"எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்."
(லூக்கா நற்செய்தி 11:3)
"வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!"
(மத்தேயு நற்செய்தி 6:26)
இந்த வார்த்தைகளைக் கூறிய நமது ஆண்டவர் தான்
"எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்"
என்று விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
இரண்டு வசனங்களுக்கும் பொருள் ஒன்றுதான்.
பட்டினி கிடந்து சாக வேண்டும் என்று கடவுள் நம்மைப் படைக்கவில்லை.
அவர் நமக்கு உடலைக் கொடுத்திருப்பது உழைப்பதற்கு.
உழைப்பது
உண்பதற்கு உணவும், உடுத்துவதற்கு உடையும், இருப்பதற்கு இருப்பிடமும் ஈட்டுவதற்கு.
எவ்வளவு உழைக்க வேண்டும்?
எவ்வளவு இயலுமோ அவ்வளவு உழைக்க வேண்டும்.
எவ்வளவு உண்ண வேண்டும்?
ஒவ்வொரு நாளும் உடல் வாழ எவ்வளவு உண்ண வேண்டுமோ அவ்வளவு உண்ண வேண்டும்.
தினமும் உழைக்க வேண்டும். தினமும் அன்றன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பிறருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
"அன்றன்றைக்குத் தேவையான உணவை அன்றன்று தாரும், தந்தையே.". என்றுதான் செபிக்க வேண்டும் என்று இயேசு கற்றுத் தந்திருக்கிறார்.
ஆண்டு முழுவதற்குமான உணவை இன்றே தாரும் என்று செபிக்கச் சொல்லவில்லை.
ஏன்?
ஒரு முறை அறுவடையான தானியத்தை ஆண்டு முழுவதற்குமான சாப்பாட்டுக்கு சேமித்து வைக்கக் கூடாதா?
செபத்தின் கருத்தைப் புரிந்து கொண்டால் இந்த கேள்வியைக் கேட்க மாட்டோம்.
முதலில் இறைவனைத் தந்தையே என்று அழைக்கும் படி இயேசு கற்றுத் தந்திருக்கிறார்.
அதிலும் "எங்கள் தந்தையே" என்று அழைக்க வேண்டும்.
எனக்கு மட்டுமல்ல, நான் சேர்ந்துள்ள மனுக் குலத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் அவர்தான் தந்தை.
நான் எனக்கு மட்டும் உணவு கேட்டு செபிக்கவில்லை.
"உலக மக்களாகிய எங்கள் அனைவரின் தந்தையே,
எங்கள் அனைவருக்கும் இன்றைய உணவை இன்று தாரும்.'' என்று
ஒவ்வொருவரும் அனைவருக்கும் உணவு கேட்டு செபிக்கிறோம்.
ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
தாய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேர உணவையும் கொடுப்பாள்.
நமது விண்ணகத் தந்தைக்கு கோடானு கோடி மக்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் உணவு கொடுக்க வேண்டும்.
அதற்காகத்தான் தந்தையாகிய என்னை நேசியுங்கள்,
உங்களை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசியுங்கள் என்று இரண்டு கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்.
கடவுள் நமது தந்தையானால் பிறன் நமது சகோதரன்.
வீட்டில் நமது சகோதரனைப் பார்க்கும் படி வைத்து விட்டு தனியாகச் சாப்பிடுவோமா?
இருப்பதைப் பகிர்ந்து உண்போம்.
பகிர்ந்து உண்ணும் மன நிலை நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் உலகில் யாராவது பட்டினி கிடப்பார்களா?
இறைவனைத் தந்தை என்று ஏற்றுக் கொண்டால் மனிதர்கள் அனைவரையும் சகோதரர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.
அனைவரையும் சகோதரர்கள் என்று ஏற்றுக் கொண்டால் அனைவரோடும் பகிர்ந்து உண்போம்.
கடவுள் தான் அனைவருக்கும் உணவு கொடுக்கிறார்,
ஆனால் அதைத் தன் பிள்ளைகள் மூலம் பகிர்ந்து கொடுக்கிறார்.
"எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்." என்ற செபம்
நம்மிடையே சகோதர உணர்வு இருக்க வேண்டும்,
இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து உண்ண வேண்டும்
என்ற ஒரே குடும்ப உணர்வு இருக்க வேண்டும் என்ற பிறரன்பு கட்டளையை நமக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.
அதற்காகத்தான் அந்த செபம்.
அப்படியானால் நாம் சேமித்து வைக்கலாமா?
வைக்கலாம், நாம் மட்டும் உண்பதற்காக அல்ல, நமது பிறரோடு பகிர்ந்து உண்பதற்காக.
அன்றாட உணவை தேவைப்படுவோர் அனைவரோடும் தினமும் உண்ண வேண்டும்.
உணவு என்றவுடன் நாம் உண்ணும் சாப்பாட்டை மட்டும் நினைத்து கொண்டிருக்கக் கூடாது.
நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மற்ற பொருட்களையும் அது குறிக்கும்.
அன்றாட உணவுக்கு என்ன விளக்கம் கொடுத்தோமோ அது மற்ற அன்றாட தேவைகளுக்கும் பொருந்தும்.
ஆன்மீக வாழ்க்கையிலும் நாம் மற்றவர்களுக்கு தினமும் உதவிகரமாக இருக்க வேண்டும்.
நாம் மட்டும் விண்ணகம் சென்றால் போதாது,
அனைத்து மக்களும் நம்மோடு அங்கு வரவேண்டும்.
நற்செய்தியும், நற்செயல்களும் நமது அன்றாட ஆன்மீக உணவு தான்.
இவற்றையும் நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நமது இன்பத்தில் மற்றவர்களுக்கு பங்கு கொடுக்கும்போது நமது இன்பத்தின் அளவு அதிகமாகும்.
மற்றவர்களின் துன்பத்தில் நாம் பங்கெடுக்கும் போது துன்பத்தில் அளவு குறையும்.
நாம் ஒரே தந்தையின் பிள்ளைகள்.
நாம் அனைவரும் அனைவருக்காகவும் தினமும் வாழ வேண்டும்.
நமது விண்ணகத் தந்தை தான் படைத்தவை அனைத்தையும் நம் அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்.
தந்தையைப் போல நாமும் நம்மிடம் உள்ளவை அனைத்தையும் அனைவரோடும் பகிர்ந்து பயன்படுத்துவோம்.
விண்ணகத் தந்தையே,
உமது பிள்ளைகளாகிய நாங்கள் எங்களிடம் உள்ளதைத் தினமும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து
உமது பிள்ளைகள் என்று நிரூபித்து வாழ வேண்டிய வரம் தாரும்.
ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்பவர்கள் தான் உமது பிள்ளைகளாக இருக்க தகுதி உள்ளவர்கள் என்பதை நாங்கள் உணர வரம் தாரும்.
ஆமென்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment