Tuesday, February 13, 2024

நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.

நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.

"தாத்தா, நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும் என்று சுவாமியார் சொன்னார்.

ஆனால் எனது அனுபவம் வித்தியாசமாக இருக்கிறதே."

"'உன்னுடைய அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லு."

"தாத்தா, எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சுற்றுலாவில் கலந்து கொள்ள விரும்பு தங்கள் பெயரையும், செலவுக்காக ரூபாய் ஆயிரத்தையும் வகுப்பு ஆசிரியரிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

எனக்கு சுற்றுலாவில் கலந்து கொள்ள ஆசை.

அதற்காக அனுமதியையும் பணத்தையும் தர என்னுடைய அப்பாவுக்கு தூண்டுதல் தரும்படி நான் கடவுளிடம் நம்பிக்கையோடு செபித்தேன்.

அப்பாவிடம் அனுமதி கேட்டேன்.

அவர் தர மறுத்து விட்டார்.

பள்ளிக்கூடத்திலிருந்து சுற்றுலா சென்று விட்டார்கள், என்னை விட்டுவிட்டு.

எனது செபம் கேட்கப்படவில்லை.

என்ன காரணமாக இருக்கும்?"

"'நீ சுற்றுலாவில் கலந்து கொள்வது உனக்கு நல்லதல்ல என்று கடவுளுக்குத் தோன்றியிருக்கும்.

நான் கேட்பது நமக்கு நல்லதா கெட்டதா என்பது நமக்கு தெரியாது.

நாம் நமது ஆசையை மட்டும் மையமாக வைத்து செபிப்போம்.

நமது ஆசை சரியா தவறா என்று நாம் சிந்திப்பதில்லை.

கடவுளுக்கு எல்லாம் தெரியும்.

அவரது ஞானத்தின் அடிப்படையில் தான் அவர் செயல்படுகிறார்.

அவர் உனக்கு எதைச் செய்தாலும், செய்ய மறுத்தாலும் நீ அவருக்கு நன்றி கூற வேண்டும்.

 ஏனெனில் அவர் செய்வது  அல்லது செய்யாமல் இருப்பது உனது நன்மைக்காகவே."

"நான் சுற்றுலாவில் கலந்து கொள்ளாமல் இருப்பதால் எனக்கு என்ன நன்மை?"

"'அது கடவுளுக்குத் தெரியும்.
இப்போதே கடவுளுக்கு நன்றி சொல்."

"நன்றி சொல்கிறேன், தாத்தா.

தாத்தா, கொஞ்சம் பொறுங்கள், phone அலருது, பேசிவிட்டு பேசுகிறேன்.

நான்தான் ராஜ் பேசுகிறேன். சொல்லுங்க..........என்னது ........
ஆண்டவரே....... பிள்ளைகளுக்கு பிரச்சனை ஒன்றுமில்லையே?...... ஆண்டவரே காப்பாற்றும்........"

"'என்னடா பிரச்சனை?"

''சுற்றுலா bus accident ஆயிடிச்சாம்.

உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.

ஆனால் அனேகருக்கும் நிறைய அடிபட்டிருக்கிறது.

  நிறைய பேருக்கு கால் கைகள் முறிந்து போயிருக்காம்.

தாத்தா, நான் சுற்றுலாவுக்குப் போயிருந்தால்?"

"'பார்த்தாயா. சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும்போது பேருந்துக்கு விபத்து ஏற்படும் என்று பள்ளிக்கூடத்தில் யாருக்கும் தெரியவில்லை.

 ஆனால் கடவுளுக்கு அது தெரியும்.

 உன்னை கை கால் முறிவிலிருந்து காப்பாற்றவே உன்னை அவர் சுற்றுலா செல்லவிடாமல் தடுத்திருக்கிறார்.

 இப்போது உண்மை புரிகிறதா?"


"புரிகிறது, ஆனாலும், ஒரு சந்தேகம்.

விபத்து நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்த கடவுள் சுற்றுலா செல்லாதபடி பள்ளிக்கூடத்தைத் தடுத்திருக்கலாமே.

 ஏன் அப்படி செய்யவில்லை?

என் மீது அக்கறை இருந்த கடவுளுக்கு ஏன் மற்ற மாணவர்கள் மீது அக்கறை இல்லை?"


"'இந்த மாதிரி கேள்வி ஏற்கனவே நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள்.

மனிதனைப் படைக்க திட்டம் போடும்போதே அவன் பாவம் செய்வான் என்று கடவுளுக்குத் தெரியுமே!

அவர் மனிதனைப் படைக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா?

இந்த கேள்விக்கு நாம் எப்படி பதில் சொல்ல முடியும்?

பிள்ளைகளை வளர்ப்பதில் எவ்வளவு கஷ்டங்கள், பிரச்சனைகள் உள்ளன என்று பிள்ளைகளைப் பெறுமுன்னே பெற்றோருக்குத் தெரியும். 

ஆனாலும் ஏன் பெற்றோர் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்?"

"தாத்தா, அவர்களுடைய அன்பு தான் அதற்கு காரணம்."

"'மனிதர்களைக் கடவுள் படைத்ததற்கு அவருடைய அளவு கடந்த அன்பு தான் காரணம்.

கடவுளுடைய அன்புக்கு விரோதமாக மனிதன் பாவம் செய்தான்.

கடவுள் அனைத்துக்கும் ஆதி காரணர்.

பாவம் செய்வான் என்று தெரிந்திருந்தும் மனிதனைப் படைத்தது கடவுள் தான்.

ஆனால் பாவம் செய்வதற்காகப் படைக்கவில்லை.

பாவத்துக்கு முழுப் பொறுப்பு அதைச் செய்யும் மனிதன்தான்.

நீ உனது அப்பாவுக்கு கீழ்ப்படிய மறுத்தால் அதற்குப் பொறுப்பு உனது அப்பாவா?

கடவுள் நம்மைப் படைத்ததால் நாம் வாழ்கிறோம்.

ஆனால் நம்மை அன்பு செய்யும் கடவுளை அன்பு செய்ய மறுக்கும் போது நாம் பாவம் செய்கிறோம்.

நாம் வாழ்வதற்குக் காரணம் கடவுளுடைய அன்பு.

நாம் பாவம் செய்வதற்குக் காரணம் நாம் கடவுளை அன்பு செய்ய மறுப்பது."

"சுற்றுலாப் பேருந்து விபத்துக்கு உள்ளானதற்குக் காரணம் யார்?"

"'அதற்கு அறிவியல் ரீதியாக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

ஓட்டுனரின் கவனமின்மை, 
பேருந்தில் brake பிடியாமை,
எதிரில் வரும் பேருந்து போன்ற அநேக காரணங்களில் ஏதாவது ஒன்றோ அதற்கு மேலோ இருக்கலாம்.

அறிவியல் ரீதியாக நாம் செய்யும் தவறுகள் தான் அநேக விபத்துகளுக்குக் காரணம்.

நம்மை முழுமையான சுதந்திரத்தோடு படைத்து விட்டதால் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாம் செய்யும் செயல்களைக் கடவுள் அனுமதிக்கிறார். 

நமது சுதந்திரத்தை நாம் தவறாகப் பயன்படுத்தினால் அதன் விளைவுகளுக்கு நாம்தான் பொறுப்பு."

"தாத்தா, என்னைக் காப்பாற்ற சுற்றுலாவுக்குப் போகவிடாமல் கடவுள் என்னை தடுத்தார் என்று கூறினீர்கள்.

இதேபோல் மற்ற மாணவர்களையும் தடுத்திருக்கலாம் அல்லவா!"

"'தடுத்திருக்கலாம்.   படைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கடவுள்தான் வழி நடத்துகிறார்.

அவர் அனுமதிக்கும் ஒவ்வொரு செயலிலும் சம்பந்தப்பட்டவருக்கு ஏதாவது ஒரு நன்மை இருக்கும்.

ஒருவருக்கு நோய் வருவது கூட அவருக்கு ஏதாவது நன்மைக்காகவே இருக்கும்.

என்ன நன்மை என்று கடவுளுக்குத் தெரியும்.

நீ விபத்தில் அகப்படாதது உனக்கு ஏதாவது ஒரு நன்மைக்காக இருக்கும்.

விபத்தில் அகப்பட்ட மாணவர்களுக்கு அதுவே அவர்களின் ஏதாவது ஒரு நன்மைக்காகவே இருக்கும்.

யார் யாருக்கு என்னென்ன செயல்களால் எதிர்காலத்தில் என்ன நன்மை வரும் என்று கடவுளுக்குதான் தெரியும்.

ஆகவே ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.

பாவம் தவிர மற்ற எல்லா கஷ்டங்களையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் அதுவே நமது நித்திய பேரின்ப வாழ்வுக்கு உதவியாக இருக்கும்.

இயேசுவின் 12 சீடர்களில் பதினொருவர் கிறிஸ்தவத்தின் எதிரிகளால் கொல்லப்பட்டார்கள்.

வேத சாட்சிகளின் கிரீடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

நற்செய்தி அருளப்பர் மட்டும் இயற்கையாக மரணம் அடைந்தார்.

பதினொருவர் கொல்லப்பட கடவுள் அனுமதித்தார்.

கடவுள் அனுமதிக்கிற துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் எவரும் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு பெறுவர்.

ஆக சுற்றுலாப் பேருந்தில் கை கால் முறிந்தவர்களும் அதை நித்திய பேரின்ப வாழ்வு பெற பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்."

"என்ன நேர்ந்தாலும் அதை இறைவனுக்காக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள்."

'"அதாவது பாவம் தவிர. 

புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களும்,

அவற்றின் விளைவுகளை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால்,  

நமக்கு ஆன்மீக ரீதியாக நன்மை பயக்கும்."

"எல்லா சூழ்நிலைகளிலும் நாம் நம்பிக்கையோடு செபிக்க வேண்டும்.

நம்பிக்கையோடு செபித்தால் நடப்பதெல்லாம் நன்மையாக மட்டுமே இருக்கும்.

நம்பிக்கையோடு செபிப்போம், நல்லது நடக்கும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment