Sunday, March 24, 2024

''பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்."(மாற்கு நற்செய்தி 14:10)

" பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்."
(மாற்கு நற்செய்தி 14:10) 

தினசரி செய்தித் தாளில் இப்படி ஒரு செய்தி வெளியாகியிருந்தது:

"கடலில் மீன் பிடிக்கச் சென்ற படகைக் காணவில்லை.

நாளைக் காலையில் பயங்கரமான புயல் வீசப் போகிறது என்று கால நிலை ஆராய்ச்சி மையம் செய்தி வெளியிட்டிருந்தும்

அதைப் பொருட்படுத்தாது கடலில் மீன் பிடிக்கச் சென்ற படகைக் காணவில்லை."

கடலில் படகு காணாமல் போனதற்குக் காரணம்

கால நிலை ஆராய்ச்சி மையமா?
கடலில் வீசிய புயலா?
செய்தியை வெளியிட்ட தினசரியா?

இவற்றில் எதுவுமில்லை.

படகில் சென்றவர்கள் தான் காரணம்.

தினமும் பைபிள் வாசிக்கிறோம்.

எதற்காக வாசிக்கிறோம்?

இறைவன் அளிக்கும் நற்செய்தியின் படி வாழ.

எப்படி?

ஆதியாகமத்தில் விண்ணும் மண்ணும் படைக்கப்பட்ட செய்தி தரப்பட்டிருக்கிறது.

அதை வாசித்து விட்டு இறைவனின் நன்மைத்தனத்தையும், சர்வ வல்லமையையும் பற்றித் தியானித்திருக்கிறோமா?

ஒன்றும் இல்லாமையிலிருந்து நம்மை அவருடைய சாயலில் படைத்ததற்காக அவருக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

ஆனால் நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் தின்றதை  
வாசித்து விட்டு

அவர்களைப் பின்பற்றி 

நாம் செய்யக்கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.

நல்லதை வாசித்து விட்டு நன்றி கூறவும் மாட்டோம்,

செய்யக்கூடாததை வாசித்து விட்டு அதை செய்யாமலும் இருக்க மாட்டோம்.

இதுதான் நமது மனித புத்தி.

யூதாசைப் பற்றி வாசித்து விட்டு அவன் செய்ததை நாம் செய்யாதிருக்கிறோமா?

 அல்லது,

நாமும் யூதாஸாக மாறுகிறோமா? 

சிந்தித்துப் பார்ப்போம்.

யூதாசை எதற்காக இயேசு அப்போஸ்தலர் ஆக்கினார்.

நற்செய்தியை அறிவிக்க.

இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். 


 இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார். 


 அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள். 
(லூக்கா நற்செய்தி 9:1,2,6)

ஆக இயேசு பன்னிருவரையும் நற்செய்தியை அறிவிக்க அனுப்பினார்.

யூதாசும் பேய்களை ஓட்டினார், 
உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்த்தார், நற்செய்தியை அறிவித்தார்.

இது நாம் பின்பற்ற வேண்டிய செயல்.

செய்கிறோமா?

எத்தனை பேருக்கு நற்செய்தியை அறிவித்திருப்போம்?

யூதாசிடம் பண ஆசை இருந்தது.
பணத்திற்கு ஆசைப்பட்டு அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்.

நாம் எப்போதெல்லாம் ஆசைப்படக் கூடாத பணத்திற்கு ஆசைப் படுகிறோமோ அப்போதெல்லாம்
யூதாசாக மாறுகிறோம்.


 இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறோம்.


 "வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே" என்று மறைநூல் கூறுகிறது. 
(1 திமொத்தேயு 5:18)

கிறிஸ்தவன் அவன் செய்கிற வேலைக்கு உரிய கூலியை வாங்கும் போது புண்ணியம் செய்கிறான்.

ஆனால் இலஞ்சம் வாங்கும்போது இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான்.

உலகம் கிறிஸ்தவனின் செயலை வைத்து தான் கிறிஸ்துவை மதிப்பீடு செய்யும்,

நாம் மாணவனின்   செயலை வைத்து அவன் படித்த பள்ளிக்கூடத்தை மதிப்பீடு செய்வது போல.

கிறிஸ்தவர்கள் நல்லவர்களாக நடந்தால் உலகில் கிறிஸ்துவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

கிறிஸ்தவர்கள் கெட்டவர்களாக நடந்தால் உலகில் கிறிஸ்துவுக்குக் கெட்ட பெயர் கிடைக்கும்.

கிறிஸ்துவுக்குக் கெட்ட பெயர் கிடைக்க வைப்பதும் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வதும் ஒன்று தான்.

பரிசேயர்கள் அவர் மேல் பழி சுமத்தி தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

பாவம் செய்யும் போது நாம் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறோம்.

யூதாஸ் ஒரு முறை தான் காட்டிக் கொடுத்தான்.

நாம் எத்தனை முறை காட்டிக் கொடுத்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொரு முறைச் சாவான பாவம் செய்யும்போதும் இயேசுவைச் சிலுவையில் அறைகிறோம்.

நம்மைப் படைத்து பராமரித்து வரும் கடவுளை எத்தனை முறை சிலுவையில் அறைந்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் பெற்ற பிள்ளை நம்மை அடித்தால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?

அப்படித்தானே இயேசுவும் நம்மைப் பற்றி நினைப்பார்.

பைபிள் வெறுமனே வாசிப்பதற்கு மட்டுமல்ல,

பாடம் கற்று, கற்ற பாடத்தை வாழ்வதற்கும் தான்.

ஏவாளை ஏமாற்றிய சாத்தானிடமிருந்து கூட பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,

யாரையும் ஏமாற்றினால் அதற்குரிய தண்டனை கிடைக்கும்

சாத்தானுக்குக் கிடைத்து போல.

விசுவாசத்தில் உறுதியாக இருக்க  வேண்டும் என்று அபிரகாம் பாடம் கற்பிக்கிறார்.

ஆண்டவரைக் காட்டிக் கொடுத்த யூதாசிடமிருந்து மிக முக்கியமான பாடம் கற்று, அதன்படி வாழ வேண்டும்.

ஒருவன் ஒரே நேரத்தில் இயேசுவுக்கும், பணத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.

பணத்திற்கு ஊழியம் செய்பவர்கள் எவ்வளவு உயரிய பதவியில் இருந்தாலும் இயேசுவைக் காட்டிக் கொடுப்பார்கள்.

கையில் பணம் இருக்கிறதா, அதை இறைப்பணியில் செலவழிப்போம்.

பணத்தால் இறைவனை விற்கவோ, வாங்கவோ முடியாது.

செய்த பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டு அழுவோம்.

இது இராயப்பர் கற்பிக்கும் பாடம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment