Sunday, March 17, 2024

"நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல."( அரு. 8:23)

'நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல."
( அரு. 8:23)


நாம் மண்ணுலகில் பிறந்தவர்கள். மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயேசு மனித சுபாவத்தில் மண்ணுலகில் பிறந்தவர்.

மண்ணுலகிலேயே வாழ்ந்து மரித்தார்.

ஆனால் தேவ சுபாவத்தில் விண்ணுலகில் வாழ்பவர்.

மண்ணுலகுக்கும்,  விண்ணுலகுக்கும் என்ன வேறுபாடு?

மண்ணுலகம் இறைவனால் படைக்கப்பட்டது.   இடம், நேரத்துக்கு உட்பட்டது. ஆகவே துவக்கமும் முடிவும் உள்ளது.

விண்ணுலகம், அதாவது, மோட்சம் நித்திய இறைவன் நித்திய காலமும் வாழும் நிலை. நேரத்துக்குக்கும், இடத்துக்கும் அப்பாற்பட்டது.
(Heaven is beyond time and space)

மோட்சம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.

அதற்கு துவக்கமும், முடிவும் இல்லை.

இறைமகன் துவக்கமும், முடிவும் இல்லாத விண்ணகத்திலிருந்து,

துவக்கமும், முடிவும் உள்ள மண்ணகத்துக்கு, அதாவது, உலகத்துக்கு இறங்கி வந்து,

மனிதனாகப் பிறந்தார்.

துவக்கமும், முடிவும், 
அதாவது, 
பிறப்பும், இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்.

அவர் உலகில் பிறந்து வளர்ந்தாலும் அவர் உலகைச் சார்ந்தவர் அல்ல,

மோட்சத்தைச் சார்ந்தவர்.

கீழப்பாவூரில் பிறந்தவன் உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கீழப்பாவூரைச் சார்ந்தவனே.

சுற்றுலாவாக எந்த நாட்டிற்குச் சென்றாலும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துதான் ஆகவேண்டும்.

அதேபோல் விண்ணகத்தைச் சார்ந்த இயேசு உலகத்துக்கு வந்து வாழ்ந்தாலும் விண்ணகத்துக்குத் திரும்பிச் சென்று தான் ஆகவேண்டும்.

நமது நிலை?

நாம் மனிதர்கள்.

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் மண்ணுக்குத் திரும்ப வேண்டியது.

நமது ஆன்மா உடலோடு உலகில் வாழ்ந்தாலும் என்றாவது ஒரு நாள் விண்ணகத்துக்குச் செல்வதற்காகவே படைக்கப்பட்டது.

அந்த நோக்கத்துக்காகவே இறைவன் அதைப் படைத்தார்.

நமது உடல் உலகைச் சார்ந்தது, ஆன்மா விண்ணுலகைச் சார்ந்தது.

மனிதன் தான் செய்த பாவத்தினால் விண்ணக வாழ்வுக்கு அருகதை அற்றவனாக மாறிவிட்டான்.

அவனது ஆன்மாவை மீட்கவே,

அதாவது,

விண்ணக வாழ்வுக்கு அருகதை உள்ளவனாக மாற்றவே

இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

 நமது விண்ணகத் தந்தையின் வீடுதான் நாம் நிரந்தரமாக வாழ வேண்டிய சொந்த வீடு.

உலக வாழ்வு பயண நிலைதான்.

ஆகாய விமானப் பயணம் எவ்வளவு இன்பகரமாக இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் அதில் பயணித்துக் கொண்டிருக்க முடியாது.

சொந்த நாட்டில் இறங்கித்தான் ஆகவேண்டும்.

அதேபோல் நாம் நிரந்தரமாக உலகில் பயணித்துக் கொண்டிருக்க முடியாது.

சொந்த வீடாகிய மோட்சத்துக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.

ஆனால் நம்மில் அநேகர் இதை மறந்து வாழ்கிறோம்.

உலகத்தையே நிரந்தர வீடாக நினைத்துக்கொண்டு வாழ்கிறோம்.

நமது சொந்த வீடு விண்ணுலமே என்பதை நமக்கு நினைவுபடுத்தி நம்மை அங்கு அழைத்துச் செல்லவே இயேசு உலகுக்கு வந்தார்.

இதைப் பற்றிய அவரது செய்திதான் நற்செய்தி.

நாம் அறிந்திருக்கும் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க வேண்டியது நமது கடமை.

உலகுக்கு அறிவிக்குமுன் நாம் அதன்படி வாழ வேண்டும்.

அதன்படி வாழ்வது என்றால் என்ன?

மதுரையிலிருந்து தென்காசிக்குப் புகை வண்டியில் பயணிப்பதாக 
வைத்துக்கொள்வோம்.

முதலில் நமது பயணச்சீட்டைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

தொலைத்து விட்டால் பரிசோதகர் வரும்போது அபராதம் கட்டி பயணச்சீட்டு வாங்க வேண்டியிருக்கும்.

அடுத்து மதுரைக்கும் தென்காசிக்கும் இரயில்வே நிலையங்களை ஒவ்வொன்றாக கவனித்து வர வேண்டும்.

அப்போதுதான் தென்காசியை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியும்.

தென்காசிக்கு முந்திய நிலயத்துக்கு வந்தவுடன் தென்காசியில் இறங்கத் நயாரிகிவிட வேண்டும்.

தென்காசி வந்தவுடன் இறங்கிவிட வேண்டும்.

நமது விண்ணகப் பயணத்திற்கான நுழைவுச் சீட்டு ஞானஸ்நானத்தின் போது நாம் பெற்ற பரிசுத்த நிலை.

அதை இழக்காமல் வாழ்நாள் முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

அது இல்லாமல் மோட்சத்திற்குள் நுழைய முடியாது.

இரயில் பிரயாணத்திற்கான நேரம் நமக்குத் தெரியும்.

மதுரை to  தென்காசி பயண நேரம் நான்கு மணிகள்.

ஆனால் விண்ணகப் பயணத்திற்கான நேரம் யாருக்கும்  தெரியாது.

எத்தனை வருடங்கள்?
எத்தனை மாதங்கள்?
எத்தனை வாரங்கள்?
எத்தனை நாட்கள்?

யாருக்கும் தெரியாது.

ஆரம்பித்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடியலாம்.

ஆரம்பித்த அடுத்த வினாடியில் கூட முடியலாம்.

ஆகவே நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

ஞானஸ்நானத்தின் போது எடுத்த விண்ணகப் பயணச்சீட்டுடன்,  

அதாவது,

ஆன்மீகப் பரிசுத்தத்தனத்துடன்

ஒவ்வொரு வினாடியும் தயாராக இருக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு சிந்தனையின் போதும்,

சொல்லின் போதும்,

செயலின் போதும்

நாம் விண்ணக வாயிலை நெருங்கி விட்ட எண்ணம் வேண்டும்.

அப்போது தான் நமது பயணச்சீட்டைப் பத்திரமாக வைத்திருப்போம்.

நமது மரணம்தான் நமது விண்ணக வீட்டுக்கான வாயில்.

யாராவது வீட்டு வாயிலை நெருங்க  பயப்படுவார்களா?

மகிழ்ச்சி தான் அடைவார்கள்.

பயணத்தின் போதே நமது பெற்றோர், சகோதர சகோதரிகளைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியோடு நிறைந்திருப்போம்.

அந்த மகிழ்ச்சி வீட்டின் வாயிலை நெருங்கியவுடன் அதிகமாகும்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் மகிழ்ச்சி பேரின்பமாக மாறும்.

இப்போது நாம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாம் விண்ணுலகைச் சார்ந்தவர்களே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment