"உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார். "
(மாற்கு.12:31)
பழைய ஏற்பாட்டில் இறைவன் இஸ்ராயேல் மக்களுக்கு மோயீசன் மூலம் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார்.
அந்த பத்துக் கட்டளைகளையும் இயேசு இரண்டு கட்டளைகளாகக் கொடுத்தார்.
1.நம்மைப் படைத்துப் பராமரித்து வரும் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.
2. அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்ய வேண்டும்.
அவரால் படைக்கப்பட்டவர்களில் நாமும் அடக்கம்.
ஆகவே நம்மை நாமே அன்பு செய்ய வேண்டும்.
நம்மை நாமே அன்பு செய்வது போல நமது அயலானை அன்பு செய்ய வேண்டும்.
நம்மை நாமே அன்பு செய்வது சுய நலமா?
பிறர் நலனை விலையாகக் கொடுத்து
தன் நலனை மட்டும் தேடுவது தான் சுயநலம்.
உண்மையில் நாம் என்றால் நாம் மட்டுமல்ல.
கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்திருக்கிறார்.
எங்கும் வாழும் கடவுள் நமக்குள்ளும் வாழ்கிறார்.
நம்மை நாம் நேசிக்கும் போது நம்முள் வாழும் கடவுளையும்.
அவர் சாயலில் வாழும் நம்மையும் நேசிக்கிறோம்.
கடவுளை நேசிக்காமல் நம்மை நாமே நேசிக்க முடியாது.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தன்னையே நேசிக்க முடியாதா?
முடியாது.
அப்படியானால் நாத்திகர்கள் தங்களை நேசிக்காமலா பசி வரும் போது உடலுக்கு உணவைக் கொடுக்கிறார்கள்?
நாம் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகம், லௌகீகம் அல்ல.
ஆன்மீகவாதி தனது ஆன்மாவை நேசிக்கிறான். ஆன்மாவின் நலனையே விரும்புகிறான்.
லௌகீகவாதி தனது உடலையே நேசிக்கிறான். உடலின் இன்பத்தையே விரும்புகிறான்.
இயேசு நமது ஆன்மாவை பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறந்தவர்.
அவரது கருத்துப்படி தன்னை நேசிப்பது போல் என்றால் தனது ஆன்மாவை நேசிப்பது போல் என்று அர்த்தம்.
ஆன்மாவின் உயிர் இறை அருள்.
இறையருளை ஆன்மா இழக்கும் போது அது மரணம் அடைகிறது.
நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியை தின்ற போது அவர்கள் அடைந்தது ஆன்மீக மரணம்.
ஆன்மீக மரணத்திலிருந்து, அதாவது பாவத்திலிருந்து,
நம்மை மீட்கவே இயேசு சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார்.
நாத்திகவாதி இறைவனை ஏற்றுக் கொள்ளாதிருப்பதே அவன் அவனது ஆன்மாவுக்குச் செய்யும் தீமை.
ஆன்மாவுக்குத் தீமை செய்பவன் அதை எப்படி நேசிப்பான்?
ஆகவே நாத்திகவாதியால் தன்னை தானே,
அதாவது தனது ஆன்மாவை,
நேசிக்க முடியாது.
அன்பு அனைவரையும் உள்ளடக்கியது.
Love is universal.
கடவுள் அனைவரையும் நேசிக்கிறார்.
அவரது சாயலில் படைக்கப்பட்ட நாமும் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
கடவுளை உண்மையிலேயே நேசிப்பவன்
அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்பான்.
தன்னை நேசிக்காதவனால் தன் அயலானை நேசிக்க முடியாது.
தன் அயலானை நேசிக்காதவனால் கடவுளை நேசிக்க முடியாது.
அயலான் என்ற வார்த்தை கடவுளால் படைக்கப்பட்ட அனைவரையும் குறிக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் அவரால் படைக்கப்பட்டவர்கள் தான்,
நம்மால் அன்பு செய்யப்பட வேண்டியவர்கள் தான்.
நம்மைப் பகைப்பவர்களும்
நம்மால் அன்பு செய்யப்பட வேண்டியவர்கள் தான்.
நாம் பாவம் செய்யும் போது கடவுளுக்கு எதிரானவர்களாக மாறிவிடுகிறோம்.
ஆயினும் நம்மீது அவர் கொண்டுள்ள அன்பில் மாற்றமில்லை.
நமது முதல் பெற்றோர் பாவம் செய்த போதும் கடவுள் அவர்களை நேசித்துக் கொண்டுதானிருந்தார்.
அதனால் தான் மனுக்குலத்தை மீட்க மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.
கடவுளின் செயலிலிருந்து ஒன்று புரிகிறது.
நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் கடவுளை நேசிக்க வேண்டும்,
அவருக்காக வாழ வேண்டும்
என்று ஆசைப்படுவோம்.
நாம் நம்மை நேசித்தால் தான் நாம் மீட்புப் பெற வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
கடவுளை நேசித்து அவருக்காக வாழ்ந்தால் தான் நம்மால் மீட்புப் பெற முடியும்.
அன்பு செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.
அன்பு செய்வது எதில் அடங்கியிருக்கிறது?
நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அன்பே வடிவான கடவுளுக்கு சேவை செய்வதில் அன்பு அடங்கியிருக்கிறது.
அன்பு என்பது வெறும் உணர்ச்சி (feeling) மட்டுமல்ல.
அது ஐம்பொறிகளால் அனுபவிக்கப் படக் கூடிய ஒரு உண்மை.(Reality)
உள்ளத்தில் உணர்ச்சியாக உதிப்பது வாயில் சொல் வடிவமும் மற்ற உறுப்புக்களில் செயல் வடிவமும் பெற வேண்டும்.
நாம் பிறரோடு பேசும் போது நமது சொற்களில் அன்பு பிரதிபலிக்க வேண்டும்.
பாடப் புத்தகத்தை சப்தமாக வாசிப்பதுபோல 'I love you ' என்று சொன்னால் அன்பில் உயிர் இருக்காது.
உள்ளத்தில் உள்ள அன்பு உணர்ச்சி சொல்லில் தெரிய வேண்டும்.
இருவர் காட்டுப் பாதையில் நடந்து போகிறார்கள்.
ஒருவர் பையில் சாப்பாடு இருக்கிறது.
அடுத்தவரிடம் சாப்பாடு இல்லை.
நண்பகல் நெருங்குகிறது.
இருவருக்கும் பசிக்கிறது.
சாப்பாடு இருப்பவர் அடுத்தவரைப் பார்த்து,
"நான் உம்மை அன்பு செய்கிறேன் '
என்று சொல்கிறார்.
சொல்லிவிட்டு
"சாப்பிட உட்கார்வோமா.''
"என்னிடம் சாப்பாடு இல்லை."
"என்னிடம் இருக்கிறது. நான் சாப்பிடுகிறேன்."
என்று கூறி விட்டு, சாப்பாட்டை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளாமல், தனியே அவர் மட்டும் சாப்பிட்டால்,
அவர் சொன்ன
"நான் உம்மை அன்பு செய்கிறேன்"
என்ற வார்த்தைகளில் உயிர் இருக்கிறதா?
செயலில் வெளிப்படாத வார்த்தைகள் செத்த வார்த்தைகள்.
அரசியல் வாதிகளின் மேடைப் பேச்சுக்களில் அன்பு பொங்கி வடியும்.
ஆனால் வாழ்க்கையில் யாருக்கும் உதவி இருக்காது.
மேடைப் பேச்சு வெறும் நடிப்பு.
தன்னை நேசிப்பவன் தேவை இல்லாமல் தன்னைப் பட்டினி போட விரும்ப மாட்டான்.
தன்னைப் போல் பிறரையும் நேசிப்பவன் அருகில் இருப்பவனை பட்டினி போட விரும்ப மாட்டான்.
தன்னை நேசிப்பவன் தனது மீட்புக்காக உழைப்பான்.
தன்னைப் போல் பிறரையும் நேசிப்பவன் அருகில் இருப்பவனும் மீட்படைய உழைப்பான்.
தன்னை நேசிப்பவன் யாராலும் பகைக்கப்பட்ட விரும்ப மாட்டான்.
தன்னைப் போல் பிறரையும் நேசிப்பவன் யாரையும் பகைக்க மாட்டான்.
தன்னை நேசிப்பவன் ஜெயிலுக்குப் போக விரும்ப மாட்டான்.
தன்னைப் போல் பிறரையும் நேசிப்பவன் ஜெயிலுக்குப் போகின்றவர்கள்மீது இரக்கப் படுவான்.
அவர்களுக்கு ஆறுதல் சொல்வான்.
தன்னை நேசிப்பவன் ஆடையின்றி வெளியே போக மாட்டான்.
தன்னைப் போல் பிறரையும் நேசிப்பவன் உடை இல்லாதவர்களுக்கு உடை வாங்கிக் கொடுப்பான்.
நம்மைப் போல பிறரையும் மனதால் பிறரை நேசித்து,
அவர்களோடு அன்பாய்ப் பேசி,
நம்மை நாம் கவனிப்பது மற்றவர்களையும் கவனித்தால்
நமக்கும், மற்றவர்களுக்கும் விண்ணக சாம்ராஜ்யம் உறுதி.
நாம் விண்ணகம் செல்வது போல் நமது அயலானும் அங்கு வர உழைப்போம்,
அதற்காக இறைவனை வேண்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment