Thursday, October 10, 2024

அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார். (லூக்கா நற்செய்தி 11:28)

அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 11:28)

இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார். 
(லூக்கா நற்செய்தி 11:27)

அந்தப் பெண்ணின் கூற்றை இயேசு மறுக்கவில்லை.

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இறைவார்த்தையின்படி‌ நடப்பவர்களை பெருமை படுத்துவதற்காக 

''இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்று கூறினார்.

இறை வார்த்தையின்படி நடப்பவர்கள் அனைவருக்கும் இயேசுவின் இந்த வார்த்தைகள் பொருந்தும்.

"இதோ ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்"

என்ற வார்த்தைகளின் மூலம்
இறைவார்த்தையை ஏற்று, அதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவள் அன்னை மரியாள்.

இயேசுவின் தாயை விட அதிக பேறு பெற்றோர் யாராவது வாழ்ந்திருக்கிறார்களா?

சென்மப் பாவ மாசின்றி உற்பவித்து, அருள் நிறைந்து வாழ்ந்தவள் அன்னை மரியாள் மட்டும் தான்.

அவளைப் போல இதுவரை வாழ்ந்தவர்கள் யாருமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை.


இயேசு சிலுவையில் தொங்கியபோது தனது தாயை அருளப்பர் மூலமாக நமக்கும் தாயாகத் தந்திருக்கிறார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அன்னை மரியாளின் பிள்ளைகள்.

தாயைப் போல பிள்ளை என்ற கூற்றுக்கு இணங்க நாம் வாழ வேண்டும்.

அவள் அளவுக்குப் புனிதர்களாக நம்மால் வாழ முடியாது.

ஆனால் அவளைப் போல வாழலாம், வாழ வேண்டும்.

அவள் தன்னை ஆண்டவரின் அடிமையாக ஒப்புக் கொடுத்தாள்.

நாமும் நம்மை ஆண்டவரின் அடிமைகளாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

அவள் இறைவனின் சித்தத்துக்கு அடிபணிந்தாள்.

நாமும் இறைவனின் சித்தத்தை ஏற்று அதன்படி வாழ வேண்டும்.

அவள் இறைவனின் சித்தப்படி இயேசுவின் சிலுவைப் பாதையில் நமது பாவங்களுக்கு‌
பரிகாரமாக அவளும் பயணித்தாள்.

நாமும்  நமது பாவங்களுக்கும், உலகோரின் பாவங்களுக்கும் பரிகாரமாக நமது சிலுவையை‌ முழுமனதுடன் சுமப்போம்.

அவள் இறைவனின் சித்தப்படி இறைமகனை பத்து மாதங்கள் வயிற்றிலும், கருவறையை விட்டு வெளியே வந்த பின்னும்,
கல்லறைக்குள் போகுமுன்னும் மடியில் சுமந்தாள்.

நாமும் அவர் சித்தப்படி அவரை திருவிருந்தின் போது நம் நாவில் வாங்கி, நாளெல்லாம் உள்ளத்தில் சுமப்போம்.

வாழ்வோம்,

அன்னையின் அரவணைப்பில் வாழ்வோம்.

அன்னையைப் போல் வாழ்வோம்.

நித்தியத்துக்கும் அன்னையோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment