Tuesday, October 8, 2024

"மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். (லூக்கா நற்செய்தி 11:9)

"மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். 
(லூக்கா நற்செய்தி 11:9)

கடவுள் நமது தந்தை.

பிள்ளைகள் தங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் தந்தையிடம் தான் கேட்க வேண்டும்.

தந்தையிடம் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை பிள்ளைகளிடம் இயல்பாக இருக்கும்.

நம்பிக்கையோடு தான் நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும்.

நமக்கு நன்மை பயப்பதைக் கடவுள் கட்டாயம் தருவார்.

"ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்."
(லூக்கா நற்செய்தி 11:10)

நன்மை பயப்பதைக்  கட்டாயம் தருவார். தீமை பயப்பதைக் கட்டாயம் தரமாட்டார்.

"பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?"
(லூக்கா நற்செய்தி 11:11)

இப்போது ஒரு கேள்வி.

கடவுளிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்?

வகுப்பில் ஆங்கில ஆசிரியர் ஆங்கில இலக்கணம் போதித்துக் கொண்டிருந்தார், Tense and Voice பற்றி.

போதித்து முடிந்த பின்,

"ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்." என்று சொன்னார்.

ஒரு மாணவன் ஆங்கிலப் பாட போதனையைக் கவனிக்காமல் அடுத்த பிரிவு வேளைப் பாடத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

"ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்." என்று ஆசிரியர் கூறியவுடன் அந்த மாணவன் எழுந்தான்.

"கேள்."

"உணவு சீரணம் ஆகும்போது நடைபெறுவது பௌதிக மாற்றமா? இரசாயன மாற்றமா?"

"ஏண்டா, நீ எங்க இருக்க? நான் விஞ்ஞான பாடமா நடத்திக் கொண்டிருக்கிறேன்?"

"Sorry, Sir. அடுத்தது விஞ்ஞான பாடவேளை. அந்த ஞாபகமாகவே இருந்து விட்டேன்."

நாம் கடவுளிடம் கூட இந்த மாணவன் மாதிரியே நடந்து கொள்கிறோம். 

இயேசு விண்ணகத் தந்தையை நோக்கி எப்படி செபிப்பது என்று சொல்லிக் கொடுத்துவிட்டு அதன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

அவர் கற்பித்த செபத்தில் ஒரு விண்ணப்பம் மட்டுமே உணவைப் பற்றியது.

உணவு உடல் சார்ந்த உணவை மட்டுமல்ல, ஆன்மீக உணவையும் குறிக்கும்.

மற்ற எல்லா விண்ணப்பங்களும் முழுக்க முழுக்க ஆன்மீகத்தைச் சார்ந்தவையே.


கடவுளிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்? என்ற கேள்விக்கான பதில் 13வது வசனத்தில் உள்ளது.

"தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! " 
(லூக்கா நற்செய்தி 11:13)

"விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! " 

அப்படியானால் நமது விண்ணப்பங்கள் ஆன்மீகம் சார்ந்தவையாகவே இருக்க வேண்டும்.

அவர் போதித்த நற்செய்தி முழுக்க முழுக்க ஆன்மீகம் சார்ந்தது.

நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பது விண்ணக நிலை வாழ்வை நோக்கி, அதாவது நமது ஆன்மீக மீட்புக்காக,

இவ்வுலக இன்பத்தை நோக்கமாகக் கொண்டு அல்ல.

ஆகவே நாம் விண்ணகத் தந்தையிடம் கேட்க வேண்டியது ஆன்மீக உதவிகளைத்தான்.

ஆங்கில பாட நேரத்தில் ஆசிரியர் சந்தேகம் கேட்கச் சொன்னால் சந்தேகம் ஆங்கில பாடம் சம்பந்தப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும்.

அதுபோல ஆண்டவர் ஆன்மீக விண்ணப்பங்கள் குறித்து போதித்துக் கொண்டிருக்கும் போது "கேளுங்கள், கொடுக்கப் படும்." என்று சொன்னால் 

ஆன்மீக உதவிகளைக் கேளுங்கள் என்று தான் அர்த்தம்.

கேட்டால் தந்தையும் தூய ஆவியைக் கொடுப்பது  உறுதி.

தூய ஆவி நம்மை ஆன்மீக வாழ்வில் வழிநடத்துவார்.

இவ்வுலகைச் சார்ந்த உதவிகளையும் கேட்கலாம், ஏனெனில் நாம் உலகில் தான் வாழ்கிறோம்.

ஆனால் நாம் கேட்பது நமது ஆன்மீக வாழ்வுக்கு இடைஞ்சலாக இருக்குமானால் அதைத் தரமாட்டார்.

ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருக்குமானால் தருவார்.

விண்ணகப் பாதையில் வெற்றிகரமாக நடக்க  தந்தையிடம் உதவி கேட்போம்.

தூய ஆவியின் உதவியுடன் வெற்றி நடை போட்டு விண்ணகம் எய்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment