(அரு. 8:7)
இயேசுவின் போதனைகளின் மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காகவும்,
அவரைச் சோதிப்பதற்காகவும்
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தினார்கள்.
''போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.
இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டனர்.
எதற்காகத் தன்னைக் கேட்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும்.
அவர் அவர்களைப் பார்த்து
"உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார்.
(அரு.8:7)
மறைநூல் அறிஞர்களின் நோக்கம் இயேசுவைச் சோதித்து அவரிடம் குறை கண்டு பிடிப்பது.
அவர் அப்பெண் மீது கல் எறியச் சொன்னால் அவர் இரக்கம் அற்றவர் என்று கூறலாம்.
கல் எறியக் கூடாது என்று சொன்னால் அவர் மோசேயின் சட்டத்தை மீறுகிறவர் என்று கூறலாம்.
அவர் என்ன சொன்னாலும் அதில் குறை இருக்க வேண்டும்.
ஆனால் இயேசு அவர்களது நோக்கத்தைப் பற்றி கவலைப் படவில்லை.
அவர் இரக்கம் உள்ளவர். பாவிகளைத் தேடி அவர்களை மன்னிப்பதற்காகவே உலகிற்கு வந்தவர்.
அவளைப் பாவத்திற்காக மனம் வருந்த வைக்க வேண்டும், அவளை மன்னிக்க வேண்டும், மீண்டும் பாவம் செய்யாயாதிருக்க உதவ வேண்டும்
இவைதான் அவரது நோக்கம்.
அதுமட்டுமல்ல அவளைக் குற்றம் சாட்டியவர்களும் பாவிகளே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
ஆகவே தான் "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்று அவர்களிடம் கூறினார்.
அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
இயேசு மோசேயின் சட்டத்தையும் மீறவில்லை.
பாவியாகிய பெண்ணையும் காப்பாற்றினார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" என்று கேட்டார்.
அவர், "இல்லை, ஐயா" என்றார்.
இயேசு "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.
இயேசு அவளது பாவங்களை மன்னித்ததோடு,
"இனிமேல் பாவம் செய்யாதீர்" என்று புத்தி சொல்லி அனுப்பினார்.
இந்நிகழ்விலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்?
1. நாம் அனைவரும் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2. நமது பாவங்களுக்கு நாம் மனம் வருந்த வேண்டுமே தவிர மற்றவர்களது பாவங்களைச் சுட்டிக் காண்பிக்கக் கூடாது.
3.இயேசு இரக்கம் உள்ளவர் என்பதை ஏற்றுக் கொண்டு, நம்மீது இரங்கி நமது பாவங்களை மன்னிக்கும்படி வேண்ட வேண்டும்.
4.அதன்பின் பாவம் செய்யக் கூடாது.
5.மறைநூல் அறிஞர்கள் பாவியை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள், அவளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க.
நாம் இயேசுவை பாவிகளிடம் அழைத்துச் செல்ல வேண்டும், அவர்கள் பாவ மன்னிப்பு பெற.
6.சட்டம் பேசுவதை விட மன்னிப்பதே சிறந்த பண்பு.
கடவுள் சட்டத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் மனிதனாகப் பிறந்திருக்க மாட்டார்.
அவரது மன்னிக்கும் பண்பே அவர் மனிதனாகப் பிறந்து, நமக்காக பாடுகள் பட்டு மரிப்பதற்குக் காரணமாக இருந்தது.
நம்மை அவரது சாயலில் படைத்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் மன்னிப்பதைப் பார்த்து மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும்.
மன்னிப்போம்.
மன்னிக்கப் படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment