"ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்
(லூக்கா நற்செய்தி 10:42)
வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு விருந்து அளித்து உபசரிப்பது, அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது,
இவற்றில் எது அதிக முக்கியத்துவமானது?
எது விருந்தினர்களுக்குப் பிடித்தது?
சிக்கலான கேள்வி.
அவர்களை வரவேற்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும், அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
இது நமது பார்வை.
ஆனால் இயேசுவின் பார்வை வித்தியாசமானது
நமது பார்வை நம்மை மையமாகக் கொண்டது.
விருந்தினர்களை உபசரித்தும், அவர்களோடு பேசியும் அவர்களை மகிழ்ச்சிப் படுத்துவது நமது திருப்திக்காக.
ஆனால் இயேசுவின் பார்வை அவரை மையமாகக் கொண்டிராது, நம்மை மையமாகக் கொண்டிருக்கும்.
நம்முடைய பார்வையில் சுயநலம் இருக்கிறது, இயேசுவின் பார்வையில் பிறர் நலம்
இருக்கிறது.
அவர் நம்மைப் படைத்தது அவருடைய எந்த நலனுக்காகவும் அல்ல.
அவர் நித்திய காலமாக அளவில்லாத பேரின்பத்திலும், மகிமையிலும் வாழ்ந்து வருகிறார்.
அளவில்லாத ஒன்றை அதிகப்படுத்த முடியாது.
அவரது அதிமிக மகிமைக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவரது மகிமையை அதிகப்படுத்தாது, ஏற்கனவே அது அளவில்லாதது.
அவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது விண்ணகப் பேரின்பத்தை அதிகரிக்கும்.
அன்னை மரியாள் அருள் நிறைந்தவள்.
அவருடைய அருள் நிறைவு அவளை விண்ணக மண்ணக அரசியாக்கியது.
இயேசு நித்திய காலமும் அரசர் தான்.
இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததால் பயன் பெற்றது தம திரித்துவக் கடவுள் அல்ல, நாம்.
நாம் செய்யும் நல்ல காரியங்களை எல்லாம் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும் படி இயேசு விரும்புகிறார்.
எதற்காக?
நாம் நமது வருமானத்தை வங்கியில் போட்டு வைப்பது வங்கியின் நலனுக்காகவா, நமது எதிர்கால நலனுக்காகவா?
அதுபோல்தான் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும் ஒவ்வொன்றும் பன்மடங்காக நமக்குத் திரும்பி வரும், நமது நிலை வாழ்வின் போது.
இயேசு மார்த்தாள் வீட்டுக்குச் சென்றபோது மார்த்தாள் அவரை வரவேற்று உபசரிப்பதிலும், அவருக்கு உணவு தயாரிப்பதிலும் கண்ணும் கருத்துமாய் இருக்கிறாள்.
மரியாள் அவரது காலடியில் அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
மார்த்தாள் இயேசுவுக்காகத் தயாரிப்பது உடலுக்கான உணவு.
இயேசு மரியாளுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பது ஆன்மீக உணவு.
தான் தனது உடலுக்காக உண்பதை விட மற்றவர்களுக்கு தான் ஆன்மீக உணவை அளிப்பதையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இயேசு கருதுகிறார்.
இயேசு உலகுக்கு வந்தது தருவதற்காக, பெறுவதற்காக அல்ல.
தருவதுதானே அன்பு!
நமக்கு உடலைத் தந்தவர் அவர்.
ஆன்மாவைத் தந்தவர் அவர்.
வாழ்க்கை வசதிகளைத் தந்தவர் அவர்.
நமது ஆன்மா வாழ அருளைத் தருபவர் அவர்.
நமது வாழ்வில் நமக்கு வரும் துன்பங்களை அவருக்கு ஒப்புக் கொடுத்தால் அதைப் பேரின்பமாக மாற்றி நமக்கே தருபவர் அவர்.
நாம் இயேசுவைப் பார்த்து
"எல்லாம் உமக்காக" என்று சொன்னால்
அவர் நம்மைப் பார்த்து "நானே உனக்காக" என்று சொல்கிறார்.
திருவிருந்தின்போது அவரே நமக்கு உணவாக வருகிறார்.
அருளை அள்ளித் தருகிறார்.
நமக்குள் வரும்போது அவரோடு பேசுவோம்.
மரியாளைப் போல நாமும் அவர் நம்மோடு பேசுவதைக் கூர்ந்து கவனிப்போம்.
நாம் நம்மை முழுவதும் அவருக்கு அளிப்போம்.
நித்திய காலமாக அவரோடு ஒன்றித்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment