Monday, March 4, 2024

"தந்தையே, இவர்களை மன்னியும்."

"தந்தையே, இவர்களை மன்னியும்."


"தாத்தா, நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத்தானே இயேசு பாடுகள் பட்டு மரித்தார்?"

'''ஆமா. அதில் என்ன திடீர் சந்தேகம்?"

"அதில் ஒரு சந்தேகமும் இல்லை.

அடுத்த கேள்விக்கு முன்னுரையாக இந்தக் கேள்வி.

இயேசுவின் மரணத்துக்குக் காரணம் யூத மதத் தலைவர்கள் மட்டுமா அல்லது நாமுமா?"

"நாமும் தான்."

'''அப்படியானால் 

"அப்போது இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்."
(லூக். 23:34)

என்ற வசனத்தில் உள்ள 'இவர்களை' யூத மதத் தலைவர்களை மட்டும் குறிக்குமா அல்லது நம்மையும் குறிக்குமா?"

"'இயேசுவின் சிலுவை மரணத்துக்கு மொத்த மனுக் குலமும் தான் காரணம்.

அனைத்து மனிதர்களின் பாவ மன்னிப்புக்காகவும் தான் அவர் மரித்தார்.

ஆகவே அனைத்து மனிதர்களையும் தான் குறிக்கும்."

"தந்தை மகனின் செபத்தைக் கேட்டிருப்பார் அல்லவா?"

"உறுதியாக."

"அப்படியானால் நம் அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விட்டன அல்லவா?"

"அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகிறாய் என்பது தெரிகிறது.

ஆகவே நான் முந்திக் கொள்கிறேன்.

இப்போது நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்.

உங்கள் வீட்டில் மத்தியானச் சாப்பாடு தயாராகியிருக்குமா?"

"நாங்கள் ஒரு மணிக்குச் சாப்பிட வேண்டிய சாப்பாட்டை அம்மா பதினொரு மணிக்கே தயாரித்து விடுவார்கள்."

"இப்போது மணி12. அப்போ உன் 
வயிறு நிரம்பியிருக்க வேண்டுமே."

"தாத்தா, அம்மா சாப்பாட்டைத் தயாரித்து விடுவார்கள் என்றுதான் சொன்னேன்.

சாப்பாடு இப்போது தயாராக இருக்கும்.

நான் வீட்டுக்குப் போய் 'அம்மா, சாப்பாடு ' என்று கேட்டவுடன் சாப்பாடு தருவார்கள்.

நான் சாப்பிட்டவுடன் வயிறு நிறையும்."

"இப்போது உனது கேள்வியைக் கேள்."

"தாத்தா, தந்தை மகனின் செபத்தைக் கேட்டு நமது பாவங்களை மன்னித்திருப்பார்.

மன்னிக்கப் பட்ட பாவங்களுக்காக இப்போது நாம் ஏன் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்?"

"உன் அம்மா தான் உனது சாபாபாட்டைத் தயாரித்து விட்டார்களே.

இப்போது ஏன் நீ சாப்பாடு கேட்க வேண்டும்?"

" சாப்பாடு தயாராகியிருக்கா விட்டால் நான் சாப்பாடு கேட்டும் பயனில்லை.

சாப்பாடு தயாராகி விட்டது.

தாத்தா, இப்போது புரிந்து விட்டது.
என் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது.

இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து அவற்றுக்கான மன்னிப்பைத் தந்தையிடமிருந்து பெற்று விட்டார்.

நமது பாவங்களுக்கு மன்னிப்பு ரெடி.

நாம் அதைக் கேட்டுப் பெற வேண்டும்.

அதைக் கேட்டுப் பெறுவதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம்."

""உலகின் பாவங்களைப் போக்குபவர் இயேசு.

நாம் கேட்டால் நமது பாவங்களைப் போக்குவார்

நமக்காகப் பாடுகள் பட்ட இயேசுவோடு நாம் ஒத்துழைக்க வேண்டும்

ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் கேட்டு நம்மைக் கடவுள் படைத்தாரா, கேளாமல் படைத்தாரா?"

"அவர் படைத்த பிறகு தான் நாம் இருக்கிறோம்.

படைக்கப்படுமுன் நாம் இல்லை.

இல்லாத நம்மிடம் எப்படிக் கேட்க முடியும்.

நம்மைக் கேளாமல் தான் படைத்தார்."

"'அதேபோல் துவக்கத்திலும், அவ்வப்போதும் நமது மீட்புக்கு வேண்டிய அருள் வரங்களை நாம் கேளாமலேயே நமக்குத் தருகிறார்.

 நாம் கேளாமலேயே தரும் அருள் வரங்களை ஏற்று மீட்புப் பாதையில் தொடர வேண்டும்.

முதலில் கேளாமல் தந்தவர் அடுத்து கேட்கக் கேட்கத் தந்து கொண்டேயிருப்பார்.

அவற்றைப் பயன்படுத்தி மீட்புப் பாதையில் முன்னேற வேண்டும்.

அவர் தரும்போது தருவதை ஏற்க மறுத்து விட்டால் விளைவுகளுக்கு நாம்தான் பொறுப்பு.

தமது உள்ளத்தில் கடவுள் கொடுக்கும் தூண்டுதல்களை ஏற்க‌ மறுத்து,

 தமது விருப்பம் போல் செயல்படுபவர்கள்

மீட்புப் பாதையில் நடக்க மறுக்கிறார்கள்.

இருந்தாலும் அவ்வப்போது அழைத்துக் கொண்டுதானிருப்பார்.

அழைக்கும் போது ஏற்க வேண்டும்.

அனைவரையும் மீட்க வேண்டும் என்பது தான் அவர் ஆசை.

மீட்கப்பட நமக்கும் ஆசை இருக்க வேண்டும்.

ஒத்துழைத்தால் மீட்புப் பெறுவோம்.

நமது பிரிவினை சபையினரில் சிலர் 

"இயேசு நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்து அவற்றை மன்னித்து விட்டார்.

ஆகவே அவரை மீட்பராக ஏற்றுக் கொண்டாலே போதும்.

நாம் பாவப் பரிகாரம் செய்யாமலேயே மீட்கப்பட்டு விடுவோம்."

என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் திருமுழுக்கு பெற்றவுடன் இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்கிறார்கள்.

அவர்கள் எண்ணுவது தவறு.

இயேசு நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்யவே மரித்தார் என்பது உண்மை.

இதனால் பாவ மன்னிப்புத் தயாராகி விட்டது.

அதைப் பெறுவதற்கான
 வழியும் பிறந்து விட்டது.

அவ்வழியே சென்று நமது பாவங்களுக்காக மனம்‌ வருந்தி மன்னிப்புக் கேட்டால்தான் நமது
பாவங்கள் மன்னிக்கப்படும்.

நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தால்தான் உத்தரிக்கிறத் தல வேதனை குறையும்.

 நமது பாவங்களுக்கான மன்னிப்பு இயேசுவிடம் தயாராக உள்ளது.

பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் அதைப் பெற்றுப் பயன் பெறுவோம்."

"தாத்தா, இயேசு அனைத்து மனிதர்களின் பாவ மன்னிப்புக் காகவும் தானே மரித்தார்.

நாம் கிறிஸ்தவர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்கிறோம்.

கிறிஸ்தவர்கள் அல்லாதோர் பாவ சங்கீர்த்தனம் செய்ய முடியாது.

அவர்கள் எப்படிப் பாவ மன்னிப்புப் பெறுவார்கள்?"

"அவர்களுக்காகவும் தான் இயேசு மரித்தார்.

அவர்கள் பாவங்களுக்காக வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்டால் கடவுள் அவர்களின் பாவங்களை மன்னிப்பார்.

பாவ சங்கீர்த்தனம் செய்ய சந்தர்ப்பமே கிடைக்காத பட்சத்தில் கத்தோலிக்கர்ளும் உத்தம மனஸ்தாபம் மூலம் பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம்.

ஆனாலும் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பாவ சங்கீர்த்தனம் செய்து விட வேண்டும்.

நமது பாவ மன்னிப்புக்காகத்தான் இயேசு தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.

அவர் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததின் பயனை நாம் அடைய வேண்டுமென்றால்

அவர் ஏற்படுத்திய பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் பாவ மன்னிப்பு பெற்று 

பரிசுத்தர்களாக வாழ வேண்டும்.

 ஆண்டவர் இயேசுவின் விருப்பப்படி வாழ்வோம், இன்றும், என்றும்.

லூர்து செல்வம். 

No comments:

Post a Comment