" நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார்."
(அரு.13:35)
"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."
யோவான் நற்செய்தி 13:34
"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்பதை ஏன் இயேசு புதிய கட்டளை என்று சொல்கிறார்?
அது ஏற்கெனவே கொடுக்கப்பட்ட கட்டளை தானே!
ஏற்கனவே கொடுக்கப்பட்ட கட்டளையை ஏன் புதிய கட்டளை என்று சொல்கிறார்?
அதை இப்போது ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து சொல்கிறார்.
முன்பு நீ உன்னை நேசிப்பது போல உனது அயலானை நேசி என்று கூறினார்.
இப்போது "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."
என்று கூறுகிறார்.
அதே கட்டளையின், ஆழத்தை அதிகமாக்கியிருக்கிறார்.
முன்பு சொன்னது நம் அளவுக்கு ஆழம்.
இப்போது சொல்வது அவர் அளவுக்கு ஆழம்.
நாம் நம்மை நேசிப்பதற்கும்
அவர் நம்மை நேசிப்பதற்கும் அளவில் வித்தியாசம் இருக்கிறது.
நாம் அளவுள்ளவர்கள். நம்மீது நாம் கொண்டுள்ள அன்பும் அளவுள்ளதுதான்.
நமது உச்சக்கட்ட அன்பே அளவுக்கு உட்பட்டது தான்.
அதுமட்டுமல்ல நமது அன்பு லௌகீகம் கலந்தது.
நமது ஆன்மீக அன்புகூட, அதாவது கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பு கூட கடவுளிடமிருந்து லௌகீக உதவிகளையே கேட்கிறது.
நமது லௌகீகத்தை ஆன்மீகமாக மாற்றத் தனி முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது.
அருள் வரம் கேட்பது ஆன்மீகம்.
பொருள் வரம் கேட்பது லௌகீகம்.
அருள் வரம் கிடைத்தால் ஆன்மா நேரடியாகப் பயனடையும்.
உதாரணமாக, உத்தம மனஸ்தாப வரம் கேட்டு அது கிடைத்துவிட்டால் உடனடியாக நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நமது ஆன்மா பரிசுத்தமாகும்.
ஆனால் செபத்தில் சம்பள உயர்வு கேட்டு,
அது கிடைத்து விட்டாலும் நமது சம்பளத்தை பிறர் சிநேக உதவிகளுக்குப் பயன்படுத்தும் போதுதான் அது ஆன்மீகமாக மாறும்.
ஆனால் இறையன்பு நூறு சதவீதம் ஆன்மீகமானது, லௌகீகமற்றது. .
இயேசுவின் ஒவ்வொரு அசைவும் ஆன்மீகமானது. அதாவது ஆன்மாவின் மீட்புக்கு நேரடியாக உதவக்கூடியது.
அவர் ஒரு நோயாளியின் மீது கை வைக்கும் போது
முதலில் நோயாளியின் விசுவாசம் உறுதிப்படுகிறது.
அடுத்து அவன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அடுத்து அவன் நோய் குணமாகிறது.
நோய் குணமாவது மட்டும் தான் நமது கண்களுக்குத் தெரியும்.
ஆன்மீக மாற்றங்கள் நமது ஊனக் கண்களுக்குத் தெரியாது.
மனிதர்கள் பலகீனமானவர்கள்.
ஆன்மீக வாதிகளாக இருந்தாலும் அவர்களது சுய அன்பில் கொஞ்சமாவது லௌகீகம் கலந்திருக்கும்.
அன்னை மரியாள் அருள் நிறைந்தவள்.
அவளுடைய அன்பில் சிறிதுகூட லௌகீகம் இல்லை.
அன்னை மரியாள் மட்டுமே அருளால் நிறைந்தவள்.
நீதிமானாகிய சூசையப்பர் கூட மாதாவை ஒரு நிமிடம் சந்தேகப்பட்டு விட்டாரே!
அவரது சந்தேகத்தைப் போக்க விண்ணிலிருந்து கபிரியேல் தூதர் இறங்கி வர வேண்டியிருந்ததே!
நாம் எவ்வளவு முயன்றாலும் மனித பலகீனம் காரணமாக நமது அன்பில் கொஞ்சமாவது லௌகீகம் இருக்கும்.
ஆனால் இயேசுவின் அன்பில் இம்மி அளவுகூட லௌகீகம் இருக்க முடியாது.
"நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்."
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"
என்கிறது திருக்குறள்.
10 அடி நீளம் தாண்ட விரும்புபவன் 20 அடியை நோக்காக வைத்துத் தாண்ட வேண்டும்.
இயேசு நம்மை நேசிப்பது போல நாம் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பிறரை நேசித்தால்தான்
நமது நேசத்தில் ஆன்மீகத்தின் அளவு அதிகம் இருக்கும்.
அன்பின் ஆழத்தைப் பொருத்து லௌகீகத்தின் அளவு இல்லாமையை (Minimum most level) அடுத்து இருக்கும்.
இயேசுவின் அன்பில் லௌகீகமே இல்லை என்பதால் ஆன்மீகத்துக்கு உதவாத எந்த உதவியையும் அவர் செய்ய மாட்டார்.
உடலைச் சார்ந்த நோயில் நாம் சிலுவையைப் பார்த்தால் அது ஆன்மீகம்.
ஆகவேதான் குணமாக்க முடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் உதவியால் புனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.
இப்போது ஒரு உண்மை புரிந்திருக்கும்.
"நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்." என்றால்
"நான் உங்களது ஆன்மாவின் மீட்பை மையமாக வைத்து உங்களை அன்பு செய்வது போல
நீங்களும் மற்றவர்களின் ஆன்மீக மீட்பை மையமாக வைத்து அவர்களை அன்பு செய்ய வேண்டும்." என்று பொருள்.
அதாவது உங்களால் அன்பு செய்யப் படுபவர்கள் ஆன்மீக மீட்பு அடைய வேண்டும்.
நாம் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,
நாம் மற்றவர்கள் மீது செலுத்தும் அன்பு அவர்களுக்கு மோட்சத்துக்கு வழிகாட்ட வேண்டும்.
புனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்த போதும்,
மறு உலகில் வாழும் போதும்
அவர்கள் காட்டும் அன்பு நம்மை விண்ணக நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது.
நாம் இயேசுவின் சீடர்கள்.
அவருடைய நற்செய்திப் பணியை ஆற்ற வேண்டியவர்கள்.
மற்றவர்களை அன்பு செய்வது என்றாலும்,
மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது என்றாலும் ஒரே பொருள் தான்.
இயேசு நம் மீது காட்டும் அன்பு நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்வது போல,
நாம் பிறர் மீது காட்டும் அன்பு அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
நாம் தாகமாக இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது
அவர்களது ஆன்மீக தாகத்தை அதிகரிப்பதற்காகவே.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது
"நான் தாகமாய் இருக்கிறேன்" என்றார்.
அவரது தாகம் ஆன்மாக்கள் மீது கொண்டுள்ள தாகம்.
நமக்கும் ஆன்மாக்கள் மீது தாகம் இருக்க வேண்டும்.
தாகமாக இருக்கும் மற்றவர்களுக்கு நாம் தண்ணீர் கொடுக்கும் போது
அவர்களது ஆன்மீகத் தாகத்தை அதிகரிக்க வேண்டும்.
அப்போதுதான் ஆன்மாக்களின் மீட்புக்காக உழைப்பார்கள்.
நமது நற் செயலை வைத்து மற்றவர்கள் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
புனித பிரான்சிஸ் அசிசி ஏழ்மையை நேசித்தார்.
தன்னைச் சார்ந்தவர்களையும் ஏழ்மையை நேசிக்கச் செய்தார்.
திருச்சபையில் ஏழ்மைப் புரட்சியைக் கொண்டு வர இயேசு அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இயேசு நம்மை நேசிப்பது போல நாம் மற்றவர்களை நேசித்தால்
நாம் இயேசுவைப்போல் வாழ்வதோடு
மற்றவர்களையும் இயேசுவைப்போல் வாழ வைப்போம்.
பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல
நற்செய்திப்படி வாழும் நம்மோடு வாழும் மற்றவர்களும் நற்செய்திப்படி வாழ்வார்கள்.
இயேசு நம்மை நேசிப்பது போல நாமும் மற்றவர்களை நேசிப்போம்.
இயேசு நமக்காகத் தனது உயிரையே தியாகம் செய்தார்.
நாமும் நமது அயலானுக்காக நமது
உயிரையே தியாகம் செய்யத் தயாராக இருப்போம்.
நமது தியாகம் நமது அயலானுக்கு விண்ணகத்துக்கு வழி காட்ட வேண்டும்.
இயேசு நமக்கு என்ன செய்கிறாறோ அதையே நாம் நமது அயலானுக்குச் செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment