Sunday, March 10, 2024

அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். "(அரு. 4:50)

" அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். "
(அரு. 4:50)

அரசு அலுவலர் ஒருவர் இயேசுவிடம் வந்து 

"ஆண்டவரே, என் மகன் சாகும் தறுவாயில் இருக்கிறான்.

தயவுசெய்து என்னுடன் வந்து அவனைக் குணமாக்கும்."

என்று கூறினார்.

  
 இயேசு அவரிடம்,

 "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார்.

 அவரும் இயேசுவின் வார்த்தைளை நம்பிப் புறப்பட்டுப் போனார். 

 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து

" உம் மகன் பிழைத்துக் கொண்டான்"

 என்று கூறினார்கள். 

அரசு அலுவலர் இயேசுவின் மீது இருந்த நம்பிக்கையினால் தான் 

அவரிடம் வந்து தன் மகனைக் குணமாக்க வேண்டுகிறார்.

இயேசு அவர் கேட்டபடி அவருடன் போகவில்லை.

"நீர் போம், அவன் பிழைத்துக் கொள்வான்" என்கிறார்.

அவர் கேட்டுக் கொண்டபடி அவருடன் போகாவிட்டாலும் இயேசுவின் மீது உள்ள நம்பிக்கை அவருக்குக் குறையவில்லை.

இயேசுவின் சொல்லுக்குக் கீழ்ப்படிகிறார்.

இயேசு கூறியபடி மகன் குணமடைகிறான்.

இங்கு கவனிக்க வேண்டியது அரசு அலுவலரின் அசையாத விசுவாசம்.

நம்மிடம் அப்படிப்பட்ட விசுவாசம் இருக்கிறதா?

நாம் செபிக்கும்போது நாம் கேட்பது போல் கடவுள் செயல் பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நமது அம்மாவிடம்,

"அம்மா, சாப்பிட இட்லி" என்று கேட்கிறோம்.

தட்டில் உப்மா வருகிறது.

நல்ல பிள்ளையாக இருந்தால் அம்மா தந்ததைச் சாப்பிடுவோம்.

இல்லாவிட்டால் தந்ததைச் சாப்பிடாமல் கேட்டதைத் தரும்படி அழுவோம்.

நமது ஆன்மீகத்திலும் நாம் நல்ல பிள்ளையாகச் செயல்பட வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

நம்மைப் படைத்தவர் என்ற முறையில் நமது நன்மைக்காக சில திட்டங்கள் வைத்திருப்பார்.

நமக்கு எது நல்லது என்று நம்மை விட அவருக்கு நன்கு தெரியும்.

ஆகவே கேட்பது தான் கிடைக்க வேண்டும் என்று ஆசைப் படாமல் தருவதை நன்றியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அன்னை தெரசா Sisters of Loreto சபையில் பணி புரிய சேர்ந்தாள்.

ஆனால் அவள் தனி சபை நிறுவ வேண்டும் என்பது இறைவனின் திட்டம்.

ஆகவே அதிலிருந்து வெளியேறி Missionaries of Charity சபையை நிறுவி அதன் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்தார்.

புனித அந்தோனியார் முதலில் அகுஸ்தீனார் சபையில் சேர்ந்தார்.

ஆனால் அவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர வேண்டும் என்பது இறைவனின் திட்டம்.

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து பெரிய புனிதராக மாறினார்.

அன்னை மரியாள் குழந்தைப்பேறு இல்லாத கன்னியாக வாழவே வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

ஆனால் இறைவன் திட்டம் வேறுமாதிரி இருந்தது.

இறைவன் திட்டப்படித் தனது கன்னிமைக்குப் பழுதில்லாமல் இறைவனையே குழந்தையாகப் பெற்றெடுத்தாள்.

மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களை இயேசு மனிதர்களைப் பிடிப்பவராகளாக மாற்றினார்.

வரி வசூலிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த மத்தேயுவைத் தனது சீடனாக மாற்றினார்.

எல்லா புனிதர்களும் தங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்து இறைவன் திட்டப்படி வாழ்ந்துதான் புனிதர்களாக மாறினார்கள்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் புனிதனாக வாழ வேண்டும் என்பதையே இயேசு விரும்புகிறார்.

நமது விருப்பத்தை அல்ல, நமது விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

ஆனால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் நிலையே வேறு.

நாம் இறைவனிடம் வேண்டும்போது கூட நமது விருப்பம் நிறைவேற அவர் உதவ வேண்டும் என்று தான் வேண்டுகிறோம்.

மனித பலகீனம் இதற்கு ஒரு காரணம்.

நமது உடல் உறுப்புகளால் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக 

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

அவரது அனைத்து உறுப்புகளிலும் அடிவாங்கிய நம் ஆண்டவர்,

நமது விருப்பமே நிறைவேற வேண்டும் என்ற நமது உள்ளத்து ஆசைக்குப் பரிகாரமாக கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்க்கிறார்.

அதற்காக முதலில் பாவம் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும் ஏற்றுக் கொள்கிறார்.

மனதில் ஏற்படும் பயம் நமது மிகப் பெரிய பலகீனம்.

அதனால் தான் நமக்குத் துன்பங்கள் வரும், மரணம் வரும் என்று நினைத்தவுடனே பயப்படுகிறோம்.

இந்த பயம் என்ற பலகீனம் தான் வியாழன் இரவு ஆரம்பித்து, வெள்ளிக்கிழமைத் தொடரவிருக்கும் பாடுகளை நினைத்தவுடன்

"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்." ‌என்று 

இயேசுவை செபிக்கத் தூண்டியது.

இந்த செபத்தை பயம் என்ற நமது பலகீனத்துக்குப் பரிகாரமாக அனுமதிக்கிறார்.

ஆனால் அடுத்த வினாடியே,

"ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று செபிக்கிறார்.
(லூக்கா நற்செய்தி 22:42)

இயேசுவின் இந்த செபமே நமது செபமாக இருக்க வேண்டும்.

நாம் ஏதாவது ஒரு விண்ணப்பத்துக்காக செபிக்கும் போது  

"எனது விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"

என்ற வார்த்தைகளோடு செபத்தை முடிக்க வேண்டும்.

நாம் நித்திய காலம் இறைவனோடு மோட்சத்தில் வாழ வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

இவ்விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் நமது இவ்வுலகப் பற்றைத் தியாகம் செய்ய வேண்டும்.

இறைவனது விருப்பம் நிறைவேற இவ்வுலகில் வாழ்வோம்.

"விண்ணுலகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே ! 

உமது திரு உள்ளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுவதாக." 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment