Wednesday, October 2, 2024

"என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். (லூக்கா நற்செய்தி 10:22)

"என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார். 
(லூக்கா நற்செய்தி 10:22)

கிறிஸ்தவ வாழ்வின் மையம் 
பரிசுத்த தம திரித்துவம்.

மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

தந்தை, மகன், தூய ஆவி, மூன்று ஆட்கள்,
ஒரே கடவுள்.

மூவொரு கடவுள்.

இறைமகன் இயேசு தமதிரித்துவம் பற்றிய மறை உண்மையை ஒரே நேரத்தில் கேள்வி பதில் மூலமாக வெளிப்படுத்தவில்லை.

அதை வாழ்ந்து படிப்படியாக வெளிப்படுத்தினார்.

கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன நாளிலிருந்து, 

தூய ஆவி சீடர்கள் மீது இறங்கி வந்த நாள் வரை உள்ள

 நற்செய்தி அறிவிப்புக்குள் பயணம் செய்தால்தான்

 தமதிரித்துவம் பற்றிய மறை உண்மை முழுமையாக தெரியவரும்.


வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்."
லூக்கா நற்செய்தி 1:35

இந்த மங்கள வார்த்தை வசனம் தூய ஆவியைப் பற்றியும், இறை மகனைப் பற்றியும் வெளிப்படையாகக் 
குறிப்பிடுகிறது.

மகனைப் பற்றி குறிப்பிடும் போது தந்தையைப் பற்றி நாம் யூகித்துக் கொள்ளலாம்.

நாம் தியானிப்பதற்காக எடுத்துக் கொண்ட இன்றைய வசனம் பரிசுத்த தம திரித்துவத்தின் முக்கிய பண்புகளை வெளிப்படுத்துகிறது.


"என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்."

இந்த வார்த்தைகள் நமக்குப் புரிய வைப்பது 

மூன்று ஆட்களும் வெவ்வேறானவர்கள்.

தந்தை மகன் அல்ல, தூய ஆவியும் அல்ல.
(தந்தை மகனிடம் ஒப்படைத்த இருக்கிறார்)

மகன் தூய ஆவி அல்ல, தந்தையும் அல்ல.

தூய ஆவி தந்தையும் அல்ல, மகனும் அல்ல.

தந்தை முழுமையாகக் கடவுள்.
மகன் முழுமையாகக் கடவுள்.
தூய ஆவி முழுமையாகக் கடவுள்.

 மூவரும் சமமானவர்கள்.
(Three coequal and coeternal 
persons)

மூவரும் முழுமையாக ஒரே கடவுள்.

"தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்."

இந்த வார்த்தைகள் நமக்குப் புரிய வைப்பது,

 பரிசுத்த தம திரித்துவத்தின் ஆட்களின் உறவு பற்றிய விவரம் கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. 

தந்தையைப் பற்றி மகனுக்கும் தூய ஆவிக்கும் மட்டுமே தெரியும்.

மகனைப் பற்றி தந்தைக்கும் தூய ஆவிக்கும் மட்டுமே தெரியும். 

தூய ஆவியைப் பற்றி தந்தைக்கும் மகனுக்கும் மட்டுமே தெரியும். 

மூவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவர், ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

கடவுளைப் பற்றி அவருக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும்.

"மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும்."

இந்த வார்த்தைகள் நமக்குப் புரிய வைப்பது,

யாரும் சுயமாக அறிய முடியாத இந்த மறை உண்மையை மனிதனாகப் பிறந்த இறைமகன் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு அறிவித்தார். 

ஆகவே நமக்கு இப்போது தெரிகிறது. 

கடவுள் அளவில்லாதவர்.

நாம் அளவுள்ளவர்கள். 

அளவுள்ள நம்மால் அளவில்லாத கடவுளைப் பற்றிய மறை உண்மையை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது.

ஆனாலும் கடவுளே நமக்கு அதை வெளிப்படுத்தி இருப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

"வேறு எவரும் தந்தையை அறியார்" 

இந்த வார்த்தைகள் நமக்குப் புரிய வைப்பது,

இயேசுவையும், அவரது நற்செய்தியையும் அறிந்தவர்களை தவிர வேறு யாருக்கும்  தமதிரித்துவத்தின் மறை உண்மை தெரியாது.

இயேசுவின் நற்செய்தியை நாம் உலகோர் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்றும், 

நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் பரிசுத்த தமதிரித்துவத்தின் பெயரால் 
திருமுழுக்குக் கொடுக்க வேண்டுமெஎன்றும்

இயேசு நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்.

இயேசு கொடுத்த கட்டளைப்படி நாம் நற்செய்தியை அறிவிக்கிறோமா?

எப்படி அறிவிக்கிறோம்?

சொல் மூலமா, வாழ்க்கை மூலமா?

நாம் எதைச் செய்தாலும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் செய்ய வேண்டும்.

அதாவது தமதிரித்துவத்தை வாழ்ந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

தமதிரித்துவத்தை எப்படி வாழ்வது?

தந்தை மகன் தூய ஆவி எப்படி வாழ்கிறார்களோ
அப்படி வாழ்வது,

அதாவது 

இறைவன் எப்படி வாழ்கிறாரோ அப்படி வாழ்வது.

இறைவன் எப்படி வாழ்கிறார்.

தந்தையின் சிந்தனையில் நித்திய காலமாகப் பிறக்கும் வார்த்தையே மகன்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நித்திய காலமாக நிலவும் அன்புதான் தூய ஆவி.

கடவுள் என்றாலே அன்புதான்.

கடவுள் நித்திய காலமும் செய்யும் வேலை அன்பு செய்வது மட்டும்தான்.

தன்னைத் தானே அன்பு செய்வதோடு,

அன்பு செய்வதற்கென்றே படைத்த மனிதர்களையும் அன்பு செய்கிறார்.

சிந்தனையிலும் செயலிலும் அன்பாகவே வாழும் தமதிரித்துவத்தைப் போல

நாமும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு மட்டும் செய்து வாழ்வோம்.

அதுவே நற்செய்தி வாழ்வு.

அதுவே நற்செய்திப் பணி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment