Friday, February 16, 2024

"பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;"ம்ம(மாற்கு 1:13)

"பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;"
(மாற்கு  1:13)

இயேசு முழுமையாகக் கடவுள். (Fully God)

இயேசு முழுமையாக மனிதன்.(Fully Man)

ஆள் ஒன்று, சுபாவம் இரண்டு.

கடவுள் என்ற வகையில் மனித   பலகீனங்களுக்கு அபபாற்பட்டவர்.

மனிதன் என்ற வகையில் பாவம் தவிர, மற்ற சகல மனித பலகீனங்களுக்கும் உட்பட்டவர்.

மனித பலகீனங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

அவரது மனித நடவடிக்கைகள் எல்லாம் மனிதர்களாகிய நமக்கு ஆன்மீகப் பாடம் கற்பிப்பனவாகவே இருந்தன.

முப்பது ஆண்டுகள் தனது பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்த பின், திருமுழுக்கு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்.

பின் தூய ஆவியால் பாலைநிலத்துக்கு அழைத்து வரப்பட்டார். 

நாம் தூய ஆவியுடன் தான் ஆன்மீக வாழ்க்கையை  ஆரம்பிக்க வேண்டும் என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
 
"பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; "
(மாற்கு  1:13)

இந்த வசனத்தில் குறிக்கப்பட்ட ஆண்டவரின் செயல்பாடுகள் நம்முடைய ஆன்மீக வாழ்க்கையின் முக்கிய கடமைகளைக் குறிக்கின்றன.

நமது ஆன்மீக வாழ்க்கையில் நமது பலவீனம் காரணமாக அநேக சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

சோதிப்பவன் சாத்தான்.

ஒரு வகையில் நாம் சாத்தானோடு போரிட வேண்டியிருக்கிறது.

போர் இருவகை.

1. எதிரி நம் மீது போர் தொடுக்கும்போது நம்மை அவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அவனோடு போரிடுவது ஒரு வகை.
(Defensive war)

 2. எதிரி நம்மை தாக்குமுன்பே நாம் தயார் நிலையில் இருந்து அவனைத் தாக்குவது இன்னொரு வகை. (Offensive war)

சாத்தான் இயேசுவைச் சோதனைகளால் தாக்க வருவது அவருக்குத் தெரியும்.

மத்தேயு நற்செய்தியை வாசித்தால் இயேசு என்னென்ன சோதனைகளை சந்திக்க நேர்ந்தது என்பது தெரியும்.

1. போசனப் பிரியம். (Gluttony)
2. வீண் புகழ் (vain glory)
3.பேராசை. (Greed)

இந்த சோதனைகளுடன் சாத்தான் அவரைத் தாக்க வருவதற்கு முன்னாடியே இயேசு தன்னை இவற்றிற்கு எதிராக தயார் படுத்திக் கொள்கிறார்.

நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு இருந்ததன் மூலம் போசனப் பிரியத்துக்கு எதிராகத் தன்னைத் 
தயார் படுத்திக் கொள்கிறார்.

தாழ்ச்சியுடன் தன்னைப் பாலை நிலத்தில் தனிமைப் படுத்திக் கொண்டு தவம் செய்து வீண் புகழுக்கு எதிராகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறார்.

ஏழ்மையுடனும் எளிமையுடனும் நாற்பது நாட்கள் தவம் செய்ததன் மூலம் பேராசைக்கு எதிராகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறார்.

சாத்தான் அவரை அணுகி, "நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்" என்றபோது,

 அவர் மறுமொழியாக; "'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே" எனக்கூறி அந்த சோதனையை வெல்கிறார். 

 அலகை அவரை எருசலேம் . கோவிலின் உயர்ந்த பகுதியில்  நிறுத்தி, 


 ";நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 

'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். 

உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று   சொன்ன போது. 


இயேசு அதனிடம்: "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே" என்று சொல்லி அந்த சோதனையை வெல்கிறார். 

 அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, 

 அவரிடம், "நீர்    என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்ற போது,


 இயேசு  "அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது" என்று 
கூறி அந்த சோதனையை வெல்கிறார். 

கடவுளாகிய இயேசுவுக்கு சோதனைகளை வெல்ல இவ்வளவு முயற்சி தேவை இல்லை.

அவரது அனுமதி இல்லாமல் சாத்தான் அவரை அணுக முடியாது.

அவர் இவ்வளவையும் செய்தது செயல் மூலம் நமக்கு ஆன்மீக பாடம் போதிக்கவே.
 
நமது ஆன்மீக அனுபவத்தில் சாத்தான் எந்தெந்த வகையில்,

எந்த புண்ணியங்களுக்கு எதிராக,

 நம்மைச் சோதிக்கிறான் என்று நமக்குத் தெரியும்.

நாம்  அந்த புண்ணியங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

நாம் எப்போதும் தாழ்ச்சியாக இருந்தால் தற்பெருமையால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

நாம் எப்போதும் அளவோடு சாப்பிட்டால் போசனப் பிரியத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

இறைவனுக்காக நாம் அனைவரையும் நேசித்தால் நம்மிடம் பழிவாங்கும் உணர்வு தோன்றாது.

தவ முயற்சிகள் செய்வது புண்ணியங்களில் பயிற்சி பெறுவதற்காகத்தான்.

அதற்காகத்தான் நமக்கு தவக்காலம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 இயேசு நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு இருந்தார்.

அதன் நினைவாக நாம் நாற்பது  நாட்கள் செப, தவ, தர்ம முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.

இதைத் தவக்காலம் என்று அழைக்கிறோம்.

ஆனால் உண்மையில் இந்த நாற்பது நாட்கள் மட்டுமல்ல,

நமது வாழ்க்கை முழுவதும் தவக்காலம்தான்.

விண்ணக வாசல் நெருங்கும் வரை, 

அதாவது நமது மரணம் வரை, 

நான் செபம் செய்யவும்,
 தவம் செய்யவும்,
 தர்மம் செய்யவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

திருமண விழாவின் போது விருந்து உண்ணும் நாம் வாழ்நாள் முழுவதும் சாப்பிடத் தானே செய்கிறோம்.

அதேபோல் தான் இயேசுவின் மரண நாளுக்காக நம்மைத் தயாரிக்க தவம் செய்வது போல

 நமது மரணத்துக்காக நம்மைத் தயாரிக்க மரணம் வரை தவம் இருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை மாலை மட்டுமல்ல நமது வாழ்நாளே சிலுவைப் பாதை தான்.

உண்மையில் இயேசுவின் சிலுவைப் பாதை அவர் மாட்டுத் தொழுவத்தில் அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறக்கும் போது ஆரம்பித்து விட்டது.

இயேசு பிறந்து குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயின் மடியில் இருந்தது போலவே

அவர் மரித்து அடக்கம் பண்ணப் படுவதற்கு முன்னாலும் தாயின் மடியில் அமர்ந்தார்.

குழந்தை இயேசு தாயின் முத்தத்தைப் பெற்று நடப்பதற்காகத் தரையில் இறங்கியது போல 

தாயின் முத்தத்தைப் பெற்று உயிப்பதற்காகக் கல்லறைக்குள் இறங்கினார்.

உயிர்த்த பின் முதலில் தனது அன்னைக்குதான் காட்சியளித்தார்.

அதனால் தான் அன்னை மரியாள் மற்ற பெண்களைப் போல் கல்லறைக்கு வரவில்லை

நாமும் கல்லறைக்குள் இறங்கும் வரை இயேசுவைப் போல தவம் செய்ய வேண்டும்.

அப்போதுதான் இயேசுவுடன் நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment