இம்மையில் நூறு மடங்காக
வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.
(மாற்கு நற்செய்தி 10:30)
இராயப்பர் இயேசுவிடம் "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார்.
(மாற்கு நற்செய்தி 10:28)
"எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்காமல் கேட்கிறார்.
இயேசு மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்
இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்." என்று கூறுகிறார்.
(மாற்கு நற்செய்தி 10:29,30)
இயேசு கடவுள், நமது ஆன்மீக மீட்பர்.
ஆன்மீக மீட்பரைப் பின் பற்றுவதற்காக சீடர்கள் உலகைச் சார்ந்த அனைத்தையும் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.
அதற்குப் பிரதிபலனாக விட்டு வந்த லௌகீக வசதிகளுக்கு ஈடாக, அவற்றை விட மேலான ஆன்மீக பிரதிபலன்களைத் தருவதாக இயேசு வாக்களிக்கிறார்.
விட்டு விட்டு வந்தது லௌகீகம். பிரதிபலன் ஆன்மீகம்.
விட்டு விட்டு வந்தது உலகின் ஒரு பகுதியைத்தான்.
பிரதிபலனாகக் கிடைத்திருப்பது ஆன்மீகப் பணிக்காக முழு உலகமும்.
(உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்.)
விட்டு விட்டு வந்தது ஒரு வீடு.
பிரதிபலனாகக் கிடைத்திருப்பது நற்செய்தியை அறிவிக்க உலகிலுள்ள அனைத்து வீடுகளும்.
"நூறு மடங்காக" முழுமையைக் குறிக்கும்.
இனி உலகிலுள்ள அனைவரும் அவர்களுடைய சகோதர, சகோதரிகள்தான்.
உலகிலுள்ள அத்தனை தாய்மாரும் அவர்களுடைய
தாய்மார்தான்.
அனைத்து நிலபுலன்களும் ஆன்மீக ரீதியாக அவர்களுடையவைதான்.
இயேசு தான் செய்ய வந்த பணியைத் தொடர்வதற்காக உலகம் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டார்.
விட்டு விட்டு வந்தது லௌகீக உறவு.
இனி கிடைக்கப் போவது உலகோர் அனைவருடனும் ஆன்மீக உறவு.
அன்று இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகள் அவர்களுடைய வாரிசுகளாகிய நமது குருக்களுக்கும் பொருந்தும்.
நமது குருக்கள் வானத்திலிருந்து நேரடியாக பூமிக்கு வரவில்லை.
நமது குடும்பங்களிலிருந்துதான் வருகிறார்கள்.
நமது குடும்பங்கள் தான் குருத்துவத்துக்கான நாற்றங்கால்.
நமது குடும்பம் லௌகீக அமைப்பா? ஆன்மீக அமைப்பா?
முழுக்க முழுக்க ஆன்மீக அமைப்பு.
திருமணம் ஒரு தேவத்திரவிய அனுமானம்.
அது வரை தனித்தனியாக வாழ்ந்து வந்த ஆணும், பெண்ணுமாகிய இருவர்
இறைவனால் ஈருயிர் ஓருடலாக இறைவனின் சாயலில் இணைக்கப் படுகிறார்கள்.
எப்படி கத்தோலிக்கத் திருச்சபை இயேசுவால் நிறுவப்பட்ட ஆன்மீக அமைப்போ
அதேபோல் கத்தோலிக்கக் குடும்பமும் இயேசுவால் நிறுவப்பட்ட ஆன்மீக அமைப்பு.
ஒரு வகையில் குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை.
குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணம் கணவனும் மனைவியும் தாங்கள் தங்கள் ஆன்மீகக் கடமைகளை மறந்து உலகியல் ரீதியாக வாழ்வதுதான்.
இதற்கு அடிப்படைக் காரணம் நாம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் போது அன்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பணம் உட்பட்ட உலக உடமைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதுதான்.
குடும்பங்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியாக வாழ ஆரம்பித்தால் பிரச்சினைகள் வராது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆன்மீக ரீதியில் வளர்க்க ஆரம்பித்தால் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குருக்கள் வர ஆரம்பிப்பார்கள்.
அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து வந்தவர்கள்
உலகமே குடும்பம் என்ற பெரிய வட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள்.
உலகமே ஒரு குடும்பம் என்ற ஆன்மீக சிந்தனை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அனைத்து கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களையும் குருக்கள் என்று தான் அழைக்கிறது.
கிறிஸ்துவின் பணிகளான பாவப் பரிகாரப் பலி, திவ்ய நற்கருணை, திரு விருந்து, பாவமன்னிப்பு, அதிகாரப் பூர்வமாக நற்செய்தியை அறிவித்து விளக்குதல் ஆகிய பணிகளைச் செய்பவர்கள் பணிக் குருத்துவத்தினர்.
பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.
மற்றவர்கள் அனைவரும் பொதுக் குருத்துவத்தினர்.
குருக்கள் குடும்பத்திலிருந்து வந்தாலும் முழுக்க முழுக்க உலகக் குடும்பத்துக்கு உரியவர்கள்.
அவர்களுடைய பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் உலகக் குடும்பத்தில் அடங்குவர்.
அந்த வகையில் அனைவருக்கும் செய்வது போல அவர்களுக்கும் ஆன்மீகம் சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்வர்.
பணம் போன்ற உலகைச் சார்ந்த உதவிகளைச் செய்ய மாட்டார்கள்.
ஏனெனில் இரத்த உறவைத் துறந்துதான் முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிக்கு வந்திருக்கிறார்கள்.
உலகைச் சார்ந்த உதவிகளைச் செய்தால் அவர்கள் உறவுகளை முற்றிலும் துறக்கவில்லை என்றாகிவிடும்.
முற்றிலும் துறந்த துறவிகளின் குடும்பத்தினருக்கு இறைவனின் ஆசீர்வாதம் அபரிமிதமாகக் கிடைக்கும்.
விண்ணகத்தில் அவர்களுக்கு அளவு கடந்த செல்வம் சேர்ந்திருக்கும்.
உலகச் செல்வம் அழியக்கூடியது, விண்ணகச் செல்வம் என்றும் நிலைத்திருக்கும்.
"இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்."
இறைவனுக்காக உறவுகளைத் துறந்தவர்களில் வாழ்க்கையில் இன்னல்கள், துன்பங்கள் மிகுந்திருக்கும்.
ஆனால் மறுவுலகில் நிலை வாழ்வு பேரின்பம் நிறைந்ததாக இருக்கும்.
அழியும் செல்வத்தை இழப்போம், அழியாச் செல்வத்தை ஈட்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment