(யோவான் 2:16)
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும்
அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்.
ஆடு மாடுகளையும் விரட்டினார்.
நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்", என்று கூறினார்.
எதற்காக இப்படிச் செய்தார்?
"என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" (யோவான். 2:16)
கோவில் இறைவனின் இல்லம்,
வியாபாரக்கூடம் அல்ல.
இறைவனை வழிபட வேண்டிய இடத்தில் கூட வேண்டியது இறை மக்கள், வியாபாரிகள் அல்ல.
மக்கள் இறைவனுக்கு காணிக்கை செலுத்த வேண்டிய பொருட்களைத் தான் வியாபாரிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவை விற்கப்பட வேண்டிய இடம் கோவில் அல்ல.
காணிக்கை செலுத்தப்பட வேண்டிய இடத்தில் அவை விற்கப்பட்டதால் தான்
இயேசு விற்றவர்களை விரட்டினார்.
இயேசுவின் இந்த செயலில் கூட ஏழைகளின் மேல் அவர் கொண்டிருந்த இரக்கம் வெளிப்படுகிறது.
மற்ற எல்லாரையும் சாட்டையால் விரட்டியவர் புறா விற்பவர்களிடம் மட்டும்
"இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்", என்று கூறினார்.
ஏனெனில் புறாக்கள் ஏழைகளின் காணிக்கைப் பொருள்.
அன்னை மரியாளும், சூசையப்பரும் குழந்தை இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேமுக்குக் கொண்டு சென்றபோது,
ஏழைகளாகிய அவர்கள்
இரு புறாக்குஞ்சுகளைப் பலியாகக் கொடுத்தது ஞாபகத்துக்கு வருகிறது.
(லூக். 2:24)
ஏழைகளாகிய நாம் பாக்கியவான்கள்,
ஏனெனில் நாம் இயேசுவின் இரக்கத்தைப் பெற்றவர்கள்!
அவருடைய ஆட்சி நமக்கு உரியதே!
கோவிலில் இயேசு செய்ததிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?
ஒரு முறை ஒரு பங்குக் குருவானவர் பங்குக் கோவிலைப் புதுப்பிப்பதற்காக நன்கொடை
வசூலிக்கப் புறப்பட்டார்.
ஒரு நபர் 4000 ரூபாய் நன்கொடையாகக் கொடுப்பதாகச் சொன்னார்.
அப்போது 5000 ரூபாய் அல்லது அதற்கு மேல் கொடுப்பவர்களின் பெயர்கள் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்று கூறப் பட்டது.
உடனே 5000 ரூபாய் கொடுப்பதாக ஏற்றுக் கொண்டார்.
முதலில் ஏற்றுக் கொண்டது காணிக்கை.
இரண்டாவது ஏற்றுக் கொண்டது சுய விளம்பரம்.
இயேசுவின் சாட்டைக்கு வேலை கொடுக்கக் கூடியது.
காணிக்கையை காணிக்கையாக மட்டும் கொடுக்க வேண்டும்.
ஒரு ஆள் ஞாயிற்றுக்கிழமை பூசையில் காணிக்கை போடுவதற்கென்றே ஒரு பழைய கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டைப் பத்திரமாக வைத்திருந்தாராம்.
பூசையில் காணிக்கை வசூலித்த போது Pants pocket லிருந்து அதை எடுத்துப் போட்டாராம்.
அவர் போட்ட பின், பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு ஆள் ஒரு 500 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தாராம்.
அதை வாங்கி காணிக்கைப் பையில் போட்டாராம்.
பூசை முடிந்து வெளியே வந்த பின்
500 ரூபாய் காணிக்கை போடத் தந்தவரைப் பாராட்டினாராம்.
அவர் இவரைப் பார்த்து,
"நான் 500 ரூபாய் காணிக்கை போடத் தரவில்லை.
நீங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து காணிக்கை போட ரூபாய் எடுத்தபோது
500 ரூபாய் நோட்டு உங்கள் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தது.
அதை எடுத்து உங்களிடம் தந்தேன்.
நீங்கள் அதையும் காணிக்கையாகப் போட்டு விட்டீர்கள்.
உங்களைத்தான் நான் பாராட்ட வேண்டும் என்றாராம்.
அப்போது இவர் மூஞ்சி எப்படிப் போயிருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்!
இது சிரிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு.
பிறருக்கு உதவி செய்வதும் இறைவனுக்குக் கொடுக்கும் காணிக்கை தான்.
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் கொடுக்க வேண்டும்.
"நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்."
(மத்தேயு. 6:3)
மிருகங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்துவது அவனிடமுள்ள புத்தி.
புத்தியைப் பயன்படுத்தி தான் மனிதன் அறிவை வளர்க்க வேண்டும்.
மிருகத்துக்கு அறிவு இல்லை.
மனிதன் புத்தியை ஒழுங்காகப் பயன்படுத்தி அறிவை வளர்க்க உதவுவதற்காகத் தான் பள்ளிக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
பள்ளியின் மூலம் பெற்ற அறிவை இறைப் பணியில் பயன்படுத்த உதவுவது ஞானம்.
ஞானம் உள்ளவர்கள் தான் கடவுளுக்காக வாழ முடியும்.
இறைவனை வழிபட கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள்
கோவிலுக்கு அடுத்த படி பரிசுத்தமானவை,
பள்ளிக்கூடங்களில் இறைவனைப் பற்றி கற்கிறோம்,
கோவில்களில் இறைவனை வழிபடுகிறோம்,
இரண்டையும் ஒழுங்காகச் செய்தால்தான் உலகில் இறைவனுக்காக வாழ முடியும்.
ஆனால் இன்று பள்ளிக்கூடங்களும் வியாபாரக்
கூடங்களாக மாறிவிட்டன.
அங்கே பணம்தான் முழு விளையாட்டையும் விளையாடிக் கொண்டிருக்கிறது.
பாடத் திட்டம் இறைவனை மறந்து விட்டது.
இறைவனை மறந்த கல்வியில் ஒழுக்கத்திற்கு இடமில்லை.
மதிப்பெண்களுக்கு மட்டுமே இடமிருக்கிறது.
கல்வி கற்று விட்டுதான் அனைவரும் பொது வாழ்வுக்குள் நுழைகிறார்கள்.
உலகில் லஞ்சமும், வஞ்சமும், ஒழுக்கக் கேடும் தலை விரித்து ஆடுவதற்கு வியாபாரக் கூடங்களாக மாறிவிட்ட
பள்ளிக்கூடங்கள் தான் காரணம்.
இறை பக்தி உள்ளவர்கள் இயேசு பயன்படுத்திய சாட்டையை அவைகளுக்கு எதிராக எடுக்க வேண்டும்.
எடுப்பார்களா?
இயேசுவிடம் தான் வேண்ட வேண்டும்.
நமது குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை.
தந்தைதான் அதன் பாப்பரசர்.
குட்டித் திருச்சபை மட்டுமல்ல, ஒரு குட்டி ஆலயமும் கூட.
(Infant Church)
இயேசு நிறுவிய திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தையர், ஆயர்கள், குருக்கள், கன்னியர் ஆகிய அனைவரும் இங்கேதான் பிறந்து வளர்கிறார்கள்.
இயேசுவே திருக்குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தார்.
தனது 33 ஆண்டு கால வாழ்க்கையில் 30 ஆண்டுகள் திருக்குடும்பத்தில் தான் வாழ்ந்தார்.
ஆலய வழிபாடும் குடும்பத்தில் தான் ஆரம்பிக்கிறது.
ஆலயம் பணிக் குருத்துவத்தின் கையில், குடும்பம் பொதுக் குருத்துவத்தின் கையில்.
திருச்சபை வயல் என்றால் குடும்பம் நாற்றங்கால்.
நாற்றங்காலில் பிறக்கும். நாற்றுகள் தரமானவையாக இருந்தால் தான் வயலில் வளரும் பயிர் தரமானதாக
இருக்கும், விளைச்சலும் நன்றாக இருக்கும்.
குடும்பத்தின் தரத்துக்கு குடும்பத் தலைவர் தான் பொறுப்பு.
குடும்பத்தினர் விசுவாசத்தில் வளர வேண்டும்.
குடும்பத்தில் வழிபாடு சிறப்பாக நடைபெற வேண்டும்.
பொதுக் குருத்துவத்தினர் வாழும் குடும்பம் தலைமைக் குருவாகிய இயேசுவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விசுவாசத்திலும், வழிபாட்டிலும் வாழ்கிறதா?
வாழ்ந்தால் மகிழ்ச்சி.
வாழாவிட்டால் சாட்டையை எடுக்க வேண்டியது யார்?
பணிக்குருத்துவத்தினர் தான்.
YouTube ல் ஒரு மறையுரையில் கேட்ட ஒரு ஒப்புமை நினைவுக்கு வருகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குப்பைத் தொட்டி இருக்கும்.
வீட்டில் விழும் குப்பைகளைப் பெருக்கி அதில் போடுவார்கள்.
ஒவ்வொரு தெரு எல்லையிலும் ஒரு பெரிய பஞ்சாயத்துக் குப்பைத் தொட்டி இருக்கும்.
ஒவ்வொரு நாள் காலையிலும் வீட்டுக் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளைப் பஞ்சாயத்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள் ..
வீட்டுக் குப்பைத் தொட்டி சுத்தமாகிவிடும்.
தினமும் இதைச் செய்வார்கள்.
வீட்டில் குப்பையைச் சேர விட மாட்டார்கள்.
இது ஒப்புமை.
நாம் ஒவ்வொருவரும் ஒரு குப்பைத் தொட்டிதான்.
நம்மில் சேரும் குப்பை நாம் செய்யும் பாவங்கள்.
பாவக் குப்பையை அதிகம் சேர விடக்கூடாது.
பாவக் குப்பையை எங்கே கொண்டு போய்க் கொட்ட வேண்டும்?
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கோவிலுக்குக் கொண்டு போய் பாவ சங்கீர்த்தனக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட வேண்டும்.
அப்போது தான் நாம் பரிசுத்தமாவோம்.
நாம் பாவங்களைக் கொட்ட வேண்டுமானால் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் பாவத் தொட்டி இருக்க வேண்டும்.
இல்லா விட்டாலும்,
இருந்தும் பாவக் குப்பையைக் கொட்டா விட்டாலும்
தாய்த் திருச்சபை சாட்டையை எடுக்க வேண்டும்..
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment