Sunday, March 31, 2024

"அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்."(லூக்கா நற்செய்தி 24:30)

"அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்."
(லூக்கா நற்செய்தி 24:30)

இறைமகன் எதற்காக மனிதனாகப் பிறந்தார்?

பின்வரும் வசனத்தில் அதற்கான பதில் இருக்கிறது.

" உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்."
(தொடக்கநூல் 3:15)

மனுக்குலத்தின் பாவத்திற்குக் காரணமான சாத்தானை நோக்கிக் கடவுள் கூறிய வார்த்தைகள் இவை.

1."உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன்."

2."உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்."

1.பழைய ஏற்பாட்டின் முதற் பெண்மணி ஏவாள்.

புதிய ஏற்பாட்டின் முதற் பெண்மணி மரியாள்.

ஏவாளை ஏமாற்றிய பாவத்துக்குத்
தண்டனையாக மரியாள் சாத்தானின்  தலையை நசுக்குவாள்.

ஏவாளை வென்ற சாத்தான் மரியாளிடம் தோற்பான்.

இது சாத்தானுக்கான தண்டனையின் முதல் பகுதி.

2. சாத்தானின் வித்து பாவம்.
மரியாளின் வித்து இயேசு.

இயேசு பாவத்தைத் தோற்கடிப்பார்.

சாத்தானின் முயற்சியால் மனுக்குலத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாவத்தை இயேசு வெல்வார்.

மனுக்குலத்தின் பாவத்தை மன்னித்து அதை அழிப்பார்.

பாவ மன்னிப்பு தான் இயேசு மனிதனாகப் பிறந்ததன் ஒரே நோக்கம்.

அவர் செய்த மற்ற எல்லா செயல்களும் அதை மையமாக வைத்து செய்யப்பட்டவை.

அவர் நற்செய்தியை அறிவித்தது, நோயாளிகளைக் குணமாக்கியது,  
பாடுகள் பட்டது, சிலுவையில் மரணம் அடைந்தது ஆகிய எல்லாம் பாவ மன்னிப்பை மையமாக வைத்து செய்யப்பட்டவையே.

மனித குலப் பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான் பாடுகள் பட்டார், சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கப் பட்ட பலிப் பொருள்.

வெள்ளிக்கிழமை பலியாக ஒப்புக் கொடுக்கப் பட்டார்.

வியாழக்கிழமை பலிப் பொருளை சீடர்கள் உண்பதற்காக திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அவரது வாழ்க்கையின் நோக்கம்,

பாவ மன்னிப்பு.

அதற்காக

சிலுவைப் பலி,

பலிப்பொருளை உண்பதற்காக

திவ்ய நற்கருணை.


பாவ மன்னிப்பு.
 பலி,
திவ்ய நற்கருணை.

ஆகியவற்றை 
விசுவசிப்பவர்கள் தான் இயேசுவை விசுவசிப்பவர்கள்.

கத்தோலிக்கர்களாகிய நாம் பாவ மன்னிப்புக்கான பாவ சங்கீர்த்தனத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

திருப்பலியை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணையை ஏற்றுக் கொள்கிறோம்.

பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் பைபிளில் உள்ள இந்த மூன்றையும் ஏற்றுக் கொள்வதில்லை.

உண்மையில் அவர்கள் கிறித்தவர்கள் அல்ல.

சுய சம்பாத்தியத்துக்காக  இயேசு என்னும் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

ஆதித் திருச்சபையில் திருப்பலிக்குப் பெயர் அப்பம் பிட்குதல்.

புனித வியாழனன்று இயேசு அப்பத்தைப் பிட்டு முதல் திருப்பலியை  நிறைவேற்றினார்.

எம்மாவு அனுபவம்:

இயேசு உயிர்த்தபின் அதை நம்பாத இரண்டு சீடர்கள் 

  எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள எம்மாவு என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். 

அவர்கள் இயேசுவைக்  குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 


இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 

ஆனால் அவர் யார் என்று அவர்கள் உணரவில்லை.

தான் உயிர்த்ததை  அவர்கள் நம்பாததைத்  தெரிந்துதான் அவர் அவர்களுடன் சென்றார்.

இயேசுவைப் பற்றி இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். 

அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 

அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள்.

 அவர்  அவர்களோடு சென்றார். 

அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்."


இயேசு உயிர்த்ததை நம்பாத சீடர்கள் முன் அவரே அப்பத்தைப் பிட்டு திருப்பலி நிறைவேற்றித் தன்னையே அவர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.


அப்போது அவர்கள்   அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். 

உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

எம்மாவு ஊரில் இயேசு நிறைவேற்றிய திருப்பலியைப் பற்றித் தியானித்தால் மற்றோரு உண்மை மனதில் படும்.

என்ன உண்மை?

எம்மாவு திருப்பலியை ஒட்டி தான் இன்றைய திருப்பலி அமைந்திருக்கிறது.

1.Breaking of the Word.
2.Breaking of the Bread.

முதலில் இயேசு பைபிள் வசனங்களை சொல்லி அவற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்.

இன்றைய திருப்பலியில் பைபிளிலிருந்து வாசகங்கள் வாசிக்கப் படுகின்றன.

குருவானவர் அவற்றை விளக்கி பிரசங்கம் வைக்கிறார்.

வார்த்தை வழிபாடு முடிந்த பின் 
குருவானவர் வசீகர வார்த்தைகள் மூலம் அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் மாற்றுகிறார்.

அடுத்து இயேசுவை நமக்கு உணவாகத் தருகிறார்.

முழுமையாக வார்த்தை வழிபாட்டிலும், நற்கருணை வழிபாட்டிலும் கலந்து கொண்டால்தான் நாம் முழுப் பூசை காண்கிறோம்.

அரைகுறையாகப் பூசை காண்பது பூசையே காணாததற்குச் சமம்.

பாடம் கற்கும் மாணவன் வகுப்பு ஆரம்பித்ததற்கு முன்பே வகுப்பிற்குள் சென்று விட வேண்டும்.

பள்ளிக்கூடம் முடிந்த பின்பு தான் வெளியேற வேண்டும்.

இஷ்டப்பட்ட நேரத்திற்கு வந்து இஷ்டப்பட்ட நேரத்துக்கு வெளியேறுபவன் மாணவன் அல்ல.

இஷ்டப்பட்ட நேரத்திற்கு திருப்பலிக்கு வந்து இஷ்டப்பட்ட நேரத்திற்கு வெளியேறுபவன் உண்மையான கிறிஸ்தவன் அல்ல.

திரு உணவை கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையுடன் அருந்த வேண்டும்.

தின் பண்டத்தை வாங்குவது போல் நற்கருணையை வாங்கி வாயில் போடுபவர்கள் இயேசுவை அவமதிக்கிறார்கள்.

இயேசுவை இயேசுவாக வாங்கினால் தான் அவரது ஆசீர் நம்மோடு தங்கும்.

நாமும் நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment