Friday, February 9, 2024

"அப்போது அவர் அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள் "ஏழு" என்றார்கள்." (மாற்கு. 8:5)

"அப்போது அவர் அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள் "ஏழு" என்றார்கள்." 
(மாற்கு. 8:5)

இயேசு தனது பொது வாழ்வின் போது ஒரு முறை ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்.

இன்னொரு முறை ஏழு அப்பங்களையும், சில மீன்களையும் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்தார்.

ஆன்மீக உணவாகிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து வந்த இயேசு 

ஏன் சரீரத்துக்கு உரிய உணவாகிய அப்பங்களையும், மீன்களையும் மக்களுக்கு அளிப்பதில் ஆர்வம் காட்டினார்?

அவர் உடலுக்குரிய உணவைக் கொடுத்ததிலும் ஆன்மீக உணவாகிய நற்செய்தி இருக்கிறது.

நாலாயிரம் பேருக்கு உணவளிக்குமுன் 

 சீடர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார்.

ஐயாயிரம் பேருக்கு உணவளிக்குமுன் சீடர்களைப் பார்த்து 
.
"இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று கேட்டார். 
  
"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன."
என்று பதில் வந்தது.

ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகை உருவாக்கிய கடவுளுக்கு 
ஒன்றும் இல்லாமையிலிருந்து உணவை உருவாக்குவது ஒன்றும் பெரிய காரியமல்ல.

முதலில் நமது முதல் பெற்றோரை நேரடியாகப் படைத்த கடவுள் படைப்புத் தொழிலுக்கு மனிதர்களைப் பயன்படுத்திக் கொண்டது போல 

உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை மக்களோடு பகிர்ந்து கொள்ள மக்களையே பயன்படுத்த திட்டமிட்டார்.

அதற்காகத்தான் "உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானை நேசி" என்ற கட்டளையை நமக்குத் தந்திருக்கிறார்.

ஐயாயிரம் பேருக்கு உணவளித்த போது

ஒரு சிறுவனிடம் இருந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

நாலாயிரம் பேருக்கு உணவளித்த போது

சீடர்களைப் பார்த்து 

  "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள் "ஏழு" என்றார்கள். 
  
அவற்றையும், அவர்களிடம் இருந்த சில சிறு மீன்களையும் அவர் பயன் படுத்திக் கொண்டார்.

பசிக்காக மட்டும் உண்பதில் ஆன்மீகம் இல்லை.

ஆனால் நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துண்டு வாழ்வதில் ஆன்மீகம் இருக்கிறது.

இறுதித் தீர்ப்பின்போது 

" நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; 

தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்;

 அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; 
  

 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;

 நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;

 சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" 

என்று அவர் சொல்லவிருப்பதும் இதில் அடங்கியிருக்கிறது.

தங்களிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து பயன் படுத்துபவர்களுக்குத்தான் விண்ணக அரசில் இடம் உண்டு.

ஆகவேதான் தான் நேரடியாக உணவைப் படைத்துப் பகிராமல் அவர்களிடம் இருப்பதையே அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

பகிர்ந்து கொடுப்பவர்களுக்கு குறைவு ஏதும் ஏற்படாது.

மிச்சம் மீதியாக நிறையவே இருக்கும்.

இயேசு மக்களுக்கு உணவு கொடுத்ததில் நற்செய்திப் போதனையும் இருக்கிறது.
  
ஐயாயிரம் பேருக்கும், நாலாயிரம் பேருக்கும் உணவு கொடுக்க இயேசு அப்பத்தைப் பயன்படுத்தியதில் ஒரு மறையுண்மை  மறைந்திருக்கிறது.

ஐயாயிரம் பேருக்கு உணவளித்த மறுநாள் தன்னிடம் வந்த மக்களைப் பார்த்து இயேசு

"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது." என்றார்.

("I am the bread of life; whoever comes to me will never hunger, and whoever believes in me will never thirst.)
(John 6:35)

இறுதி உணவன்று அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்த பொழுது, 

இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, 

அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, 

"இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார். 
(மத். 26:26)

அப்ப, ரசக் குணங்களில் தன்னையே உணவாகத் தரவிருப்பதற்கு முன் அடையாளமாகவே இயேசு அப்பத்தை உணவாகக் கொடுத்தார்.
(I am the bread of life)

கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது 
இறுதி உணவின் போது 
திராட்சை இரசத்தை இயேசு இரத்தமாக மாற்றப் போவதின் முன் அடையாளம்.

அதேபோல் மக்களுக்கு உணவு கொடுக்க அப்பத்தைப் பலுகச் செய்தது அப்பக் குணத்தில் தன் உடலை நமக்கு உணவாகத் தரப்போவதின் முன் அடையாளம்.

 "நீங்கள் அப்பங்களை உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். 

நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

 அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே." 

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே." என்று சொல்வதற்கு
 முன்தயாரிப்பாகத் தான் இயேசு ஐந்து அப்பங்களை பலுகச் செய்து மக்களுக்கு உணவாக அளித்தார்.

'' எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்." என்று அவர் கூறிய போது 

மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.

உடலுக்குரிய உணவை ஆசையோடு உண்ட அவர்களால்

ஆன்மீக உணவாகிய இயேசுவின் உடலை உண்ண முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இயேசு உலகில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.

 அதில் 30 ஆண்டுகள் பெற்றோருடன் வாழ்ந்து விட்டு

 மூன்று ஆண்டுகளே பொது வாழ்வு வாழ்ந்தார்.

அதிலும் அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் நிறைவேறியது அவரது இவ்வுலக வாழ்வின் கடைசி நான்கு நாட்களில்தான்.

1. பாடுகள் பட்டு சிலுவையில் மரித்த பின்பும் மக்களோடு மக்களாக தனது ஆன்மாவோடும் உடலோடும் 

உலகம் முடியுமட்டும் உலகில் வாழ்வதற்காகத் திவ்ய நற்கருணையை ஏற்படுத்திய வியாழக்கிழமை.

2. பாடுகள் பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்ட வெள்ளிக்கிழமை.

3. அடக்கம் செய்யப்பட்ட வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து கல்லறைக்குள் இருந்த சனிக்கிழமை.

4. உயிர்த்து எழுந்த ஞாயிற்றுக்கிழமை.

இந்த நான்கு நாட்களுக்காகத்தான்
33 ஆண்டுகள் தயாரிப்பு.

ஆனால் மக்களில் அநேகர் இந்த நான்கு நாட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட 

அதற்கு முந்திய பொது வாழ்வின் போது ஆண்டவர் செய்த

 புதுமைகள், குணமளித்தல்கள், பேயோட்டுதல்கள், உணவு கொடுத்தல்கள் ஆகியவற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பாவ சங்கீர்த்தனம், திருப்பலி, நற்கருணை ஆகியவைதான் நமது ஆன்மீக வாழ்வின் மையம்.

நம்மில் அனேகர் பாவ சங்கீர்த்தனம் செய்வதேயில்லை.

முழுத் திருப்பலி காண்பதில்லை.

முழுத் தயாரிப்புடன் நற்கருணை வாங்குவதில்லை.

நோய் நொடிகளிலிருந்து குணம் பெற திருத்தலங்களுக்குச் சென்று மணிக்கணக்காக செபிப்பார்கள்.

திருவிழாக்கள் கொண்டாடி நன்றாக அசன விருந்து சாப்பிடுவார்கள்.

அன்று ஆண்டவர் அப்பங்களைப் பலுகச் செய்து கொடுத்த உணவை மக்கள் வயிறார உண்டது போல் 
நாமும் அசன விருந்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

திரு விருந்தின் போதும் திவ்ய நற்கருணையை ஆண்டவருக்குரிய ஆராதனை உணர்வோடு உண்ணாமல் 

ஏதோ தின்பண்டத்தை கையில் வாங்கி வாயில் போடுவது போல போட்டுக் கொண்டிருக்கிறோம்.

அன்று "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே."

என்று ஆண்டவர் சொன்னபோது அனேக மக்கள் அவரது வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்று நம்மில் அனேகர் வார்த்தைகளால் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால்  செயலால் ஏற்றுக்கொள்ளவில்லை.

 நம்மைப் படைத்து மீட்ட கடவுளாகிய இயேசுவை 

அவருக்கு உரிய ஆராதனை உணர்வோடு 

முழங்கால் படியிட்டு 

நாவில் வாங்குபவர்களே

 நற்கருணை நாதரை செயலில் ஏற்றுக் கொள்கிறார்கள்.

திவ்ய நற்கருணை விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு.

இந்த உணர்வோடு இயேசுவை உணவாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment