Sunday, March 10, 2024

"இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார். (அரு. 5:14

"இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார். 
(அரு. 5:14)

வாழ்க்கையில் காரண காரியத் தொடர்பு இல்லாத நிகழ்வு எதுவும் இல்லை.

காரணம் இன்றி காரியம் இல்லை.

ஒரு காரணத்தினால் ஒரு நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் காரியமாகலாம்.

பல காரணங்களால் ஒரு நிகழ்வு ஏற்படலாம்.

காரண, காரிய நிகழ்வுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலும்போது காரண காரியத் தொடர்புகளை ஆய்ந்து செயல்பட வேண்டும்.

 ஒரு முறை  பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரின் நிலைக்குக்‌ காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?"

 என்று சீடர்கள் இயேசுவிடம்   கேட்டபோது 

அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார் என்றார் 
(அரு.  9:1-3)

ஆனால் பெத்சதாக் குளக்கரையில் குணமாக்கப்பட்ட

முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்தவரை நோக்கி 
ஆண்டவர் 

"இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்.

ஆகவே அவரது சுகமின்மைக்குக் காரணம் அவருடைய பாவம் என்பது தெளிவாகிறது.

முதன் முதலில் துன்பம் உலகில் நுழைந்ததற்குக் காரணம் நமது முதல் பெற்றோர் செய்த பாவம் என்பதை படைப்பைப் பற்றிய பைபிள் வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

ஆனால் இயேசுவின் பாடுகளுக்குக் காரணம் அவர்  செய்த பாவம் அல்ல, நாம் செய்த பாவம்.

கடவுளால் பாவம் செய்ய முடியாது.

பாவ மாசின்றி உற்பவித்து, அருள் நிறைந்து வாழ்ந்த அன்னை மரியாள் அனைத்துப் பெண்களையும் விட அதிக வியாகுலங்களை அனுபவித்தாள், 

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக.

புனித சூசையப்பர் நோய்வாய் பட்டு தான் இறந்தார்.

ஆனால் அவர் நீதிமான்.

கோடி அற்புதர் அந்தோனியார் 36 வயதிலேயே சுகமின்மை காரணமாகத்தான் இறந்தார்

புதுமைகள் மூலம் இலட்சக்கணக்கான பேருக்கு சுகம் பெற்றுத் தந்த அவர் தனக்கென்று ஒரு புதுமையைக் கூட கேட்டுப் பெற்றுக் கொள்ளவில்லை.

இறைவன் எதற்காக துன்பங்களை அனுமதிக்கிறார்?

1. நமது பாவங்களின் விளைவாக.

இன்றைய உலகின் பல நோய்களுக்குக் காரணம் போசனப் பிரியம் என்ற தலையான பாவம்.

சாப்பிடக்கூடாத உணவு வகைகளை,
 சாப்பிடக்கூடாத அளவு,
சாப்பிடக்கூடாத நேரங்களில்,
சாப்பிடக்கூடாத முறையில்

சாப்பிடுவதுதான் Cancer, liver trouble, kidney trouble, ulcer நோய்களுக்குக் காரணம்.

பரிசுத்தமாகப் பயன்படுத்த வேண்டிய உடலைப் பாவத்துக்காகப் பயன் படுத்தினால் அது சம்பந்தமான நோய்கள் வரத்தான் செய்யும்.

வரவுக்கு மீறி செலவழிப்பவர்கள் கடன் தொல்லையால் துன்பப்படப் போவது உறுதி.

24 மணி நேரமும் phone ஐயே நோண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு கண் வலி வரப்போவது உறுதி.

 ஆக அநேக நோய்களுக்கும், துன்பங்களுக்கும் நாம்தான் காரணம்.



2. பாவங்களுக்குப் பரிகாரமாக.

நாம் செய்த பரிகாரமாக ஒப்புக் கொடுக்கத் துன்பங்களையும், நோய் நொடிகளையும் இறைவன் அனுமதிக்கலாம்.

இவற்றைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு இறைவனுக்கு ஒப்புக்  கொடுத்தால் நமது உத்தரிக்கிறத் தல வேதனை குறையும்.

மற்றவர்களது பாவங்களுக்குப் பரிகாரமாகக்கூட தமது துன்பங்களை ஒப்புக் கொடுக்கலாம்.

நமது வீட்டில் இருந்து கொண்டே நமது துன்பங்களை பாவிகள் மனம் திரும்ப ஒப்புக் கொடுக்கலாம்.

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்த புனித சவேரியார் அளவுக்கு

மடத்தின் சுவர்களுக்கு மத்தியில் வாழ்ந்த புனித சிறு மலர் தெரசா பாவிகளை மனம் திரும்பியதாகக் கூறுகிறார்கள்.

நம்மால் அந்த அளவுக்குச் செய்ய முடியாவிட்டாலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனது துன்பங்களால் ஒரு ஆளை மனம் திருப்பினாலும் உலகம் முழுவதும் மனம் திரும்பி விடும்.

எந்தக் காரணத்தால் வந்தாலும் வலி வலிதான், துன்பம் துன்பம் தான்.

நாம் தான் காரணம் என்றால் நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும்.

என்ன காரணத்தினால் துன்பங்கள் வந்தாலும் அவற்றை நமது
பாவங்களுக்குப் பரிகாரமாகவும்

மற்றவர்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும்,

இயேசுவை அறியாதவர்கள் அவரை அறிந்து ஏற்றுக் கொள்ளும் படியாகவும்

அவற்றை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

அப்படி ஒப்புக் கொடுக்கும்போது நமது துன்பங்கள் சிலுவைகளாக மாறுகின்றன.

சிலுவைகளைச் சுமக்கும் போது நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம்.

நமது தவறுகளினால் துன்பங்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சிலுவைகளாக மாற்றும் போது அவை நமது மீட்புக்கு உதவிகளாய் மாறுகின்றன.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க சக்தி உள்ள இயேசு

குற்றவாளிகளின் சின்னமான சிலுவையை மீட்பின் கருவியாக மாற்றினார்.

நமது பாவங்களின் விளைவாகிய துன்பங்களை இயேசுவின் உதவியால் நமது மீட்பின் கருவியாக மாற்றுவோம்.

இறைமகன் பரிசுத்தர்.

அவரை நம்மைப் போன்ற மனிதனாகப் பிறக்கச் செய்தது நமது பாவங்கள் தான்.

அதனால் தான் நமது பாவத்தைக் கூட பாக்கியமான பாவமே என்று நமது தாய்த் திருச்சபை அழைக்கிறாள்.

அந்த வகையில் நமது துன்பங்கள் கூட பாக்கியமான துன்பங்கள் தான்.

ஏனெனில் அவை இயேசு அரசரின் பாக்கியம் பெற்ற சிம்மாசனமாக மாறுகின்றன.

துன்பங்களை ஏற்றுக் கொள்பவர்களுடன்தான் இறைமகன் இயேசு இருக்கிறார்.

துன்பங்களை ஏற்றுக் கொள்பவர்கள் பாக்கியவான்கள்,

ஏனெனில் அவர்கள் இயேசுவின் சீடர்கள் எனப்படுவார்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment