Tuesday, February 27, 2024

"இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். "(மத்தேயு. 20:28)

" இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். "
(மத்தேயு. 20:28)



 இயேசு தனது பன்னிரு 
சீடர்களோடு எருசலேமை நோக்கிச்
சென்று கொண்டிருந்தார்.

 எருசலேமில் தான் படப்போகும் பாடுகள் பற்றியும்,

அடையப் போகும் மரணம் பற்றியும்,

அவர் மூன்றாம் நாள் உயிர்க்கப் போவது பற்றியும். கூறினார்.

 சீடர்களுடைய நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது அவர் கூறியதை அவர்கள் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை.

அருளப்பர், வியாகப்பர் ஆகியோரது தாய் அவர்களுடன் வந்து 

"நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்" என்று வேண்டினார்கள். 

இயேசு தனது பாடுகளைப் பற்றிக் கூறியது புரிந்திருந்தால் சீடர்கள் இருவரும் இப்படிக் கேட்கச் சம்மதித்திருப்பார்களா?

பாடுகளிலும், மரணத்திலும் பங்கு கேட்டிருப்பார்கள் 

அவர்கள் கேட்டதை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டுதான் அவருடைய சீடர்களாக இருந்திருப்பது போல் தெரிகிறது.

 "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை." என்று இயேசுவே சொன்னார்.


" நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?" என்று அவர் கேட்டபோது

அவர்கள் "எங்களால் இயலும்" என்றார்கள். 

ஆனாலும் அவர்கள் கேள்வியின் பொருள் புரிந்து பதில் சொன்னார்களா,

புரியாமல் சொன்னார்களா என்பது நமக்குப் புரியவில்லை.

ஆனால் ஒன்று புரிகிறது, இருவருக்கும் பதவி ஆசை இருந்தது என்பது புரிகிறது.

இயேசுவின் வார்த்தைகளையும், சீடர்களின் ஆசையையும்,
இன்றைய நமது ஆசையையும் வைத்துப் பார்க்கும்போது

நமக்கு என்ன புரிய வேண்டும்?

இயேசுவின் வார்த்தைகள் நமக்கும் புரியவில்லை என்பதும்,

சீடர்களைப் போல்தான் நாமும் ஆசைப்படுகிறோம் என்பதும் புரிய வேண்டும்.

ஞானஸ்நானம் பெற்றதால் நாம் இயேசுவின் சீடர்களாக மாறிவிட்டோம்.

இயேசு எதிர் பார்க்கிறபடி நாம் சீடர்களாக வாழ்கிறோமா?

அல்லது

நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்காக சீடர்களாக வாழ்கிறோமா?

திவ்ய நற்கருணை நாதரைச் சந்திக்கும்போது அவரிடம் என்ன வேண்டுகிறோம்?

திருப்பலியின் போது திருப்பலியை என்ன கருத்துகளுக்காக ஒப்புக் கொடுக்கிறோம்?

அன்னை மரியாளின், மற்றும் புனிதர்களின் திருத்லங்களுக்கு என்ன கருத்துக்கள் நிறைவேற திருயாத்திரைகள் செல்கிறோம்?

சிறிது நேரம் சிந்தித்துப்
 பார்ப்போம்.

" தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது." (லூக். 14:27)

இயேசுவின் சீடர்களாக இருக்க விரும்புவோர் தங்களது சிலுவையைச் சுமந்து கொண்டு அவர் பின் செல்ல வேண்டும்.

சிலுவையைச் சுமக்க விரும்பாதவர்,

அதாவது,

துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற விரும்புவோர்

இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாது.

திருப்பலியின் போதும்,
திருத்தலங்களுக்குத் திருயாத்திரை போகும் போதும்

நோய் நொடிகளையும், துன்பங்களையும் கேட்டு செபிக்கிறோமா,

அவற்றிலிருந்து விடுதலை பெற செபிக்கிறோமா?

மனசாட்சியைத் தொட்டுப் பதில் சொல்லுவோம்.

புனித அல்போன்சா துன்பங்களைக் கேட்டு செபித்ததாக அவளது வரலாற்றில் வாசிக்கிறோம்.

கோடிக்கணக்கில் புதுமைகள் செய்து மற்றவர்களுக்கு சுகம் பெற்றுக் கொடுத்த புனித அந்தோனியார்,

தான் சுகமில்லாமல் படுத்தபோது தனக்கு சுகம் கேட்டு செபிக்கவில்லை.

36 வயதிலேயே சுகமின்மை காரணமாக இறந்தார்.

நாம் அந்தோனியார் பக்தர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம்.

பக்தர்கள் என்ற வார்த்தைக்கு நமக்குப் பொருள் தெரியவில்லை.

நாம் மாதா பக்தர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.

அவளுடைய மகன் சிலுவையைச் சுமந்தபோது அவரை அவள் தடுக்கவில்லை.

சிலுவைப் பாதையில் அவருடனே நடந்து சென்று, 

அவர் இறந்த பின் அவரை அடக்கம் செய்துவிட்டுதான் இல்லத்துக்குச் சென்றாள்.

அவர் உயிர்ப்பார் என்பதை உறுதியாக விசுவசித்தாள்.

ஆகவேதான் மூன்றாம் நாள் அவள் கல்லறைக்கு வரவில்லை.

உயிர்த்த இயேசு தன் அன்னைக்கு தான் முதலில் காட்சி கொடுத்தார்.

நாம் நமது அன்னையைக் போலவும்,

மற்ற புனிதர்களைப் போலவும் சிலுவை வரம் கேட்டு செபிப்போம்.

சிலுவைக்குப் பின்புதான் உயிர்ப்பு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment