"யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.
(அரு. 5:36)
பைபிள் வசனங்களுக்குப் பொருள் காணும் போதும், தியானிக்கும் போதும்
அவற்றுக்கு உரியவரான இறைவனைப் பற்றிய இறை உண்மையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்,
வார்த்தைகளுக்கு அர்த்தம் தரும் அகராதியை அல்ல.
தலைப்பு வசனத்தில் உள்ள தந்தையும், மகனும், தூய ஆவியும் ஒரே கடவுள்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய
ஆவிக்கும் ஒரே சித்தம்.
ஆனாலும் உலகை மீட்க மனுவுரு எடுத்தது மகன் மட்டுமே.
மனுக்குலம் பாவத்திலிருந்து மீட்கப்பட வேண்டும்,
அதற்காக மகன் மனுவுரு எடுக்க வேண்டும் மூவொரு கடவுளின் விருப்பம்.
மனுவுரு எடுத்த இறைமகன் என்னென்ன செய்ய தந்தை விரும்புகிறாரோ
அதையே இறைமகனும் விரும்புகிறார்,
அந்த விருப்பத்தை செயல்படுத்தவும் செய்கிறார்.
மகனின் செயல்களை வைத்து தந்தையின் விருப்பத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
"எனது செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும். "
என்று இயேசு சொல்கிறார்.
இயேசு வெறும் வாய்ச் சொல் வீரரல்ல, செயல் வீரர்.
அவரது செயல்களே அவர் இறைமகன் என்பதற்குச் சான்று.
இயேசு முடக்கு வாதக்காரனைப் பார்த்து
"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்கிறார்.
"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்கிறார்.
அவனை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்கிறார்.
(மத்தேயு நற்செய்தி 9:5,6)
கடவுளுக்கு மட்டும் தான் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.
தான் கடவுள் என்பதைத் தன் சொல்லாலும், செயலாலும் நிரூபிக்கிறார்.
இயேசு நமக்கு முன்மாதிரிகை.
அவருடைய சீடர்கள்களாகிய நாம் நம்முடைய சொல்லாலும், செயலாலும்
அவருடைய சீடர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இயேசு சொன்னதையும், செய்ததையும் பைபிளில் வாசிக்கிறோம்.
வாசித்ததை மற்றவர்களுக்குச் சொல்கிறோம்.
அதேபோல் மற்றவர்கள்களைச் செய்யச் சொல்கிறோம்.
ஆனால் நாம் சொன்னதை நாம் செய்கிறோமா?
இயேசு ஏழைகள் பாக்கியவான்கள் என்று சொன்னார்,
அவர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.
அயலானை நேசிக்கச் சொன்னார்.
அவர் அனைவரையும் நேசித்தார்.
தாழ்ச்சியுடன் வாழச் சொன்னார்.
கடவுளாகிய அவர் தனது மனிதப் பெற்றோருக்குத் தாழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து நடந்தார்.
பகைவர்களை மன்னிக்கச் சொன்னார்.
அவரைச் சிலுவையில் அறைந்தவர்களை அவரே மன்னித்தார்.
நாம் இயேசுவின் சீடர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம்.
அவருடைய சீடர்களாக வாழ்கிறோமா?
சொல்வதைச் செய்கிறோமா?
பைபிளைக் கையிலும், வாயிலும் வைத்திருந்தால் போதாது,
மனதிலும், செயலிலும் வைத்திருக்க வேண்டும்.
இன்று நமது பிரிவினை சகோதரர்கள் மீட்பு அடைய பைபிள் ஒன்றே போதும் என்று கூறிக் கொண்டு
பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு
பைபிள் வசனங்களுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுத்துக் கொண்டு
ஊர் ஊராய்ச் செல்கிறார்கள்.
இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக செயல்படும் இவர்கள் எப்படி இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும்?
இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாத இவர்களால் எப்படி உண்மையான நற்செய்தியை அறிவிக்க முடியும்?
அவர்கள் அறிவிப்பது அவர்களுடைய செய்தி, நற்செய்தி அல்ல.
மகனின் செயல்களை வைத்து தந்தையின் விருப்பத்தை நாம் தெரிந்து கொள்ளலாம் என்று இயேசு சொல்கிறார்.
நமது செயல்களை வைத்து தந்தையின் விருப்பத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாமா?
தெரிந்து கொள்ள வேண்டுமெஎன்றால் முதலில்
"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"
(மத்தேயு நற்செய்தி 5:48)
என்ற இயேசுவின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்.
தந்தையைப் போல் நிறைவுள்ளவர்களாய் இருப்பது எப்படி?
தந்தையைப் போலவே மகனும் நிறைவுள்ளவர்.
நாம் பூமியில் வாழும் போது தந்தையை நம்மால் பார்க்க முடியாது.
ஆனாலும் தந்தையைப் போலவே நிறைவான மகன்
நம்மைப் போலவே மனிதனாகப் பிறந்து, நம்மைப் போலவே வாழ்ந்தார்.
சமகாலத்து மக்கள் அவரைக் கண்ணால் பார்த்தார்கள்.
இன்று வாழும் நம்மால் எப்படிப் பார்க்க முடியும்?
அதற்காகத்தான் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
இயேசுவின் வார்த்தைகளையும், செயல்களையும் அவை அப்படியே நமக்குத் தருகின்றன.
அவற்றை மனம் வைத்து வாசித்து, செப உணர்வுடன் தியானித்து,
நாமும் அப்படியே வாழ்ந்தால் நாம் மகனைப் பிரதிபலிப்போம்.
மகனைப் பிரதிபலித்தால் தந்தையையும் பிரதிபலிப்போம்.
நம்மில் மகன் வாழ்வார்.
நம்மில் தந்தையும் வாழ்வார்.
நம்மில் தூய ஆவியும் வாழ்வார்.
அதாவது
நாம் உண்மையான கிறிஸ்தவனாக வாழ்ந்தால் கடவுள் நம்முள் வாழ்வார்.
புனித சின்னப்பரைப் போல நாமும்
"வாழ்வது நானல்ல, என்னில் இறைவன் வாழ்கிறார்"
என்று துணிந்து சொல்லலாம்.
சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கிறிஸ்துவாக வாழ்வோம்.
நமது செயல்களே நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்றாக விளங்க வேண்டும்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment