வு.

வாக்கிய அமைப்பைப் பாருங்கள்,

"துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார்."

நம்மைப் படைத்த தந்தை நம்மை மீட்பின் அருளால் நிரப்புவதற்காக 

தனது ஒரே மகனின் வாழ்வைத்
துன்பங்களால் நிரப்பினார்.

நமக்கு நித்திய பேரின்ப வாழ்வைப் பெற்றுத் தர

இறைமகன் வேதனை மிகுந்த பாடுகளை ஏற்றுக் கொண்டார்.

இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பிரசவ வலி இல்லாமல் பிள்ளை இல்லை.

கடின உழைப்பு இல்லாமல் வெற்றி இல்லை.

புனித வெள்ளி இல்லாமல் உயிர்த்த ஞாயிறு இல்லை.

சிலுவை இல்லாமல் மீட்பு இல்லை.

துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை.

ஆகவே நமது வாழ்வில் துன்பங்கள் வரும்போது நாம் கவலைப் படக்கூடாது.

அதை விண்ணகத்துக்கு ஏற்றிவிடும்‌ ஏணியாக ஏற்று மகிழ வேண்டும்.


"இது ஏற்ற செயலே."


இயேசு அனைத்தையும் படைப்பவராகவும் பராமரிப்பவராகவும் இருப்பதாலும், 

 நம்மை விண்ணக மகிமைக்குள் அழைத்துச் செல்பவராக இருப்பதாலும் 

நமது மீட்பின் வேலையை  நிறைவு செய்ய 

தான் துன்பங்களை ஏற்றுக் கொள்வது ஏற்ற செயல் என அவர் கருதி அவர் பாடுகள் பட்டு மரித்தார்.

துன்பங்களை ஏற்றுக் கொள்வது மீட்புக்கு ஏற்ற செயல் நாமும் கருதுவோம்.

வாழ்க்கைக் கடலில் புயல் வீசிக் கொண்டிருப்பதால்,

இராயப்பர் படகில் எவ்வளவு துன்பங்கள் நிறைந்திருந்தாலும்
அதில் ஏறிக் கரை சேர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment