Sunday, March 3, 2024

என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.(மத்தேயு . 7:21,)

என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.
(மத்தேயு . 7:21,)

தினமும் நற்செய்தியை வாசிப்பவர்கள்,

தினமும் செபம் சொல்பவர்கள்,

தினமும் திருப்பலி காண்பவர்கள்,

தினமும் திவ்ய நற்கருணை வாங்குபவர்கள் 

விண்ணரசுக்குள் செல்வதில்லை.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் சேர்ந்தவன்தான் மனிதன்.

இவற்றில் ஒன்று குறைந்தாலும் ஒருவன் முழு மனிதனாக முடியாது.

சாப்பாடு என்று சொன்னால் வயிறு நிறையாது.

சாப்பிட்டால் தான் வயிறு நிறையும்.

சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது.

சர்க்கரையை ருசித்துப் பார்த்தால் தான் இனிக்கும்.


மழை என்று சொன்னவுடன் குளம் நிறையாது.

மழை பெய்தால்தான் குளம் நிறையும்.

அதேபோல் 

தினமும் நற்செய்தியை வாசிப்பதால் மட்டும் ஒருவன் மீட்புப் பெற முடியாது.

நற்செய்தியை வாழ்பவன் தான் மீட்புப் பெறுவான்.

தினமும் செபம் சொல்வதால் மட்டும் ஒருவன் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

 விண்ணகத் தந்தையின் திருவுளத்தின்படி நடப்பவனே விண்ணகத்துக்குள் நுழைவான்.

தினமும் திருப்பலி காண்பதால் மட்டும் ஒருவன் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.

திருப்பலியில் பங்கேற்று, அதனால் பெற்ற அருளின்படி வாழ்பவனே 
விண்ணகத்துக்குள் நுழைவான்.

தினமும் திவ்ய நற்கருணை வாங்குவதால் மட்டும் ஒருவன் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது. 

நற்கருணை ஆன்மீக உணவு.

 நற்கருணை நாதர் இயக்குகிறபடி வாழ்பவனே விண்ணகத்துக்குள் நுழைவான்.

இப்போது ஒன்று புரிந்திருக்கும். 

இருப்பது மட்டும் வாழ்க்கை அல்ல,
வாழ்வதுதான் வாழ்க்கை.

வாழ்வது என்றால்?

அனுபவம் தான் வாழ்க்கை.

இறை அனுபவம் தான் ஆன்மீக வாழ்க்கை.

இறைவனை அனுபவிப்பது எப்படி?

 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

என்று திருப்பாடல்கள் (34:8) ஆசிரியர் கூறுகிறார்.

ஆண்டவரை எப்படி சுவைத்துப் பார்ப்பது?

தாயின் மடியில் அமர்ந்து பால் குடிக்கும் குழந்தை பாலைச் சுவைக்காது.

பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே தாயின் முகத்தைப் பார்த்து அதில் தெரியும் அன்பை ருசித்துப் புன்னகை பூக்கும்.

குழந்தையின் புன்னகையில் தெரிவது தாயின் அன்பு.

மனைவி சமைத்த உணவை உண்ணும் கணவன் உணவை ருசிப்பதை விட அதைச் சமைத்த மனைவியின் காதலை நினைத்து சுவைத்துக் கொண்டிருப்பான்.

உணவை மட்டும் சுவைப்பவனைச் சாப்பாட்டு ராமன் என்பார்கள்.

மனைவியின் காதலை நினைத்துச் சுவைப்பவன்தான் கணவன்.

அதேபோல வாழ்க்கையில் நடக்கும் நல்ல நிகழ்வுகளை மட்டும் எண்ணி ரசிப்பவன் சாதாரண மனிதன்.

ஆனால் அவற்றுக்குக் காரணமான இறைவனின் அன்பை எண்ணி ரசிப்பவன் பக்தன்.

வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் அன்பைக் கண்டு மகிழ்பவன் புனிதன்.

இறைவன் நமது உள்ளத்தில் அமர்ந்து கொண்டு நம்மைப் பராமரித்து வருகிறார்.

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்,

அது இன்பம் தருவதாக இருந்தாலும்,

துன்பம் தருவதாக இருந்தாலும்,

சுகமாக இருந்தாலும், நோயாக இருந்தாலும்

அதில் இறைவனின் அன்பைக் காண்பவன் தான் இறைவனைச் சுவைத்துப் பார்க்கிறான்.

இன்பத்தில் மட்டும் இறைவனைக் காண்பவன் சாதாரண மனிதன்.

துன்பத்திலும் இறைவனைக் காண்பவன் தான் இறைவனின் சுவையை அறிந்தவன்.

கஷ்டத்திலும் இறைவனைக் காண்பவன் கஷ்டப்படாமல் மீட்புப் பெறுவான்.

அதாவது

எளிதாக மீட்புப் பெறுவான்.

சிலுவையில் ஆண்டவர் இருப்பதால் புனிதர்கள் துன்பத்திலும் இறைவனைக் கண்டார்கள்.

துன்ப வேளையிலும் அவர்கள் இறைவனை அனுபவித்தார்கள்.

They experienced God even in their sufferings.

சிந்தனையிலும், சொல்லிலும் மட்டுமல்ல, அவர்களுடைய அனுபவத்திலும் இறைவன் வாழ்ந்தார்.

இறைவனே அவர்களது அனுபவம்.

God was their life experience.

இறைவனுடைய அன்பு இரக்கம் பரிவு, நீதி, ஞானம் ஆகியவையே அவர்களுடைய வாழ்க்கை.

புனித சின்னப்பர் கூறியது போல வாழ்ந்தவர்கள் அவர்கள் அல்ல, இறைவனே அவர்களில் வாழ்ந்தார்.

அவர்களுடைய இயேசுதான் நம்முடைய இயேசு.

நாமும் புனிதர்களாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் அவருடைய அன்பர்களுக்கு அழகு.

இயேசு நமது அன்பர்.

நாம் அவரது அன்பர்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment