அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
(மத்தேயு நற்செய்தி 5:9)
தாயைப்போல் பிள்ளை என்பார்கள்.
நாம் நம்மைப் படைப்பால் பெற்ற தந்தையின் பிள்ளைகள்.
நமது தந்தை சமாதானத்தின் தேவன்.
ஆகவே நாம் நமது சமாதானமான வாழ்வினால் நமது விண்ணகத் தந்தையைப் பிரதிபலிக்க வேண்டும்..
சமாதானமாக வாழ்வது எப்படி?
நாம் பாவமில்லாமல் இறையன்புடன் வாழும் போது இறைவனோடு சமாதானமாக வாழ்கிறோம்.
பிறரன்புடன் பிறருக்கு உதவி செய்து வாழும்போது நாம் பிறரோடு சமாதானமாக வாழ்கிறோம்.
சமாதான வாழ்வுக்கு அன்பு அடிப்படை.
அன்பு இருக்கும் இடத்தில் பாவம் இருக்காது.
அன்பு இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது.
சமாதான வாழ்வை இரண்டு நோக்கிலிருந்து பார்ப்போம்.
1. சமாதானமாக வாழ்வது.
(Living peacefully)
2. சமாதானம் செய்வது.
(Making peace)
1.சமாதானமாக வாழ்வது.
நாம் பிறரை அன்பு செய்து, அவர்களை ஏற்றுக் கொண்டு,
அவர்களைப் புரிந்து கொண்டு, அவர்களோடு சண்டை சச்சரவு எதுவும் செய்யாமல் வாழும் போது நாம் சமாதானமாக வாழ்கிறோம்.
நம்மால் சமாதானத்துக்கு எந்த இடையூறும் வராது.
நாம் தேவை இல்லாமல் மற்றவர்களுடைய உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்.
நம்மால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.
மற்றவர்களோடு அன்போடு பேசுவோம், கோபமாகப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பேசாமல் அமைதியாக இருப்போம்.
கோபப்பட நேர்ந்தால் மன்னிப்புக் கேட்போம்.
மற்றவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர்கள் கேட்காமலேயே உதவி செய்வோம்.
விண்ணுலகை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் நாம் பெறவிருக்கும்
பேரின்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற பிறரன்பு நோக்குடன் அவர்களையும் நம்மோடு வர அழைப்போம்.
நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அன்பு இயேசுவை அவர்களுக்கும் கொடுப்போம்.
சீமோன் இயேசுவுக்குச் சிலுவையைச் சுமக்க உதவியது போல நாமும் அவர்களுக்கு உதவுவோம்.
அன்னை மரியாள் சிலுவையைச் சுமந்து கொண்டிருந்த தன் மகனுக்கு ஆறுதல் கூறியது போல நாமும் மற்றவர்களுடைய துன்ப வேளையில் ஆறுதல் கூறுவோம்.
2. சமாதானம் செய்வது.
நாம் காரணமாக இல்லாமல் மற்றவர்கள் நம்மோடு பேசாமல் இருந்தாலும்,
ஏதோ காரணத்துக்காக நம்மோடு கோபப்பட்டு விட்டு சென்று விட்டாலும்
நாமாகச் சென்று சமாதானம் செய்வது நல்ல கிறிஸ்தவனுக்கு அழகு.
கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தது நாம்.
ஆனால் நம்மோடு சமாதானம் செய்து கொள்ள,
அவருடைய சமாதானத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள,
சர்வ வல்லப கடவுள் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து மனிதனாகப் பிறந்து நாம் செய்ய வேண்டிய பாவப் பரிகாரத்தை அவரே செய்தார்.
நாம் பாவ மன்னிப்பு பெறுவதற்காக நாம் கேட்காமலேயே பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நாம் நமது அயலான் நமக்கு விரோதமாகச் செய்த குற்றத்தை நாமாக மன்னித்து அவனோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
நாம் நமது அயலான் செய்த குற்றத்தை நாமாக மன்னித்தால் தான் கடவுள் நாம் செய்த பாவத்தை மன்னிப்பார்.
நமது அயலானை மன்னித்தால்தான் நாம் நமது கடவுளுக்கு ஏற்ற பிள்ளைகள்.
ஆகவே நமது சுய நலனுக்காகவாவது நமது அயலானை மன்னிக்க வேண்டும்.
சமாதானம் இருவர் ஒருவரோடு ஒருவர் செய்யும் அன்பை மையமாகக் கொண்டது.
நாம் நேசிப்பது போல நேசிக்கப்படவும் வேண்டும்.
ஆகவே மற்றவர்கள் நம்மை நேசிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.
நற்செய்தி சமாதானத்தின் செய்தி.
ஆகவே உலகெங்கும் சமாதானத்தைப் பரப்ப நம்மால் இயன்றதைச் செய்வோம்.
சமாதானமே உருவான கடவுளின் மக்களாக வாழ்வோம், இன்றும், என்றென்றும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment