Saturday, October 5, 2024

அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். (லூக்கா நற்செய்தி 10:37)

அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். 
(லூக்கா நற்செய்தி 10:37)

இயேசு நல்ல சமாரித்தன் உவமையைக் கூறுவதற்கு முன்னால் முன்னுரையாக அமைந்த இரண்டு வசனங்களைக் கவனிக்க வேண்டும்.

"திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்."


"அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்."
(லூக்கா நற்செய்தி 10:25,29)

கேள்வி கேட்டவர் திருச்சட்ட அறிஞர்.

மோயீசன் மூலமாக இறைவன் அளித்த சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்.

அவர் அறிஞராகையால் அவரது கேள்விக்கு அவருக்குப் தெரியாதிருந்திருக்க முடியாது.

அவர் கேள்வி கேட்டது இறைவனிடம், அவர் இறைவன் என்று ஏற்றுக் கொள்ளாத இயேசுவிடம்.

கேள்வி கேட்டது பதில் அறிந்து கொள்ள அல்ல, இயேசுச் சோதிக்கும் நோக்குடன்.

இயேசு பதிலைச் சொன்னதும் அடுத்த கேள்வியைக் கேட்கிறார், இதுவும் பதில் தெரிந்து கொள்ள அல்ல, 

தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி.

கடவுளையே சோதிக்க விரும்புகிறவனும், தன்னை நேர்மையாளர் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறவனும் உண்மையான ஆன்மீகவாதியாக இருக்க முடியாது.

அவனது கேள்விகளின் தன்மையை அறிந்தும் இயேசு பொறுமையாகப் பதில் சொல்கிறார்.

நல்ல சமாரித்தன் உவமை மூலம் பதில் சொல்கிறார்.

நல்ல சமாரித்தன் உவமையாக ஆன்மீக ரீதியாகத் தியானிப்போம்.


 ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகிறார்.

போகும்போது கள்வர் கையில் அகப்படுகிறார். 

அவர்கள் அவருடைய ஆடைகளை  உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போகிறார்கள். 

அவ்வழியே வரநேர்ந்த குருவும், லேவியரும் அவரைக் கண்டும் காணாதது போல் போய்விடுகிறார்கள்.

அவ்வழியே வரும் சமாரித்தர் அவருக்கு உதவுகிறார்.

சமாரித்தர் அவரைத் தனது அடுத்திருப்பவராக ஏற்றுக் கொண்டு உதவுகிறார்.


திருச்சட்ட நூலில் வரும் 

"உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்ற வசனத்தை விளக்குவதற்காகவே இந்த உவமை.

அடுத்திருப்பவரை நாம் அயலான் என்று கூறுகிறோம்.

இயேசுவின் உவமைகளைக் கூர்ந்து தியானித்தால் ஒவ்வொரு உவமையிலும் இரண்டு கருத்துருக்கள் இருப்பது புரியும்.

நல்ல சமாரித்தன் உவமையிலும் இரண்டு கருத்துருக்கள் உள்ளன.

முதலாவது நமது அயலானை நேசிக்க வேண்டும், அவனுக்கு உதவ வேண்டும்.

இன்னொரு கருத்தைத் தியானிப்போம்.

எருசலேம் கோவில் நகரம்.
கடவுளுக்கு ஏற்ற ஆன்மீக வாழ்வைக் குறிக்கும்.

எரிக்கோ வியாபார நகரம்.
லௌகீக வாழ்வைக் குறிக்கும்.

முழுக்க முழுக்க இறைவனோடு ஒன்றித்து ஆன்மீக வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவனிடம் சாத்தானின் வேலை எடுபடாது.

ஆன்மீக வாழ்வை விட்டு விட்டு லௌகீக வாழ்க்கையில் ஒருவன் ஆர்வம் காட்ட ஆரம்பித்தால் சாத்தான் அவனது வேலையைக் காட்ட ஆரம்பிப்பான்.

ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் போகும் வழியில் கள்வர் கையில் அகப்பட்டான்.

அதாவது ஆன்மீக வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனுக்கு லௌகீக வாழ்வில் ஆசை வந்த போது சாத்தானால் சோதிக்கப்பட்டான்.

சாத்தான் அவனைப் பாவ வாழ்க்கையில் விழ வைத்தான்.

அயலான் மீது அன்பு இல்லாதவர்களால் அவனுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

ஆனால் அவ்வழியே வந்த நல்ல சமாரித்தனாகிய இயேசு அவனுக்கு உதவி செய்து,  அவனைக் குணப்படுத்தும் முழுப் பொறுப்பையும் கத்தோலிக்க திருச்சபையிடம் (சாவடி) ஒப்படைத்தார்.

அவன் குணமடைய உதவியாக பாவ சங்கீர்த்தனம், நற்கருணை 
(இரு தெனாரியம்) ஆகிய திரு அருட்சாதனங்களைக் கொடுத்தார்.

லௌகீக வாழ்க்கையில் ஆசை கொண்டவன் ஆன்மீக வாழ்வுக்குத் திரும்பி விட்டான்.

இறை மகன் இயேசு தன்னை நேசிப்பது போல அவருக்கு அயலான் ஆகிய நம்மை நேசிக்கிறார்.

பிறரன்புக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தார்.

அவர் தனது சிந்தனையால் மட்டுமல்ல, 

சொல்லாலும், (நற்செய்தி),

செயலாலும் (சிலுவை மரணம்)

பாவத்திலிருந்து மீட்டிருக்கிறார்.

நாமும் அவரைப் பின்பற்றி 

சிந்தனையாலும் 
(உள்ளத்தில் அன்பு)

சொல்லாலும் 
(நற்செய்திப் பணி)

செயலாலும் (ஆன்மீக வாழ்வில் செய்யும் உதவிகள்)

நாமும் மீட்புப் பணி செய்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment