"ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்."
(அரு. 13:14)
புனித வியாழனன்று ஜான் மார்க்கின் இல்லத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்தன.
1. இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.
2. திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
3.தனது சீடர்களுக்குக் குருப் பட்டம் கொடுத்தார்.
"இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.
பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்."
இயேசு கடவுள்.
சர்வ வல்லபர்.
சீடர்கள் அவரால் படைக்கப்பட்டவர்கள்.
படைத்தவர் படைக்கப்பட்டவர்களின் பாதங்களைக் கழுவுகிறார்.
அவரைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனுடைய பாதங்களையும் கழுவுகிறார்.
பதினொரு அப்பாவிச் சீடர்களின் பாதங்களை மட்டுமல்ல,
திட்டம் போட்டு அவரைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனுடைய பாதங்களையும் கழுவுகிறார்.
மனிதர்கள் எப்படி மாறினாலும் அவர்கள் மேல் கடவுள் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது என்பதற்கு இயேசு யூதாசின் பாதங்களைக் கழுவியது ஒரு எடுத்துக்காட்டு.
"ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.
(அரு. 13:14,15)
இயேசு நமக்கு முன்மாதிரிகையாகவே தனது சீடர்களின் பாதங்களைக் கழுவினார்.
பாதங்களைக் கழுவியது நாம் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதைக் குறிக்கும்.
தொண்டு செய்யும்போது சமூகத்தில் நமது அந்தஸ்தைப் பற்றி கவலைப் படக்கூடாது.
மற்றவர்கள் அனைவருக்கும்
நாம் தொண்டர்கள் என்ற எண்ணம் மட்டும் இருக்க வேண்டும்.
நமது அயலானில் நாம் இறைவனைக் கண்டால் தொண்டு செய்வது இறைப்பணியாக மாறிவிடும்.
நமது அயலானுக்கு என்ன செய்தாலும் அதைத் தனக்கே செய்வதாக இயேசு கூறியிருக்கிறார்.
புனித வியாழனன்று நமது கோவிலில் நடைபெறும் பாதம் கழுவுதல் வெறும் சடங்கல்ல.
அது இறைவழிபாடு.
நாம் சமூகத்தில் இறைவனுக்காகச் செய்யும் பிறர் பணியும் இறைவழிபாடு தான்.
பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யும் தொண்டும்,
பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யும் தொண்டும்,
சகோதர சகோதரிகள் ஒருவருக்கு ஒருவர் செய்யும் தொண்டும்
இறைவழிபாடு தான்.
இறைவனது மகிமைக்காகச் செய்யும் அனைத்து செயல்களும் இறைவழிபாடு தான்.
ஒரே வரியில்,
தொண்டுகளால் ஆன வாழ்க்கையே இறைவழிபாடுதான்.
சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு தன்னையே அவர்களுக்கு உணவாக அளிக்கிறார்.
அதற்காகத் திவ்ய நற்கருணையை ஏற்படுத்துகிறார்.
ஆட்டுக்குட்டியை வெட்டி கடவுளுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து விட்டு
பலிப்பொருளை ஒப்புக் கொடுத்தவர்கள் உண்பது வழக்கம்.
வெள்ளிக்கிழமை மாலை விண்ணகத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப் படவிருக்கும் பலிப் பொருளாகிய தன்னை
வியாழக்கிழமை இரவே தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்.
கடவுளாகிய அவரால் எல்லாம் இயலும்.
தனது வல்லமையால் அப்பத்தைத் தனது உணவாகவும், திராட்சை இரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றித் தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்.
அதன்பின் தனது சீடர்களுக்குக் குருப்பட்டம் கொடுக்கிறார்.
இரத்தம் சிந்தி தான் ஒப்புக் கொடுக்கவிருக்கும் சிலுவைப் பலியை இரத்தம் சிந்தாத விதமாக உலகம் உள்ளளவும் ஒப்புக் கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு.
அப்பத்தைத் தனது உடலாகவும்
திராட்சை இரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றும் தனது வல்லமையைத் தனது சீடர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.
அன்றைய தினம் முதல் இன்றைய தினம் வரை வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குருக்கள் இயேசு ஒப்புக் கொடுத்த திருப்பலியை ஒவ்வொரு வினாடியும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகம் உள்ளளவும் நிறைவேற்றுவார்கள்.
ஒவ்வொரு வினாடியும் உலகில் ஏதாவது ஒரு இடத்தில் திருப்பலி எழுந்தேற்றம் நடந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வினாடியும் இறைமகன் இறைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்.
"எங்கள் விண்ணகத் தந்தையே!
உமது திருமகன் இயேசு கிறிஸ்துவின் வேதனை மிகுந்த பாடுகளைப் பார்த்து
எங்கள் மீதும்,
எங்கள் குடும்பங்களின் மீதும்,
அகில உலகத்தின் மீதும்
இரக்கமாயிரும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment