சாத்தானுக்கு ஏன் மூளை இல்லை?
மூளை இருந்திருந்தால் சிந்திக்கத் தெரிந்திருக்கும்.
ஆதி முதல் அவனது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவனுக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.
இறைவன் கோடிக் கணக்கான சம்மனசுக்களைப் படைத்த போது லூசிபெரை (Lucifer) மிகவும் அழகு வாய்ந்தவராகப் படைத்தார்.
எந்த மூளை உள்ளவனாவது ஒன்றுமில்லாமையிலிருந்து
(From nothing) தன்னைப் படைத்தவரை விட
தான் மேலானவன் என்று நினைப்பானா?
Lucifer நினைத்தார்.
அவரது தற்பெருமை அவரை விண்ணிலிருந்து நரகத்தில் தள்ளியது.
நரகத்தில் பாடம் கற்க முடியாது.
மூளையில்லாமை தொடர்ந்தது.
தற்பெருமை உள்ளவனுக்குச் சிந்திக்கத் தெரியாது.
தன்னைப் பற்றித் தவறான நினைப்பில் உள்ளவனால்
மற்றவர்களைப் பற்றி சரியாக சிந்திக்க முடியாது.
ஆகவே தான் கடவுளின் அளவு கடந்த வல்லமையையும், அன்பையும் நினைத்துப் பார்க்கத் தெரியாமல்
அவரால் படைக்கப்பட்ட ஏவாளை ஏமாற்றினால் அவளையும் அவளது சந்ததியினரையும் மோட்சத்துக்குப் போக விடலாமல் தடுத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டான்.
ஏவாளை ஏமாற்றி கடவுளால் விலக்கப்பட்ட பழத்தைத் தின்ன வைத்தான்.
ஆனால் அவன் ஏவாளை ஏமாற்றிய அதே நாளில்
மனிதரை மீட்பதற்காகக்
கடவுள் மனிதனாகப் பிறக்கப் போகும் திட்டத்தை
அவன் முன்னாலேயே அறிவித்து விட்டார்.
ஒரு பெண்ணை ஏமாற்றியதற்குத் தண்டனையாக
இன்னொரு பெண் அவனது தலையை நசுக்குவாள் என்று முன்னறிவித்து விட்டார்.
அப்பெண்ணின் வித்துதான் மனுக்குலத்தை அவன் வித்திலிருந்து, அதாவது, பாவத்திலிருந்து மீட்பார் என்றும் முன்னறிவித்து விட்டார்.
ஆனால் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவனும் தீர்மானித்து விட்டான்.
அப்பெண்ணின் வித்தை அழித்து விட்டால் மனிதன் மீட்புப் பெறுவதைத் தடுத்து விடலாம் என்று எண்ணினான்.
அந்த பெண் யாரென்று அவன் அறிவதற்கு முன்பே கடவுள் மரியாளை சென்மப் பாவ மாசின்றி படைத்துவிட்டார்.
கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இயேசு பெத்லகேமில் பிறந்த அன்று விண்ணவர் பாடிய பாடல் அவன் காதில் விழுந்தது.
உடனே குழந்தையைக் கொல்லத் தீர்மானித்து விட்டான்.
அதற்காக ஏரோது மன்னனின் மனதுக்குள் புகுந்து அதற்கான ஏற்பாடு செய்தான்.
ஆனால் கபிரியேல் தூதரின் செயல்பாட்டினால் அவனது முயற்சி தோல்வி அடைந்தது.
இயேசு தனது பெற்றோருடன் எகிப்திலிருந்து திரும்பி
நசரேத் ஊரில் தான் கடவுள் என்பதை மற்றவர்களுக்கு வெளிக் காட்டாமல்
30 ஆண்டுகள் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
31வது ஆண்டில் பொது வாழ்வுக்குள் நுழையும் போது இயேசு தான் மீட்பர் என்று ஸ்நாபக அருளப்பர் அறிவித்தார்.
சாத்தான் அதை உறுதி செய்து கொள்ள அவரை மூன்று முறை சோதித்தான்.
சோதனையை
"நீர் இறைமகன் என்றால்"
என்று ஆரம்பித்தான்.
மூன்றாவது சோதனையில்
இயேசு,
"அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்று கூறியவுடன்
அவர்தான் மீட்பராகப் பிறந்த இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டான்.
அவரைக் கொன்று விட்டால் அவரது மீட்புத் திட்டத்தை முறியடித்து விடலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் இயேசு தனது மரணத்தின் மூலமாகத்தான் மனுக்குலத்தை மீட்கப் போகிறார் என்ற உண்மை அவனுக்குத் தெரியாது.
ஆக அவனை அறியாமலே மீட்புத் திட்டத்தில் இயேசுவுக்கு உதவ ஆரம்பித்தான்.
அதாவது அவனை அறியாமலே தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தான்.
மறை நூல் அறிஞர்கள், பரிசேயர்கள், யூதாஸ் ஆகியவர்களின் துணையுடன் தனது திட்டத்தைத் தானே முறியடித்தான்.
அவனது அறியாமையை இயேசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
தீமை செய்வது சாத்தானின் வேலை.
தீமையிலிருந்து நன்மையை வரவழைப்பது இயேசுவின் திறமை.
இன்று கூட சாத்தான் புத்தி இல்லாமல் தனக்கு எதிராகத்தான் செயல்புரிந்து கொண்டிருக்கிறான்.
யாருக்கு எதிர்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றனவோ அவர்களுக்குத் தான் எதிர்ப்புகளைச் சமாளிக்கத் தேவையான திறமை கிடைக்கும்.
யாரை சாத்தான் அதிகம் சோதிக்கிறதோ
அவர் சோதனைகளை வெல்ல வரம் கேட்டு இறைவனிடம் செபிப்பார்.
கிடைக்கும் வரத்தால் ஆன்மீகத்தில் வளர்வார்.
இவ்வாறு நமது ஆன்மீக வளர்ச்சிக்குச் சாத்தானே காரணமாகி விடுகிறான்.
நோயாளி மருத்துவரை அதிகம் தேடுவது போல
சாத்தானால் அதிகம் சோதிக்கப் படுகிறவர்கள் இறைவனை அதிகம் தேடுவார்கள்.
இறைவனை அதிகம் தேடுபவர்கள் புனிதர்களாக மாறுவார்கள்.
புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தால் இது புரியும்.
சாத்தானால் அதிகம் சோதிக்கப் பட்ட யோபு பல மடங்கு கடவுளுக்குப் பிரியம் உள்ளவராக மாறினார்.
ஆக சாத்தானின் முயற்சியால் அநேகர் புனிதர்களாக மாறினார்கள்.
சாத்தான் சோதிப்பதற்காக நம்மைப் பார்த்தால் நாம் இயேசுவின் பக்கம் திரும்புவோம்.
சாத்தானை அவர் பார்த்துக் கொள்வார்.
நம்மை இயேசுவின் பக்கம் திரும்ப வைப்பவனே சாத்தான் தான்.
எதிரிகள் நெருங்கும் போது குழந்தை தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொள்வதுபோல
சாத்தான் நம்மை நெருங்க நெருங்க நாம் இயேசுவை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்வோம்.
என் ஆண்டவரை நான் விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க எனக்கு உதவிக் கொண்டிருக்கும் சாத்தானே
உனக்கு என் நன்றி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment