"ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார்.
அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு,
அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
அவ்வழியே வந்த குருவும்,
லேவியரும் அவரைப் பார்த்தும் பார்க்காதது போல் போய் விட்டார்கள்.
ஆனால் அவ்வழியே வந்த சமாரியர் ஒருவர் அவரைப் பார்த்தபோது அவர்மீது பரிவு கொண்டார்.
அவர் அவரை அணுகி
காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து,
அவற்றைக் கட்டி,
தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி,
ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.
மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து,
"இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.
உவமையில் வரும் குரு, லேவியர்,
சமாரியர் ஆகிய மூவருள்
"அடிபட்டுக் கிடந்தவருக்கு இரக்கம் காட்டிய சமாரியரே அவருக்கு அயலான்"
என்ற கருத்தை இயேசு புரிய வைத்திருக்கிறார்.
நாமும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது உவமை கற்பிக்கும் பாடம்.
இயேசு சொன்ன இந்த உவமையைப் பற்றி தியானித்தால்
அதில் பொதிந்து கிடக்கும் மற்றொரு பேருண்மை வெளிவரும்.
யூதர்களைப் பொருத்த மட்டில் எருசலேம் கோவில் நகரம், கடவுள் வாழும் இடம்.
கடவுள் எங்கும் வாழ்கிறார்.
சமூக இறை வழிபாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து
அந்த இடத்தில் சமூகமாக இறை வழிபாடு செய்கிறோம்.
அந்த இடத்திற்குப் பெயர்தான் கோவில்.
யூதர்களுக்கு எருசலேமில் மட்டுமே கோவில் இருந்தது.
பாஸ்காத் திருவிழா, கூடாரத் திருவிழா, பெந்தேகோஸ்தே திருவிழா போன்ற திருவிழாக்களுக்கு உலகெங்கும் வாழும் யூதர்கள் எருசலேமுக்கு வருவது வழக்கம்.
எருசலேமில் கோவில் இருந்ததாலும் அங்கு இறைவனது பிரசன்னம் இருந்ததாலும்
எருசலேம் என்ற வார்த்தையையே இறைவன் என்ற பொருளில் இயேசு இந்த உவமையில் கையாள்கிறார்.
எரிக்கோ வியாபார நகரம்.
எருசலேம் இறைவனைச் சார்ந்தது.
எரிக்கோ உலகைச் சார்ந்தது.
ஒருவன் எருசலேமை விட்டு எரிக்கோவுக்குப் போகிறான் என்றால் இறைவனை விட்டு விட்டு உலகுக்குப் போகிறான் என்பது பொருள்.
இறைவனை விட்டு உலகுக்குப் போகின்றவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சமாரியர் ஒருவர் தீர்த்து வைக்கிறார்.
உவமையில் வரும் பயணிக்கு ஏற்படுவது உடல்ரீதியான பிரச்சினை.
ஆனால் அது குறிப்பது கடவுளை விட்டு விலகி உலகுக்கு போகின்றவர்களுக்கு ஏற்படும் ஆன்மீகப் பிரச்சினை, பாவம்.
கள்வர் அலகைகள். லௌகீக வாழ்க்கை வாழ்பவர்களைப் பாவத்தில் விழவைப்பவை
சமாரியர் ஆன்மீகப் பிரச்சினையான பாவத்திற்குத் தீர்வு காண உலகில் மனிதனாகப் பிறந்த ஆண்டவர் இயேசு.
அதற்கு அவர் முதலில் பயன்படுத்துவது திராட்சை ரசமும், எண்ணெயும்.
எண்ணெய் பரிசுத்த ஆவியின் வருகைக்காக நாம் பெறும் ஞானஸ்நானத்திலும், உறுதிப்பூசுதலிலும் பயன்படுத்தப்படுவது.
திராட்சை இரசம் திவ்ய நற்கருணையைக் குறிக்கும்.
இவை நமது ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான தேவத்திரவிய அனுமானங்களைக் குறிக்கின்றன.
சாவடி கத்தோலிக்கத் திருச்சபை.
இயேசு பாவப் பிரச்சினையில் கஷ்டப்படும் நம்மைக் கவனிக்கும் பொறுப்பைத் தானே நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையிடம் ஒப்படைக்கிறார்.
"நான் திரும்பி வரும்போது"
என்ற வார்த்தைகள் இயேசுவின் இரண்டாவது வருகையைக் குறிக்கும்.
இயேசுவின் நல்ல சமாரியன் உவமையைத் தியானித்தபின் நம் மனதில் தோன்றும் எண்ணங்கள்:
1.நாம் உலக ரீதியான வாழ்க்கைக்கு (எரிக்கோ) வரும்போதுதான் அலகைகள் நம்மைப் பாவத்தில் விழச் செய்கின்றன.
2. ஆகவே எப்போதும் இறைப் பிரசன்னத்திலேயே (எருசலேம்)
இருக்க வேண்டும்.
3.நமது ஆன்மீக வாழ்க்கையை முற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வசம் ஒப்படைத்து விட வேண்டும்.
4. தேவத்திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெற வேண்டும்.
எப்போதும் இறைப் பிரசன்னத்திலேயே வாழ்வோம்.
பாவத்திலிருந்து தப்பிப்போம்.
இயேசு ஒருவரே நமது மீட்பர்.
இயேசுவின் ஒவ்வொரு உவமையிலும் அவரது திருச்சபையைப் பற்றிய ஒரு மறையுண்மை இருக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment