Thursday, March 7, 2024

"ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். " (லூக்கா நற்செய்தி 18:13)

"ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். " 
(லூக்கா நற்செய்தி 18:13)

எதிர் எதிர் குணங்கள் உள்ள இரண்டு பேர் செய்கின்ற இரண்டு வகைச் செபங்களைச் சுட்டிக் காண்பித்து

அவற்றில் எது சிறந்தது என்று இயேசு விளக்குகிறார்.

ஒருவர் தற்பெருமை மிக்க பரிசேயர்.  பரிசேயர்கள் தங்களைத் தாங்களே பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருந்நவர்கள்.

தற்பெருமையே பெரிய பாவம்.

மற்றவர் வரிதண்டுபவர்.

வரிதண்டுபவர்கள் பரிசேயர்களால் பாவிகள்‌‌ என்று முத்திரை குத்தப்பட்டவர்கள்.

இருவருமே பாவிகள் தான்.

தற்பெருமை மிக்க பரிசேயர் இவ்வாறு செபிக்கிறார்,

"கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரம் போன்ற மற்ற மக்களைப் போலவோ 

இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி

 உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 


வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்;

 என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். " 
(லூக்கா நற்செய்தி 18:11,12)

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு

 வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் 

தம் மார்பில் அடித்துக்கொண்டு,

 "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்று செபித்தார். 
(லூக்கா நற்செய்தி 18:13)

பரிசேயர் தற்பெருமையுடன் செபித்தார்.

வரிதண்டுபவர் தாழ்ச்சியுடன் செபித்தார்.

தற்பெருமை தலையான பாவங்களுள் முதன்மையானது.

செபத்தின் நோக்கமே பாவ மன்னிப்பு பெறுவதுதான். 

பாவம் செய்து கொண்டே செபிப்பது 

தண்ணீரைக் கொண்டு குளிப்பதற்குப் பதில் 

சகதியை அள்ளிப் பூசிக்கொண்டு குளிப்பதற்குச் சமம்.

உண்மையில் அது குளிப்பு அல்ல,
சக்தியில் புறள்தல்.

ஆக செபிக்க வந்த பரிசேயர் பாவத்துடன் திரும்பினார்.

பாவியாக செபிக்க வந்த வரிதண்டுபவர் புண்ணியவானாகத் திரும்பினார்.

எதை எப்படிச் செய்ய வேண்டுமோ‌ அப்படிச் செய்தால்தான் அது தரவேண்டிய பலனைத் தரும்.

எப்படி செபிக்க வேண்டும்?

விசுவாசத்தோடு செபிக்க வேண்டும்.

தாழ்ச்சியுடன் செபிக்க வேண்டும்.

நாம் கடவுளை நோக்கி செபிக்கிறோம்.

கடவுள் சர்வ வல்லபர், நாம் சுயமாக ஒன்றுமில்லாதவர்கள் என்ற உண்மையை விசுவசிக்க வேண்டும்,

அதாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

'ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.

 வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. "

கடவுள் வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்லவர் என்பதையும்,

நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்து அவரால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டால்

நமக்குள் தாழ்ச்சி வந்து விடும்.

கடவுள் சர்வ பரிசுத்தர் என்பதையும், 

நாம் பரிசுத்தத்தனத்தை வேண்டி நிற்கும் பாவிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டால்

"கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" 

என்ற வார்த்தைகளோடு தான் நமது செபத்தை ஆரம்பிப்போம்.

பரிசேயரைப் போல நம்மைப் பற்றி பெருமையாகப் பீத்திக் கொண்டிருக்க மாட்டோம்.

பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்பது தான் உண்மையான செபம்.

பிச்சைக்காரன் பிச்சை கேட்கும்போது,

"அம்மா, பசிக்கிறது, உணவு தாருங்கள்".  என்று தான் கேட்பான்.

"எனக்கு எந்தக் குறையும் இல்லை, ஏதாவது தாருங்கள்"  என்று கேட்க மாட்டான்.

அப்படிக் கேட்டால் ஒன்றும் கிடைக்காது.

பாவ மன்னிப்புக் கேட்ட பாவி மன்னிப்புப் பெற்று பரிசுத்தனாய்த் திரும்பினான்.

 வரிதண்டுபவர் கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.

ஆனால் பரிசேயர் கடவுளுக்கு ஏற்காதவராய் வீடு திரும்பினார்.

"ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்;

 தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்று ஆண்டவர் சொல்கிறார்."

நாம் செபம் சொல்லக் கோவிலுக்குப் போகிறோம்.

செபம் சொல்கிறோம். 
நீண்ட நேரம்  சொல்கிறோம். 

செபத்தில் என்ன கேட்கிறோம்?

"தேர்வில் வெற்றியைத் தாரும்.

நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க அருள் புரியும்.

திருமணம் முடிக்க நல்ல பெண்ணைத் தாரும்.

ஆண் குழந்தை பிறக்க அருள் புரியும்

நோயிலிருந்து குணம் தாரும்."

போன்ற விண்ணப்பங்களுக்கு நமது செபத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

தந்தையிடம் மகன் உதவிகள் கேட்பதில் தவறில்லை.

ஆனால் இறையரசுக்குத் தானே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.

 அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத்தேயு நற்செய்தி 6:33)

என்று இயேசு சொல்கிறார்.

பாவ மாசில்லாமல் பரிசுத்தமாய் வாழ்வது தான் 

இறையரசுக்கும், இறைவனுக்கும் ஏற்புடையது.

சிறிது நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

நமது செபத்தில் பாவ மன்னிப்புக்கும், பரிசுத்த வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

பரிசுப் பொருட்களுக்கு அதிக 
முக்கியத்துவம் கொடுக்கிறோமா?

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment