"ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?"
(அரு. 7:51)
"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்."
(மத்தேயு நற்செய்தி 7:1)
இது இயேசு நமக்கு அறிவித்துள்ள நற்செய்தி.
நமது வீழ்ந்த மனித இயல்பு (Fallen human nature) காரணமாக நாம் அநேக சமயங்களில் இந்த நற்செய்திக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி நமது உள்ளத்தில் ஒரு உருவத்தைப் பதித்து விடுகிறோம்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள்.
வழக்கமாக மற்றவர்கள்களைப் பற்றிய அபிப்பிராயத்தை சுய பிரதிபலிப்பு (Self reflection) என்பார்கள்.
அதாவது நம்மைத் தான் மற்றவர்களிடம் பார்ப்போம்.
நாம் நல்லவர்களாக இருந்தால் மற்றவர்களிடம் உள்ள நல்லது மட்டும் நமது கண்களுக்குத் தெரியும்.
நாம் குறை உள்ளவர்களாக இருந்தால் மற்றவர்களிடம் உள்ள குறைகள் மட்டும் நமது கண்களுக்குத் தெரியும்.
மற்றவர்களைப் பார்க்குமுன் நமது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
"வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். "
(மத்தேயு நற்செய்தி 7:5)
இது நம் ஆண்டவர் நமக்கு அருளும் அறிவுரை.
நாம் கண்களைத் திறந்தால் மற்றவர்கள் தான் நமக்குத் தெரிவார்கள்.
ஆகவே காலையில் நாம் கண் விழிக்குமுன்
நமது ஆன்மாவைப் பரிசோதனை செய்து,
நமது குற்றம் குறைகளுக்காக வருத்தப்பட்டு,
கடவுளின் மன்னிப்பைப் பெற்று
நல்லவர்களாக கண் விழிக்க வேண்டும்.
அப்போது தான் நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் நமக்கு நல்லவர்களாகத் தெரிவார்கள்.
நமது நாளையும் மகிழ்ச்சியுடன் ஆரம்பிப்போம்.
கடவுள் நம் அனைவரையும் அவருடைய சாயலில் படைத்திருக்கிறார்.
அப்படியானால் நாம் அனைவரிலும் கடவுளைக் காண வேண்டும்.
இயேசு இறைமகன்.
படைக்கப்பட்ட அனைவரையும் பற்றி அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.
தனது 12 சீடர்களையும் அவர்தான் தேர்ந்தெடுத்தார்.
யூதாசையும் அவர் தான் தேர்ந்தெடுத்தார்.
யூதாசைப் படைப்பதற்கு முன்பே அவன் அவரைக் காட்டிக் கொடுப்பான் என்று அவருக்குத் தெரியும்.
தெரிந்திருந்தும் அவனைச் சீடனாகத் தேர்ந்தெடுத்தார்.
அவன் பண ஆசை பிடித்தவன் என்பதும் அவருக்குத் தெரியும்.
ஆனாலும் பணப்பையை அவனிடம் தான் கொடுத்திருந்தார்.
அவன் அவரைக் காட்டிக் கொடுத்தது மிகப் பெரிய பாவம்.
அதற்கு அவன்தான் பொறுப்பு.
அவனும் மீட்புப் பெறவே அவர் பாடுபட்டு மரித்தார்.
அவன் அவரைக் காட்டிக் கொடுத்த போது அவனை "நண்பனே" என்று தான் அழைத்தார்.
அவனையும் மன்னிக்கத் தந்தையிடம் வேண்டினார்.
அவரும் தந்தையும் ஒரே கடவுள் தான்.
ஆகவே அவரும் அவனை மன்னித்தார்.
யூதாஸ் நாண்டு கொண்டு தற்கொலை செய்தாலும் கடைசி வினாடியில் அவனை மனம் திருப்பியிருப்பார்.
அவரது செபம் ஒப்புக்காக செய்யப்பட்டதல்ல,
உண்மையாகவே செய்யப்பட்டது.
அவரது செபத்தை அவரே நிறைவேற்றாமல் இருப்பாரா?
யூதாஸ் செய்தது ஒரு தீமை. ஆனால் தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க இயேசுவால் முடியும்.
இயேசு நல்லவர். எதையும் நன்மைக்காக பயன்படுத்தக்கூடிய வல்லமை உள்ளவர்.
அவர் ஏன் நம்மை அவர் சாயலில் படைத்தார்?
நாம் தீயவனிடம் இருக்கும் தீமையை மட்டும் பார்க்காமல் அவனிடமிருக்கும் நன்மையைப் பார்ப்பதற்காகத்தான்.
கொஞ்சம் கூட நல்ல குணம் இல்லாத கெட்டவனே கிடையாது.
கெட்டவனைப் பார்க்கும்போது அவனது நல்ல குணம் நமது கண்ணில் பட வேண்டும்.
அதற்கு நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும்.
யூதாஸ் பண ஆசை பிடித்தவன் தான்.
ஆனால்
இயேசு மரணத் தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது
"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்"
என மனம் வருந்தி
பணத்தை கோவிலில் வீசி எறிந்து விட்டான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
அவன் பணத்தை விட இயேசுவை அதிகம் நேசித்தான்.
இது இயேசுவுக்குத் தெரியும்.
கெட்டவனிடம் இருந்த நல்ல குணத்துக்காக அவனை மீட்டிருப்பார்.
இறுதி வினாடியில் மனம் திரும்புபவர்களும் மீட்புப் பெறுவர்.
ஒருவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் நரகத்திற்குப் போயிருப்பான் என்று தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை.
கடைசி வினாடியில் மனம் திரும்பி நமக்கு முன் மோட்சத்துக்குப் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது.
பிறரைத் தீர்ப்பிடாதிருப்போம், நாமும் தீர்ப்பிடப்பட மாட்டோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment