"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."
(யோவான் நற்செய்தி 3:16)
கடவுள் மனிதர்களைத் தன் சாயலில் படைத்தார்.
அதற்காகத் தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட முக்கியமான பண்பு அன்பு.
அவர் அன்பு மயமானவர்,
நாம் அன்பு உள்ளவர்கள்.
அவர் அன்பு மயமானவராகையால் அவரது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் அன்பு மயமானவைகளாகவே இருக்கும்.
அவரால் அன்பற்ற செயல் எதையும் செய்ய முடியாது.
நாம் அன்பு மயமானவர்கள் அல்ல.
அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பு நம்மிடம் இருக்கிறது.
அவர் மாறாதவர்.
ஆனால் மனிதர்கள் மாறும் இயல்பு உள்ளவர்கள்.
அவர் அவர்களோடு பகிர்ந்து கொண்ட அன்பை அவர்களால் காப்பாற்றவும் முடியும், இழக்கவும் முடியும்.
கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்பவர்கள் இறையன்பை இழந்து விடுகிறார்கள்.
அப்படித்தான் நமது முதல் பெற்றோர் அவர்கள் செய்த பாவத்தினால் இறையன்பையும், இறை உறவையும் இழந்து விட்டார்கள்.
இறை உறவை இழந்த நிலையிலேயே அவர்களின் வாரிசுகளும் பிறந்தார்கள்.
கடவுள் சர்வ வல்லவர். அவர் நினைத்திருந்தால் ஒரே வார்த்தையில் மனிதர்களின் பாவங்களை மன்னித்திருக்கலாம்.
ஆனால் அவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பின் அளவை தனது செயல் மூலம் நமக்குக் காண்பிக்க விரும்பினார்.
நாம் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
அவர் தான் நமக்காக மனுவுரு எடுத்த இறைமகன் இயேசு கிறிஸ்து.
அவர் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு
தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தார்.
இது கடவுள் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பைக் காட்டுகிறது.
நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு
நாம் இழந்த இறையன்பையும், இறை உறவையும் மீண்டும் பெற்றதுக்கு அவரது அளவற்ற அன்பே காரணம்.
இதை நாம் உணர்கிறோமா?
உணர்ந்தால் நாம் பாவமே செய்ய மாட்டோம்.
ஏனெனில் நாம் பாவம் செய்தால் இயேசு தனது பாடுகளாலும், சிலுவை மரணத்திலும் பெற்றுத் தந்த இறை உறவை மீண்டும் இழக்க நேரிடும்.
நாம் பாவம் செய்யாயாதிருக்க வேண்டுமென்றால்
நாம் இயேசுவின் அன்பைப் பற்றியும், சிலுவை மரணத்தைப் பற்றியும் அடிக்கடி தியானிக்க வேண்டும்.
இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட மற்றொரு பண்பு தேர்வு செய்யச் சுதந்திரம்.(Freedom of choice)
இறைவன் முழுமையான சுதந்திரத்தோடு செயல்படுகிறார்.
அவர் யாருடைய வழி காட்டுதலுக்கும் கட்டுப்பட்டவர் அல்ல.
அவர் நித்திய காலமாக வாழ்கிறார்.
அவர் செயல்பாடுகளில் குறுக்கிட நித்திய காலமாக யாரும் இல்லை.
அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட சுதந்திரத்தில் அவர் குறுக்கிட மாட்டார்.
அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட இறையன்பைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க நமக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
இறையன்பைத் தொடர்ந்து கொண்டிருந்தால் நாம் இவ்வுலக வாழ்வுக்குப் பின் அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வோம்.
இறையன்பை வேண்டாம் என்று தள்ளிவிடுபவர்கள் அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ முடியாது.
அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டியது நாம் தான்.
வாழ வேண்டும் என்று தீர்மானித்தால் அதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் இறைவனே இலவசமாகச் செய்வார்.
வாழ வேண்டாம் என்று தீர்மானிப்பவர்கள் அவரை நித்திய காலமாக இழந்து விடுவார்கள்.
இறையன்பை இழக்கச் செய்வது பாவம் மட்டுமே.
நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாக வாழ்ந்தால் இவ்வுலகில் நாம் இறந்தவுடன் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.
உலகத்தின் இறுதி நாளில் நமது ஆன்மாவோடும் சரீரத்தோடும் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.
அப்பா மகனிடம் காசு கொடுத்து
"உனக்கு விருப்பமானதை வாங்கிக்கொள்" என்று சொன்னால் அவன் பயனுள்ளதை வாங்கிக் கொள்ள வேண்டும்.
பயன் இல்லாததை வாங்கினால் அதன் விளைவுகளை அனுபவிக்கப் போவது அவன் தான்.
நாம் நமது சுதந்திரத்தைப் பாவம் செய்யாமல் பரிசுத்தமாக வாழப் பயன்படுத்துவோம்.
நம்மைப் படைத்தவரோடு நித்திய பேரின்பத்தில் பங்கேற்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment