Tuesday, March 19, 2024

"கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள்."(அரு. 8:42)

' "கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள்."
(அரு. 8:42)

இயேசு தன்மீது விசுவாசம் கொள்ளாத பரிசேயர்களைப் பார்த்து,

''கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள்.

சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம்.

 தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. 

அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. 

அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது.

 ஏனெனில் அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். "
(அரு. 8:42,44)

என்று கூறினார்.

ஆன்மீகத்தில் நடுநிலைமை என்பதே கிடையாது.

ஒன்று கடவுள் பக்கம் அல்லது சாத்தான் பக்கம்.

கடவுளை விசுவசித்து, அதன்படி வாழ்பவர்கள் கடவுள் பக்கம்.

கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு அவரது விருப்பப்படி வாழாமல் பாவத்தில் வாழ்பவர்களும்,

"கடவுளும் இல்லை, சாத்தானும் இல்லை, நாங்கள் மட்டும் தான் இருக்கிறோம்" என்று கூறிக்கொண்டு தங்கள் விருப்பம் போல் வாழ்பவர்களும் சாத்தான் பக்கம் தான்.

"விசுவசிக்கிறேன்" என்று சொன்னால் மட்டும் போதாது,

விசுவாசத்தின் படி வாழ வேண்டும். வாழ்பவன் தான் கடவுள் பக்கம்.

"பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை  விசுவசிக்கிறேன் "

நம்மைப் படைத்த கடவுளை எல்லாம் வல்லவர் என்று கூறிவிட்டு

நமது வீட்டில் ஒரு நல்ல காரியம் நடக்கும் போது முழுப் பொறுப்பையும் அவர் கையில் ஒப்படைக்காமல்

ஜாதகம் பார்ப்பவனிடமும், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பவனிடமும் ஒப்படைப்பவர்களை 

எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

ஞாயிற்றுக்கிழமை முழுப் பூசை காண வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.


''ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்"

என்று கூறிவிட்டு

திருச்சபையின் கட்டளைப்படி முழுப் பூசை காணாமல்

வாசகங்கள் முடிந்த பிறகு பூசைக்கு வருபவர்களை எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

"பாவ மன்னிப்பை விசுவசிக்கின்றேன்" என்று கூறிவிட்டு

வருடக்கணக்காய் பாவ சங்கீர்த்தனம் செய்யாதவர்களை 

எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

திவ்ய நற்கருணை என்றாலே இயேசு   ஆண்டவர்தான்  என்பது தெரிந்திருந்தும்

தகுந்த தயாரிப்பு இல்லாமல் நற்கருணை வாங்குபவர்களை எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

"தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி." என்று சாத்தானைப் பற்றி ஆண்டவர் கூறுகிறார்.

முதற் கொலைக்குக் காரணம் என்ன?

காயீன் ஆபேல் மீது கொண்டிருந்த பகைமை.

ஒருவர் மீது ஒருவர்  பகைமை பாராட்டுபவர்களை

எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

"பொய் பேசுவது அவனுக்கு இயல்பு" 

என்று சாத்தானைப் பற்றி ஆண்டவர் கூறுகிறார்.

பொய் சொல்லியே காரியம் சாதிப்பவர்களை

எப்படி கடவுள் பக்கம் என்று கூற‌ முடியும்?

யாரெல்லாம் கடவுள் பக்கம் இல்லையோ அவர்கள் சாத்தான் பக்கம் தான் இருக்கிறார்கள்.

நாம் ஆண்டுகளாக வாழவில்லை,
ஒவ்வொரு வினாடியும் வாழ்கிறோம்.

ஒவ்வொரு வினாடியும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

நாம் கடவுளோடு இருக்கிறோமா என்பது தான் கேள்வி.

ஓவ்வொரு வினாடியும் கடவுளுக்காக வாழ்பவர்கள் கடவுளோடு இருக்கிறார்கள்.

தங்களுக்காக வாழ்பவர்கள் கடவுளோடு இல்லை.

யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போல உலகை வலம் வந்து கொண்டிருக்கிறான் சாத்தான்.

அசந்திருந்தால் விழுங்கி விடுவான்.

ஆகவே ஒவ்வொரு வினாடியும் நாம் கடவுள் நினைவோடு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் நாம் கடவுளுக்காக வாழ வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போதே நாள் முழுவதையும் தந்தை, மகன், தூய ஆவியின் கையில் ஒப்படைத்து விட வேண்டும்.

நாள் முழுவதும் இறைவன் பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

நமது கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக சாத்தானும் கூடவே வந்து கொண்டிருப்பான்.

நாம் நமது கவனத்தை இறைவனை விட்டுத் திருப்பக் கூடாது.

உதாரணத்திற்கு நாம் திருப்பலி ஒப்புக் கொடுக்க கோவிலுக்குச் செல்கிறோம்.

கோவிலில் நமது கண் பீடத்தின் மீதும், திருப்பலி நிறைவேற்றும் குருவானவர் மீதும் இருக்க வேண்டும்.

நமது பார்வையைத் திருப்ப சோதனைகளுடன் சாத்தான் நமது அருகிலேயே இருப்பான்.

நாம் பராக்குக்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

பராக்குக்கு இடம் கொடுத்தால் நமது கவனம் திருப்பலியில் இருக்காது.

திருப்பலியின் பலன் எதுவும் கிடைக்காது.

பராக்கின் காரணம் கவர்ச்சியாக உடையணிந்து வந்த ஒரு பெண்ணாக இருந்தால், 

குளிக்கப் போய் சேற்றை அள்ளிப் பூசிய கதையாகி விடும்.

சாப்பாட்டுப் பந்தியில் அமர்ந்து சாப்பாடு கிடைக்காமல் வந்தது போல் ஆகிவிடும்.

பிறருக்கு உதவி செய்வது ஒரு புண்ணியம்.

உதவியைக் கடவுளுக்காகச் செய்ய வேண்டும்.

சாத்தான் சுய விளம்பரத்தோடு அருகிலேயே நின்று நமது கவனத்தைத் திருப்ப முயல்வான்.

நாம் அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

ஒவ்வொரு வினாடியும் கடவுள் நினைவோடு அவர் பிரசன்னத்தில் வாழ்வோம்.

நாம் கடவுள் பக்கம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment