"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்."
(லூக்கா நற்செய்தி 11:23)
இவ்வுலகில் நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கும் போது தொடர்ந்து பயணிக்கலாம், அல்லது ஆங்காங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்து பயணிக்கலாம்.
ஓய்வு எடுக்கும் போது முன்னுக்கும் போவதில்லை பின்னுக்கும் வருவதில்லை.
ஆனால் நமது விண்ணக ஆன்மீக பயணத்தில் ஒன்று முன்னேறுவோம் அல்லது பின்னடைவோம்.
ஓய்வு எடுக்க முடியாது.
புண்ணிய வாழ்வு வாழும் போது ஒருவன் முன்னேறுகிறான்.
புண்ணிய வாழ்வு வாழ்வதை நிறுத்தி விட்டால் அவன் பின்னடைகிறான்.
முன்னேறாமலும், பின்னடையாமலும் இருக்க முடியாது.
இவ்வுலக சமூக வாழ்வில் நாம் ஒருவரை ஆதரிக்கலாம் அல்லது ஆதரிக்காமல் இருக்கலாம்.
இது நடுநிலைமை.
ஆன்மீக வாழ்வில் நமக்கு இறைவனோடு இருக்கும் உறவைப் பொறுத்த மட்டில் நம்மால் நடுநிலைமை வகிக்க முடியாது.
இறைவனோடு இல்லாதவன் அவருக்கு எதிராக இருக்கிறான்.
கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் அவரைப் பற்றி நினையாமலும்,
எதுவும் பேசாமலும்,
எதுவும் செய்யாமலும் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அவன் கடவுளுக்கு எதிராக வாழ்கிறான்.
"நான் அவரைப் பற்றி தப்பாக எதுவும் பேசவில்லையே, எதுவும் செய்யவில்லையே" என்று சொல்ல முடியாது.
"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்." என்று ஆண்டவர் சொல்கிறார்.
நாம் கடவுளை நேசிக்க வேண்டும் என்று அவர் கட்டளை கொடுத்திருக்கிறார்.
கடவுளை நேசிக்காதவன் அவரது கட்டளையை மீறுகிறான்.
கட்டளையை மீறுவது பாவம்.
பாவம் கடவுளுக்கு எதிரான செயல்.
ஒருவன் நற்செய்தியை அறிவிக்கும் பணியைச் செய்தால் அவன் கடவுளோடு இணைந்து அவருக்காக ஆட்களைச் சேகரிக்கிறான்.
அவரோடு இணைந்து நற்செய்திப் பணி செய்யாதவன் ஏற்கனவே சேர்ந்திருந்த ஆட்களைச் சிதறடிக்கிறான்.
நற்செய்தி பணி செய்பவருடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
ஆகவே அவர் சொல்லாலும், செயலாலும் இறைப்பணி செய்கிறார்.
நற்செய்தி பணி செய்யாதவருடைய வாழ்க்கை துர்மாதிரிகையாக இருக்கும்.
துர்மாதிரிகை நல்லவர்களையும் கெடுத்து விடும்.
ஆன்மீகவாதிக்கு விண்ணகமே வீடு.
லௌகீகவாதிக்கு இவ்வுலகமே வீடு.
ஆன்மீகவாதி ஆன்மீகத்தை விட்டு விட்டால் அவர்
லௌகீகவாதியாக மாறிவிடுவார்.
இரண்டும் இல்லாமல் இன்னொரு வாதி இல்லை.
லௌகீகவாதிக்கு, உலகத்துக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு விண்ணகம் இல்லை.
உலகில் வாழ்கிறோம், ஆனால் உலகுக்காக வாழக்கூடாது.
We are in the world, but we are not of the world.
உலகில் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக மட்டும் வாழ்பவன் லௌகீகவாதி.
உலகில் விண்ணகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பவன் ஆன்மீகவாதி.
கத்தோலிக்கத் திருச்சபை ஆன்மீகவாதிகளின் கூடாரம்.
பெயரளவில் மட்டும் ஆன்மீகவாதியாக இருந்தால் போதாது.
செயலளவிலும் ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்.
ஆன்மீக உதவி கேட்டு அன்னையைத் தேடி வேளாங்கண்ணிக்குப் பயணிப்பவன் ஆன்மீகவாதி.
திருவிழாவுக்குச் சென்று விட்டு, பாவ சங்கீர்த்தனம் கூட செய்யாமல் திரும்புபவன் கூட்டம் பார்க்கச் சென்ற லௌகீகவாதி.
சாப்பிட்டால் மட்டும் போதாது, சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும்.
ருசி மட்டும் உள்ள உணவைச் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது.
திருப்பலிக்குப் போனால் மட்டும் போதாது, பக்தியுடன் பலியை ஒப்புக் கொடுக்க வேண்டும்.
திருப்பலிக்கு போய்த் திரும்பும் போது ஆன்மாவில் அருள் வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.
போன நிலையிலேயே திரும்பக் கூடாது.
குளிக்கச் செல்பவன் உடல் நனைந்திருந்தால் மட்டும் போதாது,
அழுக்குப் போயிருக்க வேண்டும்.
செபம் செய்ய ஆரம்பிக்கும் போது ஆன்மாவில் இருந்த அழுக்கு
செய்து முடிக்கும்போது போயிருக்க வேண்டும்.
ஒவ்வொரு செபத்தின்போதும் சிறிதளவாவது ஆன்மீக வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.
வளர்ச்சி அடையாதவன் தளர்ச்சி அடைகிறான்.
ஆண்டவரோடு வாழ்வோம், ஆன்மீகத்தில் வளர்வோம், வளர்ந்து கொண்டேயிருப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment