Thursday, March 21, 2024

நாளைய குருத்தோலைப் பவனி.

நாளைய குருத்தோலைப் பவனி.

சமூகத்தில் நடைபெறும் விழாக்கள் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் அடிப்படையில் கொண்டாடப் பட்டிருக்கும்.

காலப்போக்கில் நோக்கங்கள் மாறலாம்.

இயேசு வாழ்ந்த யூதர்களின் காலத்தில் அரசர்கள், ஆளுநர்கள் போன்ற அதிகார வர்க்கத்தினரைக் கௌரவிப்பதற்காக

கழுதையின் மேல் அமரச் செய்து

வழி நெடுக சால்வைகளை விரித்து  கையில் ஒலிவ‌ மரக் கிளைகளை ஏந்தி

அவர்களை வாழ்த்திக் கொண்டே

ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இயேசுவும் அரசர்தான். ஆனால் ஆன்மீக அரசர்.

அவரது அரசு இவ்வுலக அரசுக்கு அப்பாற்பட்டது.

விண்ணக அரசு.

மனிதர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிப்பதற்காக உலகில் மனிதனாகப் பிறந்தவர்.

அதாவது இயேசு ஒரு பலிப் பொருள்.

 இயேசு சீடர்களைப் பார்த்து,

 "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; 


அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று அவர்களிடம் கூறினார். 
(மாற்கு நற்செய்தி 10:33,34)


"இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். 


ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். 

ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, 

மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் 

பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்"
என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 10:42,43,45)

இயேசுவின் இந்த வார்த்தைகளிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது?

அவர் அடக்கி ஆள்பவதாக அல்ல தொண்டராகவும், பலிப் பொருளாக மட்டுமே இருக்க விரும்புகிறார் என்பது தெரிகிறது.


இயேசு தம் சீடரோடு  எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, 
 
"உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். என்றார்.
 (11:1,2)

எருசலேமில் தான் அவர் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுக்கவிருக்கிறார்.

இப்போது எதற்காக கழுதைக் குட்டியை அவிழ்த்து வர சொல்கிறார்?

எருசலேமுக்கு ஊர்வலமாக செல்வதற்காகத் தான்.

அவர் வியாழன் இரவு கைது செய்யப்பட போவதும், வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட போவதும் அவருக்கு மட்டுமே தெரியும்.

அதைச் சீடர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

ஊர்வலமாக அவரை அழைத்துச் செல்லப் போகும் மக்களுக்குத் தெரியாது.

ஆக மக்கள் என்ன கருத்தோடு இயேசுவை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள் என்பதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.

இயைசுவைப் பொருத்தமட்டில் அவர் பலிப்பொருளாகத் தான் அழைத்துச் செல்லப்பட்டார்.

பலியிடப்படப் போகும் ஆடு அழைத்து செல்லப்படுவது போல் அவரும் அழைத்துச் செல்லப்பட்டார்.

"உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாகவே" அழைத்துச் செல்லப்பட்டார்.

யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்" எனச் சொல்லுங்கள்" என்றார். 

அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டுவந்தார்கள். 
(மாற்கு நற்செய்தி 11:3,4)

அதில் அவர் ஏறி அமர்ந்து

"ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! 

வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரிக்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
(மாற்கு நற்செய்தி 11:9,10)

அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். 
ஊர்வலம் கலைந்தது.

இந்த விவிலிய நிகழ்வையே நாம் குருத்தோலை ஞாயிறாகக் கொண்டாடுகிறோம்.

அன்றைய ஒலிவக் கிளை
 ஊர்வலத்துக்கும்,

இன்றைய குருத்தோலை ஊர்வலத்துக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?


அன்று கொண்டாடியவர்கள் யூதர்கள்.

இன்று கொண்டாடும் நாம் கிறிஸ்தவர்கள்.

இது பெரிய வேறுபாடு அல்ல.

கொண்டாட்டத்தின் நோக்கத்தில் தான் வேறுபாடு இருக்கிறது, இருக்க வேண்டும்.

யூத மக்கள் இயேசுவை ஒரு அரசியல் விடுதலையாளராகக் கருதினார்கள்.

 சீடர்களில் இருவர், (அருளப்பரும், வியாகப்பரும்)

"நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" 
(மாற்கு நற்செய்தி 10:37)
என்று வேண்டியது ஞாபகத்துக்கு வருகிறது.

நாம் இயேசுவை ஆன்மீக விடுதலையாளராகக் கருத வேண்டும்.

குருத்தோலை ஊர்வலத்தை அடுத்து வரும் வியாழக்கிழமை அன்று ஆண்டவர் ஸ்தாபிக்கும் திவ்ய நற்கருணையும், குருத்துவமும்

வெள்ளிக்கிழமை அவர் படப்போகும் பாடுகளும்,

மரிக்க விருக்கும் சிலுவை மரணமும்,

ஈஸ்டர் ஞாயிறு உயிர்ப்பும்

நமது ஆன்மீக விடுதலைக்காக மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொண்டு 

குருத்தோலை ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

பாவத்திலிருந்து விடுதலை பெறாமல் புனித வார நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் ஆன்மீக ரீதியாக ஒரு பயனும் அடைய மாட்டார்கள்.

40 நாட்கள் நோன்பு காலமும் வீணாகிவிடும்.

குளிக்க வேண்டும் என்று ஆற்றுக்குப் போய் தண்ணீரில் இறங்காமல் திரும்பி வருபவர்களைப் போன்றவர்கள் தான் இவர்களும். 

நம்மில் பலர் வாழ்க்கையை விட விழாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

திருமண விழா முக்கியமா, திருமண வாழ்க்கை முக்கியமா?

இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து,

ஆயிரக் கணக்கானவருக்கு அழைப்புக் கொடுத்து,

வந்தவர்கள் எல்லாம் வாழ்த்து மழை பொழிய,

ஜெக ஜோதியாய் திருமண விழாவைக் கொண்டாடியிருப்பார்கள்.

ஆனால் விழாவில் இருந்த மகிழ்ச்சி வாழ்க்கையில் இருக்காது.

விழாப் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கவே வருடக் கணக்காக ஆகும்.

வாழ்க்கை ஒற்றுமை இன்மையாலும், சண்டைகளாலும் நிறைந்திருந்தால் திருமண விழாவினால் என்ன பயன்?

பாவத்திலிருந்து விடுதலை பெறுவது தான் தவக்காலத்தின் நோக்கமும், புனித வாரத்தின் நோக்கமும்.

அந்த நோக்கம் நிறைவேறா விட்டால் தபசு கால நோன்பினாலும், ஈஸ்டர் விழா விருந்தினாலும் எந்தப் பயனும் இல்லை.

இதை மனதில் வைத்துக்கொண்டு குருத்தோலையைக் கையில் எடுப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment