Tuesday, March 5, 2024

அருள் நிறைந்த மரியே வாழ்க!

அருள் நிறைந்த மரியே வாழ்க!


"தாத்தா, எனக்கொரு சந்தேகம்!"

"கேளு."

"கபிரியேல் தூதர் மாதாவைப் பார்த்து 

" அருள் நிறைந்தவளே வாழ்க,"
என்று வாழ்த்தினாரா?

அல்லது 

 "அருள்மிகப் பெற்றவரே வாழ்க!"

 என்று வாழ்த்தினாரா?"

"'நீ என்ன நினைக்கிறாய்?

மாதா அருள் நிறைந்தவளா?

அருள்மிகப் பெற்றவரா?"

''மாதா அருள் நிறைந்தவள் தான்.

ஒரு பாத்திரம் தண்ணீரால் நிறைந்திருக்கிறது என்றால்

அதில் தண்ணீரைத் தவிர வேறொன்றுக்கும் இடமில்லை என்று அர்த்தம்.

ஆனால் மிக என்ற வார்த்தைக்கு இந்தப் பொருள் வராது.

மிகுதி என்றால் அதிகம் என்றுதான் பொருள்.

கால் பாத்திரத்தை விட அரைப் பாத்திரம் மிகுதி.

அரைப் பாத்திரத்தை விட முக்கால் பாத்திரம் மிகுதி.

முழுமை என்ற பொருள் வராது. 

அன்னை மரியாள் அருளால் முழுமையாக நிறைந்தவள்.

அவளிடம் அருளைத் தவிர அதற்கு எதிரான எதுவும் இருந்திருக்க முடியாது.

ஆகவே கபிரியேல் தூதர் மாதாவைப் பார்த்து 

" அருள் நிறைந்தவளே வாழ்க,"
என்றுதான் வாழ்த்தினார்."

'"Very good. ஆகவே நாமும் மங்கள வார்த்தை செபம் சொல்லும் போது

"அருள் நிறைந்த மரியே வாழ்க"
என்று தான் சொல்ல வேண்டும்.

இதோடு தொடர்புடைய மற்றொரு உண்மையையும் சொல்லி விடுகிறேன்.

அருள் இறைவனது கொடை.

கொடை என்றால் இலவசமாகக் கொடுக்கப் படுவது.

அருள் தான் ஆன்மீக வாழ்வின் உயிர்.

ஒரு ஆன்மாவில் இறை அருளின் அளவு கூடக் கூட ஆன்மீக வாழ்வின் தரமும் அதிகரிக்கும்.

மரியாளைத் தவிர மற்ற எல்லா புனிதர்களும் சென்மப் பாவத்துடன் தான் உற்பவித்தார்கள்.

ஞானஸ்நானத்தின் போது தான் அதிலிருந்து விடுதலை பெற்றார்கள்.

ஆனால் மரியாள் மட்டும் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தாள்.

மற்ற எல்லா புனிதர்களையும் விட அன்னை மரியாள் மேலானவள்.

மற்ற புனிதர்கள் அருள் மிகப் பெற்றவர்கள்.

அன்னை மரியாள் மட்டும் அருள் நிறைந்தவள்."

"உற்பவத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் மரியாள் ஆன்மீகத்தில் முழுமையாக வாழ்ந்தாள்.

கடவுளின் தாயாகிய அவள் மட்டும் தான் கடவுளின் அடிமையாக ஆன்மீக வாழ்வை ஆரம்பித்தாள்.

"இதோ ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக் கடவது."

கடவுளின் அடிமையாக வாழ்ந்தாள்.

கடவுளின் அடிமையாக மரித்தாள்.

ஒரு நொடி கூட அடிமைத் தனத்திலிருந்து பின் வாங்கவில்லை.

அடிமை உரியவரின் சொல்லுக்கு ஏன் என்று கேட்காமல் கீழ்ப்படிவான்.

மரியாளும் அப்படியே செய்தாள்.

நாசரேத்தில் சொந்த வீடு இருந்தது.

ஆனால் கடவுள் நிறை மாதக் கர்ப்பிணியான அவள் கணவனுடன் பெத்லகேமுக்குப் போக வேண்டும் என்று விரும்பினார்.

போனாள்.

சாண நாற்றமெடுக்கும் மாட்டுத் தொழுவத்தில்தான் தான்‌ பிறக்க வேண்டும் என்று இயேசு ஆசைப்பட்டார்.

மரியாளும் அப்படியே அவரைப் பெற்றாள்.

குழந்தையை எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் போங்கள் என்று கபிரியேல் தூதர் சொன்னார்.

ஒரு வார்த்தை பேசாமல் மரியாள் கீழ்ப்படிந்தாள்.

அங்கே மரியாளும், சூசையப்பரும், குழந்தை இயேசுவும் அநாதைகள் போல வாழ்ந்தார்கள்.

ஊருக்கு திரும்பச் சொன்னபோது திரும்பினார்கள்.

நாசரேத்தில் வாழும் போது சூசையப்பர் மரணம் அடைய வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று மாதா இயேசுவிடம் கேட்கவில்லை.

இயேசுவின் பாடுகளின் போது துவக்கம் முதல் இறுதி வரை
மாதா மகனைப் பின் பற்றினார்.

அளவிடமுடியாத வியாகுலத்தை அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.

இயேசு விண்ணகம் எய்திய பின் சீடர்களையும், திருச்சபையையும் தாயாக இருந்து வழி நடத்தினாள்.

அன்னை இறைவனின் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள்.

பூமியில் தன்னை முழுமையாக இறைவனின் அடிமையாக அர்ப்பணித்து வாழ்ந்த மரியாளை

இறைவன் விண்ணுலகுக்கு ஆன்ம சரீரத்தோடு எடுத்துக் கொண்டார்.

இறைவன் விண்ணகத்தில் அவளை மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தினார்.

விண்ணக மண்ணக அரசியாக மரியாள் முடி சூட்டப்பட்டாள்.

இன்று விண்ணகத்திலும் மரியாள் அர்ப்பண வாழ்வுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

பூமியில் வாழும் அனைத்து மனிதர்களின் ஆன்மீக நலனுக்காக தன் மகனிடம் பரிந்து பேசுவது மட்டுமே அவளது இன்றைய பணி.

பூமியில் தன் அன்னையின் சொல்லைத் தட்டாமல் வாழ்ந்த இயேசு மோட்சத்திலும் அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மரியாள் = முற்றிலும் அர்ப்பண வாழ்வு.

அன்னை மரியாள் என்று ஆசையோடு அழைக்கிறோம்.

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்ற பழமொழி நம் எல்லோருக்கும் தெரியும்.

இயேசுவின் தாயை நமது தாயாக ஏற்றுக் கொண்டுள்ள நாம்

தாயைப் போல, அவளது பண்புகளுடன் வாழ்கிறோமா?

 கானாவூர்த் திருமணத்தில் நம் அன்னை பணியாளரிடம்,

 "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்."
(அரு. 2:5)

என்று கூறிய வார்த்தைகள் நமக்கும் சேர்த்து தானே!

நாம் இறைமகன் இயேசுவின் பணியாளர்கள் தானே!

மரியாள் தன் மகனின் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்ததுபோல

நாமும் இயேசுவின் பணிக்கு நம்மை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்கிறோமா?

நாம் நமது பணிக்கு நம்மை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்கிறோம்.

நமக்கு வேண்டியதைக் கேட்கத்தானே தாயிடமும் போகிறோம், மகனிடமும் போகிறோம்.

ஆரம்பம் முதல் இறுதி வரைத் தன் மகனின் சிலுவைப் பாதையில் நம் தாய் நடந்தார்களே,

நாம் நமக்குத் துன்பம் வந்தால் அதிலிருந்து விடுதலை பெற அல்லவா தாயின் திருத்தலங்களுக்கு நடையாய் நடக்கிறோம்!

தாயைப் போல பிள்ளை என்று சொன்னால் போதாது,

தாயைப் போல வாழ்வோம்.

அன்னையைப் போலவே நாமும் வாழ்வோம் அர்ப்பண உணர்வுடன்.

ஆண்டவரின் அடிமையாக வாழ்ந்தாள் நம் அன்னை.

நாமும் அப்படியே வாழ்வோம்.

"இயேசுவே, நாங்கள் உமது அடிமைகள்.

உமது வார்த்தை எங்களில் வாழ்வாக வரம் தாரும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment