Thursday, February 8, 2024

"அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தார். "(மாற்கு. 7:28)

"அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தார். "
(மாற்கு. 7:28)



 சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த கிரேக்கப்பெண் ஒருவர் 
 தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு இயேசுவை வேண்டுகிறார். 


இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்கிறார். 


அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளிக்கிறார். 


அப்பொழுது இயேசு அவரிடம், "நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று" என்கிறார். 



அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார். 
(மாற்கு. 7:26-30)

இயேசு அளவு கடந்த இரக்கம் உள்ளவர் என்பது நமக்குத் தெரியும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று அவர் கூறியிருப்பதும் நமக்குத் தெரியும்.

அவர் வார்த்தை மாறாத தேவன் என்பதும் நமக்குத் தெரியும்.

அப்படியானால் இரக்கம் நிறைந்த, கேட்பதைக் கொடுக்க வல்ல இறைமகன் இயேசு 

ஏன் தன்னிடம் உதவி கேட்க வந்த பெண்ணைப் பார்த்து,

''பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்கிறார்?

இரு உள்ளங்களுக்கு இடையில் இருக்கும் உறவின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டடம்தான் நமது ஆன்மீக வாழ்வு.

இறைவனுடைய உள்ளமும் நமது உள்ளமும் இணைந்து செயல்பட வேண்டும்.

இறைவனுடைய உள்ளம் எப்போதும் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கிறது.

அதில் எந்தவித மாற்றமும் இல்லை. இறைவன் மாறாதவர்.

நம்மிடம் இருக்கும் விசுவாசம்தான் நம்மை இறைவனோடு இணைக்கிறது.

நமது விசுவாசம் உறுதியாக இருந்தால் நமது ஆன்மீக வாழ்வு உறுதியாக இருக்கும்.

நம்மிடம் விசுவாசம் இல்லாவிட்டால் ஆன்மீக வாழ்வும் இருக்காது.

சில சமயங்களில் நம்மிடம் உள்ள விசுவாசத்தின் உறுதிப்பாட்டை இறைவன் பரிசோதித்துப் பார்ப்பது வழக்கம்.

இறைவனுக்கு எல்லாம் தெரியும்.

ஆனாலும் நமது விசுவாச அறிக்கை நமது வாயிலிருந்தே வரவேண்டும் என்று இறைவன் ஆசைப்படுகிறார்.

அதற்காகத்தான் அவ்வப்போது அவரது விசுவாசிகளைப் பரிசோதித்துப் பார்க்கிறார்.

இயேசுவிடம் உதவி கேட்டு வந்தது ஒரு புற இனத்துப் பெண்.

இயேசுவை பொருத்தமட்டில் எல்லா இனங்களும் அவருடையவை தான்.

ஏனெனில் அவர் தான் எல்லா இனங்களையும் படைத்த கடவுள்.

ஆனால் அவள் இன வேறுபாடு பாராமல் தன்னை விசுவாசிக்கிறாளா என்று அவளைப் பரிசோதிப்பதற்காக,

"உதவிகள் முதலில் யூத மக்களுக்குத்தான், அப்புறம் தான் மற்றவர்களுக்கு" என்று பொருள்பட

"பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல." என்று சொல்கிறார்.

ஆனால் அந்தப் பெண்,

"ஆண்டவரே, இன அடிப்படையில் நாங்கள் உமது பிள்ளைகளாக இல்லாமலிருக்கலாம்.

ஆனாலும் நாங்கள் நீங்கள் வளர்க்கும் நாய்க் குட்டிகள் தானே.

பிள்ளைகள் சிந்தும் உணவை நாய்க் குட்டிகள் உண்ணுமே.

என்னை உமது நாய்க்குட்டியாக ஏற்றுக் கொண்டு உமது பிள்ளைகள் சிந்தும் உணவை நான் சாப்பிட அனுமதி தாருமே."

என்று கூறியதன் மூலம்,

தான் நாய்க்குட்டிக்குச் சமமானவள் என்று தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டு,

எஜமானனின் உதவியைப் பெற நாய்க்குட்டிக்கும் உரிமை உண்டு என்ற தனது ஆழமான விசுவாசத்தை அறிக்கையிடுகிறாள்.

அவளது தாழ்ச்சியையும், அசைக்க முடியாத ஆழமான விசுவாசத்தையும் கண்டு இயேசு மகிழ்ந்து

அவள் கேட்ட உதவியைச் செய்கிறார்.

இயேசு சொன்னது அந்தப் பெண்ணுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் தான்.

நற்செய்தி போதிக்கப்படும் இடங்களில் எல்லாம் இச்செய்தியும் சொல்லப்படும் என்பது அவருக்குத் தெரியும்.

இறைச் செய்தியை வாசித்ததிலிருந்து நாமும் இச்செய்தியைத் தெரிந்து கொண்டோம்.

இயேசுவின் வார்த்தைகளிலிருந்தும்,

அந்த பெண்ணின் விசுவாசம் நிறைந்த பதிலிலிருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்வோம்.

நமது ஜெபம் கேட்கப்படாதது போல் தோன்றும்போது இயேசு நமது விசுவாசத்தைப் பரிசோதிக்கிறார் என்பதை அறிந்து கொள்வோம்.

கேட்டது கேட்டவுடன் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது நமது இயல்பு.

கேட்டது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இறைவன் மீது உள்ள நம்பிக்கை சிறிது கூட நமக்கு குறையக் கூடாது என்பது இயேசுவின் விருப்பம்.

நாம் கேட்பதை விட இயேசுவே நமக்கு முக்கியம்.

நாம் கேட்பதை இயேசு தருவார் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு வேண்டும்.

எப்போது தருவார், எப்படித் தருவார் என்பதை அவரது முடிவுக்கு விட்டு விட வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வு இயேசுவை மையமாகக் கொண்டது.

நமது வாழ்வே அவர்தான்.

நாம் வாழ்வது அவருக்காக,
 அவர் செய்யும் உதவிகளுக்காக அல்ல.

அவரோடு இணைந்து வாழ்வதுதான் ஜெபம்.

பெனிசிய இனத்தைச் சேர்ந்த பெண் ஜெபித்தது போல

நாமும் தாழ்ச்சியோடும் விசுவாசத்தோடும் ஜெபிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment