Saturday, February 3, 2024

"வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்."(மாற்கு நற்செய்தி 7:15)

" வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்."
(மாற்கு நற்செய்தி 7:15)

ஒரு நாள் இயேசுவின் சீடருள் சிலர் கழுவாத கைகளால் உண்பதைக் கண்ட  பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, 

"உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர். 

ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் சமூக அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

இரண்டாம் உலகப் போரின் காரணங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.

ஒரு மாணவன் எழுந்து நின்று

"சார், ஒரு சந்தேகம்." என்றான்.

"கேள்." என்றார்.

"சார், நீங்கள் ஏன் கண்ணாடியைக் கண்ணில் போடாமல் மேஜையில் வைத்திருக்கிறீர்கள்?"

''ஏண்டா, பாடத்தைக் கவனிக்கிறாயா? கண்ணாடியைக் கவனிக்கிறாயா?

 நடத்தப்படுகின்ற பாடத்தில்  ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள். உட்கார்."

மனிதர்களின் ஆன்மாவைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக உலகில் மனிதனாகப் பிறந்தவர் இயேசு.

அவர் அறிவித்த எல்லா நற்செய்திகளும் அதை நோக்கியே இருந்தன.

ஆன்மீக மீட்பைப் பற்றி போதித்த ஆண்டவரிடம் அதைப்பற்றி எதுவும் கேட்காமல் கைகளைக் கழுவி விட்டு சாப்பிடுவது பற்றி பரிசேயர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

  "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" 

கைகளைக் கழுவி விட்டு உணவு உண்பது முழுக்க முழுக்க உடலைச் சார்ந்த காரியம்.

மீட்புப் பெற வேண்டியது ஆன்மா, உடல் அல்ல.

ஆன்மாவின் மீட்புக்கு அத்தியாவசியமானது இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்.

"மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கும் நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு விட்டீர்கள்.

உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். " என்று இயேசு அவர்களுக்குப் பதில் சொல்கிறார்.

சாப்பிடுமுன் கை கழுவ வேண்டும் என்பது மனிதர்களாகிய நாம் நமக்கே கொடுத்துள்ள உடல் சுத்தம் சார்ந்த கட்டளை, இறைவன் கொடுத்த கட்டளை அல்ல.

கை கழுவாமல் உணவு உண்டால் கையில் உள்ள அழுக்கு உடலுக்குள் செல்லும்.

அதனால் உடலுக்கு ஏதாவது பிரச்சனை வரலாம்.

ஆனால் அந்த பிரச்சனை நமது ஆன்மாவை எந்த விதத்திலும் பாதிக்காது.

சீரணக் கோளாறு காரணமாக நாம் மோட்சத்தை இழக்க மாட்டோம்.

அது நமது ஆன்மாவைக் காயப்படுத்தாது.

ஆனால் மனிதருடைய மனதில் உள்ள அழுக்கான 
பரத்தைமை, 
களவு, 
கொலை, 
விபசாரம், 
பேராசை,
 தீச்செயல், 
வஞ்சகம், 
காமவெறி, 
பொறாமை, 
பழிப்புரை, 
செருக்கு, 
மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் 

சொல் மூலமும் செயல் மூலமும் வெளிப்படும் போது
  அவர்களை ஆன்மீக ரீதியாகத் தீட்டுப் படுத்துகின்றன. 

பாவ எண்ணங்கள் ஆன்மாவை நோயில் விழச் செய்கின்றன.

சாப்பிடும் முன் கைகளை கழுவுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்

தீயனவாகிய  அனைத்து எண்ணங்களையும் உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் வேண்டும்.

ஆன்மீகத் தூய்மைக்குத் தேவையானது கைகளின் சுத்தம் அல்ல, உள்ளத்தின் சுத்தமே.

பரிசேயர்கள் உடலைச் சார்ந்த மரபுக் கொள்கைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை

உள்ளத்தின் சுத்தத்திற்குக் கொடுக்கவில்லை.

நாம் எப்படி?

சிறிது சிந்திப்போம்.

ஞாயிற்றுக்கிழமைக் காலையில் கோவிலுக்குப் புறப்படும் முன் 

பல் தேய்த்து, முகம் கழுவி, பவுடர் போட்டு நமது முகத்தை அழகு படுத்துகிறோம்.

குளித்து, சுத்தமான, கவர்ச்சிகரமான உடை அணிந்து, நமது உடலை அழகு படுத்துகிறோம்.

கோவிலுக்கு வரும் மற்றவர்கள் நம்மை பார்த்து, 

"ஆகா, என்ன அழகு"

என்று பாராட்ட வேண்டும்.

மற்ற மனிதர்களின் பாராட்டைப் பெற ஆசைப்படும் நாம் கடவுளின் பாராட்டைப் பெற என்ன செய்கிறோம்?

கடவுள் நமது ஆன்மாவைப் பார்க்கிறார்.

ஆன்மா பாவமில்லாமல் சுத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்க்கிறார்.

திருப்பலியில் கலந்து கொள்ளும் முன் பாவ சங்கீர்த்தனம் என்னும் ஆன்மீகத் தண்ணீரால் நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்துகிறோமா?

அல்லது பாவ அழுக்கோடு கோவிலில் அமர்ந்து 

திரு விருந்தின் போது பரிசுத்தரான திவ்ய நற்கருணை நாதரை பாவ அழுக்கு நிறைந்த இதய வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறோமா?

பாவத்தோடு நற்கருணை நாதரை உட்கொள்வது குளிக்கப் போய் சேற்றை அள்ளி பூசிக்கொண்டு திரும்புவதற்குச் சமம்.

அழியக்கூடிய உடலும் அழியாத ஆன்மாவும் சேர்ந்தவன் தான் மனிதன்.

உடலை எவ்வளவு நன்றாகக் கவனித்தாலும் அது ஒரு நாள் மண்ணோடு மண்ணாகிவிடும்.

ஆன்மாவை நன்றாகக் கவனித்தால் தான் நித்திய பேரின்ப வீட்டுக்கு அது செல்லும்.

உலகில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது உண்மைதான்.

ஆனால் அது உலக வாழ்க்கைக்கு மட்டும்தான்.

பாவமற்ற வாழ்வுதான் பரமனுக்கு ஏற்ற வாழ்வு.

பரமனுக்கு ஏற்றபடி வாழ்வோரை பரலோகம் செல்வர்.

உலகுக்கு மட்டும் ஏற்றபடி வாழ்பவர்கள் நிலை வாழ்வை இழந்து விடுவர்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் தூய்மையாக வாழ்வோம்.

அதுவே இறைவனுக்கு ஏற்ற வாழ்வு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment