Saturday, March 30, 2024

வாழ்வெல்லாம் தவக்காலம்.

வாழ்வெல்லாம் தவக்காலம்.

நாற்பது நாட்கள் தவவாழ்வு வாழ்ந்தோம்.

செபத்திலும் தவத்திலும் தானத்திலும் வாழ்ந்தோம்.

கால அட்டவணைப்படி தவக்காலம் முடிந்து விட்டது.

அப்படியானால் செபமும் தவமும் தானமும் முடிந்து விட்டனவா?

காலையில் 9.30க்கு மணியடிக்கிறது.

மாணவர்கள் அனைவரும் வகுப்பறைகளுக்குள் செல்கிறார்கள்.

ஆசிரியர்களும் செல்கிறார்கள்.

பாடங்கள் போதிக்கப் படுகின்றன.

மாணவர்கள் பாடம் கற்கிறார்கள்.

மாலை 4.30க்கு‌ மணியடிக்கிறது.

பள்ளிக்கூடம் முடிந்து விட்டது.

மாணவர்கள் பாடம் கற்பது முடிந்து விட்டதா?

பள்ளிக்கூடம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் மாணவர்கள் மாணவர்கள் தான்.

கற்பது மாணவர்களின் கடமை தான்.

ஆணும் பெண்ணுமாக இருந்தவர்கள் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும்போது கணவன் மனைவி ஆகிறார்கள்.

தாலி கட்டி முடிந்தவுடன் கணவன் மனைவி உறவு முடிந்து விட்டதா?

இல்லை.

அதற்குப் பின்பு தான் ஆரம்பித்த உறவு தொடர்கிறது.

அதே போல் தான் கால அட்டவணைப்படி தவக்காலம் முடிந்து விட்டாலும் 

செப தவ தான வாழ்வு தொடர்கிறது.

வாழ்க்கை கால அட்டவணைக்குக் கட்டுப்பட்டது அல்ல.

நாம் கிறிஸ்தவர்கள்.

இயேசுவாக வாழ வேண்டியவர்கள்.

இயேசுவின் வாழ்க்கையே செப, தவ, தான வாழ்க்கை தான்.

இறைவனோடு இணைந்து வாழ்வதுதான் செபம்.

Prayer is to be in union with God.
 
அவரே கடவுள்.

தந்தையோடும், பரிசுத்த ஆவியோடும் ஒருவருள் ஒருவர் இணைந்து நித்திய காலமாக வாழ்பவர் இறைமகன் இயேசு.

அப்படியானால் இயேசுவே செபம்.

அவர் செப வாழ்க்கையைக் கால அட்டவணை போட்டு வாழவில்லை.

அவர் நித்திய காலமாக வாழ்ந்து கொண்டிருப்பதே செப வாழ்க்கைதான்.

அவராக நாம் வாழ வேண்டுமெனாறால் நாம் வாழ்நாள் முழுவதும்,

கால அட்டவணை போட்டு அல்ல,

அவரது பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

தன்னைத்தானே ஒறுத்து வாழ்வதில் தவம் அடங்கியிருக்கிறது.


சர்வ வல்லமை வாய்ந்த இறைமகன்

பாவம் தவிர மற்ற மனித பலகீனங்களையும ஏற்று மனுமகனாகப் பிறந்தார்.

தேவ சுபாவத்தில் சர்வ வல்லமை வாய்ந்த இயேசு மனித சுபாவத்தில் மனித பலகீனங்களை ஏற்று வாழ்ந்ததே மிகப்பெரிய தவ வாழ்வு.

நாசரேத்தில் சொந்த வீடு இருக்கும்போது பிறப்பதற்கு பெத்லகேமில் உள்ள சாண நாற்றம் வீசிய மாட்டுத் தொழுவத்தைத் தேர்ந்தெடுத்தார்.

தன்னைக் கொல்ல நினைத்த ஏரோதுவை அழிக்க ஒரு வார்த்தை போதும்.

ஆனால் அவர் அதைச் செய்யாமல் தனது பெற்றோருடன் எகிப்துக்குப் தப்பியோடினார்.

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் அப்பங்களாக மாற்றத் தெரிந்த அவர்

அன்றாட உணவுக்கு தச்சுத் தொழில் செய்தார்.

அவரது பாடுகளும் சிலுவை மரணமும் அவரது தவ வாழ்வின் உச்சக்கட்டம்.

நாம் தவக்காலத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதுமே தவ வாழ்வு வாழ வேண்டும்.

நாம் ஏற்கனவே பலகீனர்கள்.

நமது பலகீனங்களை ஏற்றுக் கொள்வதே மிகப்பெரிய தவ முயற்சி.

நமது வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும், அசௌகர்யங்களையும்,
வசதியின்மைகளையும்

முழுமனதுடன் ஏற்றுக் கொண்டாலே நமது வாழ்வு தவ வாழ்வாக மாறிவிடும்.

நாம் ஏற்றுக்கொள்ளா விட்டாலும்
நமது வாழ்வில் துன்பங்களும், அசௌகர்யங்களும்,
வசதியின்மைகளும்

இருக்கத்தான் செய்யும்.

ஆனால் வீணாகிவிடும்.

ஆண்டவருக்காக அவற்றை ஏற்றுக் கொண்டால் அவை நமக்கு நித்திய பேரின்பத்தைப் பெற்றுத் தரும்.

ஒருவர் தன்னை முழுமையாகத் தன் நண்பருக்குத் தானமாகக் கொடுப்பதைவிடப் பெரிய தானம் இருக்க முடியுமா?

இயேசு அதைத்தான் செய்தார்.

சர்வ வல்லப கடவுளாகிய அவர் ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்து,

நம்மைத் தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டதோடு,

நமது மீட்புக்காகத் தன்னையே தானமாக அர்ப்பணித்ததோடு,

தன்னையே நமக்குத் தினமும் உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.

இதை விடப் பெரிய தானம் இருக்க முடியாது.

ஆக செப, தவ, தானத்தையே தனது வாழ்வாகக் கொண்டிருந்தவர் இயேசு.

இயேசு எவ்வழி, அவரது சீடர்கள் அவ்வழி.

நாமும் அவரோடு இணைந்து செப வாழ்வு வாழ்வோம்.

வாழ்வின் வசதியின்மைகளை
ஆன்மீக அருள் ஈட்டும் வசதிகளாக ஏற்று தவ வாழ்வு வாழ்வோம்.

இறைப் பணிக்கும், பிறர் அன்புப் பணிக்கும் நம்மை முழுமையாக அர்ப்பணித்து தான வாழ்வு வாழ்வோம்.

பொருட்களை மட்டும் கொடுப்பது தானமல்ல. அதோடு நமது அன்பையும், நல்ல மனதையும் சேர்த்துக் கொடுப்பது தான் தானம்.


நமது செப, தவ, தான வாழ்வு நாற்பது நாள் தவக்காலத்தோடு முடிந்து விடவில்லை,

வாழ்நாழெல்லாம் தொடர்கிறது.

ஆண்டுக்கு ஒரு முறை தவக்காலம் வருவது

 செப, தவ, தான வாழ்வை நாம் மறந்து விடாமலிருக்க 

நமக்கு ஞாபகப் படுத்துவதற்காகத்தான்.

நமது வாழ் நாளெல்லாம் நமக்குக் தவக்காலம் தான்.

நமது வாழ்நாள் முடியும் போது நித்திய பேரின்ப வாழ்வு ஆரம்பிக்கும்.

‌லூர்து செல்வம்.

No comments:

Post a Comment