ஒரு ஊருக்கு வழி கேட்க வேண்டுமானால் அந்த ஊர்க்காரரிடம் கேட்க வேண்டும்.
மற்றவர்களை விட அவருக்குதான் மிகச் சரியான வழி தெரியும்.
மண்ணில் பிறந்து மண்ணிலேயே வாழும் நாம் விண்ணகம் செல்ல யாரிடம் வழி கேட்கலாம்?
விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த ஒருவர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரிடம் சென்று கேட்போமா?
யார் அவர்?
சுமார் 2024 ஆண்டுகளுக்கு முன் விண்ணிலிருந்து இறங்கி வந்து
நமது ஆலய நற்கருணைப் பேழையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவிடம் சென்று கேட்போம்.
"இயேசுவே, முதலில் உமக்கு எனது பணிவன்பான ஆராதனை.
அடியேன் விண்ணகம் செல்ல ஆசைப்படுகிறேன்.
அங்கிருந்து இறங்கி வந்த உமக்கு தான் அங்கே செல்ல சரியான வழி தெரியும் என்று சொல்கிறார்கள்.
வழியைச் சொல்லி கொஞ்சம் உதவி செய்யுங்களேன்!"
"'கொஞ்சமல்ல, நிறையவே உதவி செய்கிறேன்.
நான் அங்கிருந்து இறங்கி வந்ததே உங்களை அங்கு அழைத்துச் செல்வதற்காகத்தானே."
"அப்படியா? விண்ணகத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும்?"
""விண்ணகம் செல்ல விரும்புவோர் முதலில் என் சீடர்களாக மாற வேண்டும்.
அப்புறம் என் பின்னால் வந்தால் போதும்."
''உமது சீடர்களாக மாற என்ன செய்ய வேண்டும்?"
"என்னைப் பின்பற்ற விரும்புவோர் தங்கள் நலம் துறந்து தங்கள் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்."
"அப்படியானால் நீங்கள் செல்லும் பாதை சிலுவைப் பாதையாக அல்லவா இருக்கும்."
"'இருக்குமென்ன, விண்ணகப் பாதையே சிலுவைப் பாதைதான்."
"ஆண்டவரே, நீங்கள் சிலுவையைச் சுமந்து சென்றது பிலாத்துவின் அரண்மனையிலிருந்து கல்வாரி மலைக்குத்தானே .
கல்வாரி மலையிலா விண்ணகம் இருக்கிறது?"
"'எதற்காகச் சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி மலைக்குப் போனேன்?"
"சிலுவையில் அறையப்பட்டு .உங்களையே எங்களுக்காக தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுக்க."
"'எதற்காகப் பலி?''
"எங்களது பாவங்களுக்குப் பரிகாரமாக."
"'எதற்காகப் பரிகாரம்?"
"நாங்கள் பாவ மன்னிப்புப் பெறுவதற்காக."
"'எதற்காகப் பாவ மன்னிப்பு?"
"பாவ மன்னிப்பு பெற்றால்தான்
விண்ணக நிலை வாழ்வுக்குள் நுழைய முடியும்."
"'இப்போ சொல்லு, எதற்காக நான் சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி மலைக்குச் சென்றேன்?"
"நாங்கள் விண்ணக நிலை வாழ்வுக்குள் நுழைவதற்காக."
"'இப்போது புரிகிறதா விண்ணக வாழ்வுக்குள் நுழைவதற்கான வழி சிலுவைப் பாதை தான் என்று?"
"ஆண்டவரே நீங்கள் மரத்தாலான சிலுவையைச் சுமந்து சென்றீர்கள்.
நாங்களும் மரத்தாலான சிலுவையைச் சுமந்து செல்ல வேண்டுமா?"
"'சிலுவை ஒரு அடையாளம். அதை சுமக்கும் போது நான் பட்ட அளவு கடந்த வேதனை தான் உண்மையான சிலுவை.
வேதனையைப் பாவ பரிகாரத்துக்காக அனுபவிப்பது தான் சிலுவை.
உனது வாழ்வில் நீ அனுபவிக்கும் துன்பங்களையும்,
அவற்றால் ஏற்படும் வேதனையையும்
உனது பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக ஏற்றுக்கொண்டு
அதைப் பரம தந்தைக்கு ஒப்புக்கொடுத்தால் அது சிலுவை.
நீ காலையில் எழும்போது என்ன செபம் சொல்லிக் கொண்டு எழுகிறாய்?"
''என் மேல் சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு,
" தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்" என்று சொல்லிக் கொண்டே எழுகிறேன்."
"'அதன் பொருள் என்னவென்று தெரியுமா?"
"தெரியாது ஆண்டவரே. அனேக செபங்களை பொருள் தெரியாமல் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அதன் பொருளை சொல்லித் தாருங்கள்."
"'நீ வரைகிற சிலுவை அடையாளம் நான் என்னையே உனது பாவங்களுக்குப் பரிகாரமாக சுமந்து மரித்த சிலுவையையும்,
நீ சுமக்கப் போகும் சிலுவையையும், அதாவது படப் போகும் துன்பங்களையும் குறிக்கும்.
அவற்றை உனது பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக
தந்தை, மகன், தூய ஆவிக்கு ஒப்புக்கொடுக்கிறாய்."
"அதாவது ஒவ்வொரு நாளின் அனுபவங்களையும் அனைவரின் பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்பு கொடுக்கிறேன், சரியா?"
"'சரி. அப்படி நீ ஒப்புக் கொடுப்பதன் மூலம் நீ நாள் முழுவதும் சிலுவையைச் சுமக்கிறாய்.
சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றுகிறாய்."
"ஆனால் நான் பொருள் தெரியாமல் அல்லவா அந்த செபத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்."
"'இனியாவது பொருளை சிந்தித்துக் கொண்டே செபத்தைச் சொல்லு.''
"அப்படியானால் நான் இதுவரை சொன்ன செபத்திற்கு பலன் இல்லாமல் போயிருக்குமோ?''
"'ஒரு LKG குழந்தை பள்ளிக்கூடம் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து அப்பாவிடம்,
"அப்பா, அப்பா எங்க டீச்சர் பீஸ் கேட்டாங்க." என்று சொன்னாள்.
அப்பா "நாளை வந்து கொடுக்கிறேன்" என்று சொன்னார்.
குழந்தை "பீஸ்னா என்னப்பா?" என்று கேட்டாள்.
குழந்தை பொருள் தெரியாமல் சொன்னாலும்
அதன் மீது அன்புள்ள தந்தை
பொருளை உணர்ந்து அதன்படி செயல்படுகிறார்.
ஒவ்வொரு இல்லத்திலும் இது நடக்கிறது.
நான் உனது இரக்கம் உள்ள கடவுள். உனக்கு எவ்வளவு ஞானம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.
நீ உண்மையான பக்தியுடன் செபித்தால்
பொருள் தெரியாமல் செபித்தாலும்
உனது பக்திக்கு உரிய பலன் கிடைக்கும்.
பொருளோடு செபித்தால் பலனின் அளவு அதிகமாகும்.
நீ ஏதாவது என்னிடம் கேட்டால் என்ன கேட்கிறாய் என்று உனக்குத் தெரிய வேண்டும்.
நீ என்னிடம் பேசும் போது உனது மனது ஒரு நிலைப் பட்டிருக்க வேண்டும்.
அதாவது உனது மனதில் என்னையும் நீ கேட்பதையும் தவிர வேறு எந்த எண்ணமும் இருக்கக் கூடாது.
எப்போதாவது lens வைத்து பேப்பரை எரித்திருக்கிறாயா?"
"எரித்திருக்கிறேன். சூரிய ஒளியில் பேப்பரை வைத்துக் கொண்டு
மேலே ஒரு லென்சை பிடித்துக் கொள்வேன்.
லென்ஸ் வழியாகச் செல்லும் சூரிய ஒளி பேப்பரின் மேல் ஒரு புள்ளியில் குவிந்து விழுந்தால்
சூரிய வெப்பத்தால் பேப்பர் தீப்பிடிக்கும்."
"'உனது செபமும் என் மேல் அப்படி விழ வேண்டும்."
"மனதை ஒரு நிலைப்படுத்தி,
சிலுவை அடையாளம் வரைந்து
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்
அன்றைய நாளின் எல்லா அனுபவங்களையும் தமதிரித்துவ கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால்
அன்றைய அனுபவங்கள் எல்லாம் சிலுவையாக மாறிவிடுமா?"
"'மாறிவிடும்."
"எனது சிலுவையைச் சுமந்து கொண்டு உங்கள் பின்னால் வருவது இவ்வளவு எளிதான காரியமா?
எனக்குத் தெரியாமல் போய்விட்டதே!
எனது வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் இனிமேல் மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுப்பேன்.
எனது துன்பங்களை எல்லாம் சிலுவைகளாக மாற்றுவேன்.
"தங்கள் நலம் துறந்து தங்கள் சிலுவையைத் தூக்கிக்கொண்டு"
என்று சொன்னீர்களே'
'தங்கள் நலம் துறந்து' என்றால் என்ன பொருள்?"
"என்னைப் பின்பற்ற வேண்டும் என்றால் எனது விருப்பப்படி தான் நடக்க வேண்டும்.
உனது விருப்பப்படி அல்ல.
அதுதான் தவம்.
நீ ஆசைப்படுவதை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவது தான் தர்மம்.
உனது ஆசையை விட்டுக் கொடுத்தால்தான் தர்மம் செய்ய முடியும்.
நீ உழைத்து ஈட்டும் பொருளை உனக்காக மட்டும் செலவழிக்க ஆசைப்பட்டால் தர்மம் செய்ய முடியாது."
"இப்பொழுது புரிகிறது, ஆண்டவரே.
நல்ல மனம் இருந்தால் சிலுவையைச் சுமப்பது எளிது.
இனிமேல் எனது எல்லா அனுபவங்களையும் மனுக் குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுப்பேன்.
எனது ஆசைகளை ஒறுத்து தவமும், ஊருக்குத் தர்மமும் செய்வேன்.
இந்த நொடி முதல் எனது வாழ்க்கை முழுவதையும் பாவப் பரிகாரப் பலியாக உமக்கு ஒப்புக்கொள்கிறேன்."
"'எனது உதவி உனக்கு எப்போதும் இருக்கும்."
"நன்றி, ஆண்டவரே."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment