துவக்கம் என்று ஒன்று இருந்தால் அதற்கு முடிவும் உண்டு.
துவக்கம் இல்லாததற்கு முடிவு இல்லை.
கடவுளுக்குத் துவக்கம் இல்லை,
ஆகவே முடிவு இல்லை.
மனிதனுக்குத் துவக்கம் உண்டு, ஆகவே முடிவு உண்டு.
மனிதனுக்குத் துவக்கம் பிறப்பு,
முடிவு இறப்பு.
மனிதனின் துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட காலம் அவனது உலக வாழ்க்கை.
உலகில் வாழ்க்கையைத் துவக்கிய மனிதன் அது முடிவுற விரும்புவதில்லை.
ஏனெனில் அவன் நிரந்தரமான வாழ்க்கையையே விரும்புகிறான்.
நிரந்தரமாக வாழ விரும்புவது அவனது இயல்பு.
ஆகவே பிறந்தவன் இறக்க விரும்புவதில்லை.
ஆனால் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிறந்தவனுக்கு இறப்பு வந்தே தீரும்.
மனிதனுக்கு பிறப்பும் இறப்பும் அவனது விருப்பத்திற்கு அப்பாற்பட்டவை.
மனிதன் பிறக்க வேண்டும் என்று விரும்பிப் பிறக்கவில்லை, ஏனெனில் பிறக்கு முன் அவன் இல்லை.
இல்லாதவன் எப்படி விரும்ப முடியும்?
அவன் பிறந்தது கடவுளின் விருப்பத்தினால்.
அவனது இறப்பும் அப்படியே.
பிறந்தவன் இறப்பை விரும்பாததால் அதை நினைக்கப் பயப்படுகிறான்.
அழுகையோடு பிறப்பை ஆரம்பித்தாலும் ஆனந்தத்தோடு தான் வாழ விரும்புகிறான்.
ஆனால் உலக வாழ்க்கை ஆனந்த மயமாக இருப்பதில்லை.
இன்பமும் துன்பமும் கலந்து வருவது தான் வாழ்க்கை.
இன்பம் மகிழ்ச்சியைத் தரும், துன்பம் வருத்தத்தைத் தரும்.
ஆகவே மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்தது தான் வாழ்க்கை.
ஆனாலும் மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறான்.
எப்போதும் மகிழ்ச்சியாக வாழ விரும்புவதும்,
நிரந்தரமாக வாழ விரும்புவதும் அவனுடைய இயல்பு.
அதற்குக் காரணம் அவனுள் இருக்கும் ஆன்மா.
அவனுடைய உடல் அழியும் தன்மை கொண்டது.
ஆகவேதான் அவனுடைய இறப்பு தவிர்க்க முடியாதது.
ஆனால் அவனுடைய ஆன்மா அழிய முடியாதது.
அதனால் தான் நிலையாக வாழ விரும்புகிறது.
அதன் ஆசை நிறைவேறும், இவ்வுலகில் அல்ல, மறுவுலகில்.
ஆனால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ விரும்புவது நிறைவேறுமா?
ஆன்மாவைப் படைத்த கடவுள் நித்திய காலமாக அளவு கடந்த மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.
கிணற்றில் தண்ணீர் இருக்கிறது.
தண்ணீர் வேண்டுமென்றால் கிணற்றுக்குள் இறங்க வேண்டும்.
கடவுளிடம் அளவு கடந்த மகிழ்ச்சி இருக்கிறது.
ஆகவே மகிழ்ச்சி வேண்டுமென்றால் கடவுளுக்குள் இறங்க வேண்டும்.
நாம் கடவுளுக்குள்ளும் கடவுள் நமக்குள்ளும் இருந்தால் நாம் நிரந்தரமாக மகிழ்ச்சியுடன் வாழலாம்.
இவ்வுலகிலும் மறு உலகிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.
அதாவது ஆன்மா உடலோடு இருக்கும் போதும், உடலை விட்டு பிரிந்த பின்பும் மகிழ்ச்சியாக வாழலாம்.
நாம் நிரந்தரமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழும் கடவுளோடு வாழ வேண்டும்.
தண்ணீருக்குள் இறங்குபவன் தண்ணீரில் நனைவான்.
கடவுளோடு வாழ்பவன் அவரது பரிசுத்தத்தனத்தால் நிரப்பப்படுவான்.
கடவுள் பரிசுத்தர், பரிசுத்தரோடு வாழ்பவனும் பரிசுத்தமாக வாழ்வான்.
பரிசுத்தரோடு வாழ்வது எப்படி?
பரிசுத்தரின் விருப்பப்படி வாழ்பவன் பரிசுத்தரோடு வாழ்வான்.
பாவம் பரிசுத்தரின் விருப்பத்திற்கு எதிரானது.
பாவமில்லாத ஆன்மா பரிசுத்தமானது.
ஆகவே நாம் இவ்வுலகில் பாவம் இல்லாமல் பரிசுத்தமாக வாழ்ந்தால் இறைவனது மகிழ்ச்சியில் நமக்கும் பங்கு கிடைக்கும்.
பாவமின்றி வாழ்பவன் இறப்புக்கு பயப்பட மாட்டான்.
ஏனெனில் இறப்பினால் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்க முடியாது.
இறைவனிடமிருந்து நாம் பெற்ற மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாது.
இவ்வுலகத் துன்பங்கள் நமது மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பிரிக்க முடியுமா?
துன்பங்களைத் துன்பங்களாக நினைத்தால் அவை நமது மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பிரித்து விடும்.
ஆனால் துன்பங்களை நமக்கு ஆன்மீக அருளைப் பெற்றுத் தரும் சிலுவைகளாக நினைத்தால் அவை நமது மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.
மகிழ்ச்சி ஆன்மாவைச் சேர்ந்தது.
உலக துன்பங்களைச் சிலுவைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டியது நமது ஆன்மா தான்.
நமது ஆன்மாவை மீட்கவே இறைமகன் மனுமகனாகப் பிறந்து சிலுவையைச் சுமந்து அதில் தன்னையே பலியாக்கினார்.
நாமும் நமது சிலுவையை இறை மகனோடு சுமந்து சென்றால் இறைவனுக்குரிய மகிழ்ச்சியில் நமக்கும் பங்கு கிடைக்கும்.
மனுமகன் சிலுவையில் மரணம் அடைந்தார்.
அவரது மரணம் நமக்கு மீட்பைப் பெற்று தந்தது.
ஆகவே மரணம் ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சிக்கு உரியது.
நமது மரணம் விண்ணுலக பேரின்ப வாழ்வுக்கான வாசல்.
ஆகவே மரணத்தை நினைத்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
மரணத்தை எதிர்பார்த்து வாழ்வதே,
அதாவது,
விண்ணகப் பேரின்ப வாழ்வை எதிர்பார்த்து வாழ்வதே
உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.
உலகில் மனிதனின் துவக்கம் பிறப்பு.
முடிவு இறப்பு.
நமது நிரந்தரமற்ற வாழ்வின் முடிவு தான் நித்திய நிரந்தரமான பேரின்ப வாழ்வின் ஆரம்பம்.
முடிவுதான் ஆரம்பம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment