Saturday, March 2, 2024

தற்கொலை சாவான பாவமா?

தற்கொலை சாவான பாவமா?

"தாத்தா, எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன். ஆள ரொம்ப நாளா காணல!"

''பரிட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன்."

'"பரிட்சை முடிஞ்சுதா?"

"முடிஞ்சுது. "

"'தாத்தாவுக்கு என்ன கொண்டு வந்திருக்க?"

"சில சந்தேகங்கள."

"'எனக்குத் தெரியும். சந்தேகம் இருந்தால்தானே வருவ.

சரி, கேளு."

"தற்கொலை சாவான பாவமா? அற்பப் பாவமா?"

"'ஏன் திடீர்னு இப்ப இந்த சந்தேகம் வந்தது?"

'' அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான். "
(மத்தேயு. 27:5)

என்று இன்று காலையில வாசித்தேன்.
இந்த சந்தேகம் வந்தது."

"நீ என்ன நினைக்கிற?"

"'யூதாச நினைச்சா பாவமா இருக்கு."

"யூதாஸ் ஆண்டவர்கள் காட்டிக் கொடுத்தவன்டா."

"நாம் பாவம் செய்யும் போதெல்லாம் அதைத்தானே செய்கிறோம். ஆண்டவருடைய பாடுகளுக்கும், மரணத்துக்கும் நாமும் தானே காரணம்.


 "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். " (லூக். 6:37)

என்று ஆண்டவரே கூறியிருக்கிறாரே!"

"'பின் ஏன் அதைப்பற்றி என்னிடம் கேட்கிறாய்?"

"நான் யூதாசைப் பற்றி கேட்கவில்லை.

தற்கொலை சாவான பாவமா? அற்பப் பாவமா?" என்றுதான் கேட்டேன்."

"'முதலில் ஒரு அடிப்படை உண்மையைக் கூறிவிடுகிறேன்.

பாவமே, புண்ணியமோ செயலில் இல்லை. செயலுக்கான நோக்கத்தில்தான் (Intention) இருக்கிறது.

கடவுளின் மகிமைக்காகப் பிறருக்கு உதவி செய்தால் புண்ணியம்.

சுய விளம்பரத்துக்காக உதவி செய்தால் அது தற்பெருமை.

ஒரு பாவம் சாவான பாவமாக இருக்க வேண்டுமென்றால்

1. அது ஒரு பெரிய தீச்செயலாக இருக்க வேண்டும்.

2. அது சாவான பாவம் என்ற முழு அறிவோடு செய்ய வேண்டும்.

3.முழு விருப்பத்தோடு செய்ய வேண்டும்.

For a sin to be mortal, 

three conditions must exist at the same time.

1. It must be of a grave matter;

2.It must be committed with full knowledge that it is a mortal sin;

3.It must be committed with full consent. [ Full consent means to do it "voluntarily."] ( C.C.C. # 1857)

தற்கொலை ஒரு சாவான பாவத்துக்குரிய விசயம்தான்.

மற்ற இரு நிபந்தனைகளுக்கு
 உட்பட்ருந்தால்,

அதாவது முழு அறிவோடும்,
முழு விருப்பத்தோடும் செய்யப்பட்டிருந்தால் அது சாவான பாவம் தான்.

வாழ விரும்புவது மனித இயல்பு.
யாரும் சாக வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள்.

ஒரு தாவரம் முழுமையான பலன் தர வேண்டுமானால் தண்ணீர், உரம், சூரிய ஒளி ஆகிய மூன்றும் தேவை.

இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் அது முழுமையான பலன் தராது."

"அதாவது தற்கொலை செய்யும் போது முழு அறிவும், முழு விருப்பமும் இல்லாவிட்டால் அது சாவான பாவம் இல்லை, அற்பப் பாவம் என்கிறீர்கள், அப்படித்தானே!"

"'அப்படியேதான்."

"ஆனால் ஒரு செயல் புரிபவனுக்கு அறிவும், விருப்பமும் இருக்கத்தானே செய்யும்."

"இருந்தால் சாவான பாவம் தான்.

சொல்வதைக் கவனி.

நீண்ட நாள் வாழ விரும்பும் ஒருவன் குணமாக்கப்படவே முடியாத வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்."

"அதாவது நீண்ட காலம் வாழ விரும்புகிறான், சாக விரும்பவில்லை. சரியா?"

"'குறுக்கே பேசாமல் கவனி."

"சரி, சொல்லுங்க."

"'ஒரு நாள் தாங்க முடியாத அளவுக்கு வேதனை ஏற்படுகிறது.

வேதனையைத் தாங்க முடியாமல், உணர்ச்சி வசப்பட்டு, தூக்க மாத்திரைகளை விழுங்கி விடுகிறான்.

மனிதன் உணர்ச்சி வசப்படும்போது விருப்பத்தின் அளவு குறையும்.

முழு விருப்பமின்றி, வேதனையைத் தாங்க முடியாமல் உணர்ச்சி வசப்பட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.

மூன்று நிபந்தனைகளில் ஒரு நிபந்தனை Out!''

"விருப்பமின்றி, உணர்ச்சி வசப்பட்டுச் செய்யும் செயல் சாவான பாவம் இல்லை, சரியா?"

'"அவனுடைய மன நிலை அவனுக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.

வெளியே உள்ள நமக்குத் தெரியாது. 

நாம் வழக்கமாக வெளித் தோற்றத்தை வைத்து முடிவு செய்து விடுகிறோம்.

அகத்தை அறியாமல் புறத்தை மட்டும் வைத்து எடுக்கப்படும் சரியாக இருக்காது."

"தற்கொலை செய்பவன் நரகத்துக்கு தான் போவான் என்று சொல்கிறார்களே."

"'சாவான பாவத்துடன் மரிப்பவன்தான் நரகத்துக்குப் போவான்."

"ஒருவன் முழு அறிவோடும், முழு விருப்பத்தோடும் தற்கொலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவன் செய்வது முயற்சி தான்.

முயற்சிக்கும், மரணத்துக்கும் இடையில் சில வினாடிகள் இருக்கலாம்.

அந்த வினாடிகளில் அவன் மனம் மாற வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா?"

"'ஒரு பாவி மனம் திரும்பி, தனது பாவங்களுக்காக வருத்தப்பட ஒரு வினாடி போதும், 

ஒரு வினாடியின் ஒரு சிறிய பகுதியே போதும்.

A fraction of a second is enough to feel sorry for our sins.

நாம் பாவங்களுக்காக வருத்தப்பட்ட நொடியே நமது பாவங்கள் மன்னிக்கப்படும்.

மன்னிப்புப் பெற்ற பின் இறந்தால் நரகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

யூதாசுக்கு இந்த உதவி கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.

கடவுளுக்கும், அவனுக்கும் மட்டுமே தெரியும்.

நமது பாவங்களை மன்னிக்க கடவுள் எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் ஒரு உண்மையைக் கவனி.

நரக நிலையைக் கடவுள் படைத்தது மனிதருக்காக அல்ல.

சாத்தானுக்காகப் படைக்கப் பட்ட நரகத்தைத் தெரிவு செய்வது மனிதன்தான்."

"பூச்சிகளுக்காகத் தயாரிக்கப் பட்ட மருந்தை மனிதன் சாப்பிடுவதுபோல."

"'கரெக்ட். மோட்ச நிலை கடவுளுக்கு உரியது. அதில் நமக்கு அவர் பங்கு தருகிறார்.

நரக நிலை சாத்தானுக்கு உரியது. யாராவது கொழுத்துப்போய் அங்கு சென்றால் மகிழ்வது சாத்தான் மட்டுமே."

"கடவுள் பாவியை மன்னிக்க அவன் உடலில் உயிர் இருக்குமட்டும் காத்துக் கொண்டிருக்கிறார்.

சாத்தான் யாரை விழுங்கலாம் என்று எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது."

"'நாம் எப்போதும் கடவுளையே நினைத்துக் கொண்டிருந்தால் சாத்தானின் ஆசை நிறைவேறாது.

கடவுள் நம்மை நித்திய காலமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரால் நம்மை மறக்க முடியாது.

நாமும் அவரை நினைத்து வாழ்ந்தால் சகல விதமான பாவங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்."

கடவுளையே நினைத்து வாழ்வோம்,

இன்றும், என்றும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment