Saturday, February 24, 2024

நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். " (லூக். 6:38)

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். " 
(லூக். 6:38)


நமது நித்திய பேரின்பத்தின் அளவு நமது பிறரன்பின் அளவில் தீர்மானிக்கப்படும் என்று இயேசு சொல்கிறார்.

நாம் நம்மை நேசிப்பதைப் போல் நம் அயலானையும் நேசிக்க வேண்டும்.

அன்பு இருக்கும் இடத்தில் இரக்கம் இருக்கும்.

நமது அயலான்மீது இரக்கமாய் இருக்க வேண்டும்.

நாம் அடிக்கடி "இயேசுவே இரக்கமாய் இரும்" என்று செபிக்கிறோம்.

"எங்களுக்குத் தீமை செய்தோரை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களை பொறுத்தருளும்." என்று விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்கிறோம்.


மன்னிப்புக்கு இருக்கும் விதி இரக்கத்துக்கும் பொருந்தும்.

"நாங்கள் எங்கள் அயலான்மீது இரக்கமாய் இருப்பது போல் எங்கள் மீது இரக்கமாய் இரும்."

என்பது நமது செபமாய் இருக்க வேண்டும்.

 நமது விண்ணகத் தந்தை இயல்பிலேயே இரக்கம் உள்ளவர்.

நம்மை அவர் சாயலில் படைத்திருக்கிறார்.

அவரது சாயலுக்கு பங்கம் ஏற்படாதிருக்க வேண்டுமென்றால் நாமும் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆகவே தான் இயேசு

 " உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். "
என்று கூறியிருக்கிறார்.

எல்லோரையும் அன்பு செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது.

எல்லோர் மீதும் இரக்கமாய் இருக்கும் உரிமை நமக்கு இருக்கிறது.

ஆனால் யாரையும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கும் உரிமை நமக்கு இல்லை.

தீர்ப்பளிக்கும் உரிமை படைத்தவருக்கு மட்டுமே உண்டு.

நாம் தவறு செய்யும் போது கடவுள் நம்மீது இரங்கி, தீர்ப்பிடாமல் நம்மை மன்னிக்க வேண்டுமென்றால்

நாம் மற்றவர்கள் மீது தீர்ப்பளிக்கக் கூடாது. மன்னிக்கும் மனப்பக்குவத்துடன்தான் மற்றவர்களின் பிரச்சனையை அணுக வேண்டும்.

நாம் அளிக்கும் தீர்ப்பு சரியாகவும் இருக்காது.

நமக்கு செயல் புரிபவரின் புறம் மட்டுமே தெரியும்.

ஒரு செயலின் தன்மையைக் தீர்மானிப்பது செய்பவரின் அக எண்ணங்களே.

கடவுளுக்கு மட்டுமே அனைவரின் அகமும் புறமும் தெரியும்.

அக எண்ணங்கள் நமக்குத் தெரிந்தால்கூட தீர்ப்பிடுவது
நமது உரிமைக்கு அப்பாற்பட்டது.

யாரையும் கண்டிக்கும் உரிமையும் நமக்கு இல்லை.

யாராவது நமக்கு விரோதமாக தவறு செய்தால் அவர்களைக் கண்டிக்காமல் மன்னித்தால்தான்

கடவுள் நமது பாவங்களை மன்னிப்பார்.

நாம் நமது அயலானுக்கு எப்படிக் கொடுக்கிறோமோ அப்படியே கடவுள் நமக்குக் கொடுப்பார்.

நாம் தாராளமாகக் கொடுத்தால் நமக்கும் தாராளமாகக் சட்டம் 

தேவையானது கிடைப்பதற்குப் பஞ்சமே இருக்காது.

கொடுப்போம், நமக்கும் கொடுக்கப்படும்.

எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு நமக்கும் கொடுக்கப்படும்.

தாராளமாக் கொடுப்போம்.

இப்போது நண்பர் ஒருவர் ஒரு கேள்வி எழுப்புகிறார்.

நமக்குப் பதிலுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொடுக்க வேண்டுமா? 

அல்லது

எதையும் எதிர்பாராமல் கொடுக்க வேண்டுமா? 

ஆன்மீக ரீதியாகச் சிந்தித்தால் ஒரு உண்மை புரியும்.

நாம் இவ்வுலகில் வாழ்வது ஆன்மீக வளர்ச்சிக்காக.

நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்படாவிட்டால் நாம் வாழ்ந்தும் பயனில்லை.

நமது செப, தவ, தர்ம
 வாழ்க்கையின் நோக்கமே ஆன்மீக வளர்ச்சி தான்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் ஆன்மீக வளர்ச்சிக்கான அருள் வரங்களைப் பெறுவோம்.

அருள் நிறைந்த ஆன்மாவுடன் விளங்கியது தான் அன்னை மரியாளுக்குக் கிடைத்த பெருமை.

நர்மமாக மற்றவர்களுக்குக் கொடுப்பது ஒரு ஆன்மீகச் செயல், ஆண்டவர் தருவது அவருடைய அருள்.

நர்மமாக பணத்தைக் கொடுத்தால் பதிலுக்கு பணம் கிடைக்கும் என்று எதிர் பார்க்கக் கூடாது.

பதிலுக்கு இறையருள் கிடைக்கும் என்று எதிர் பார்க்க வேண்டும்,

ஏனெனில் நாம் வாழ்வதே இறைவனுடைய அருளுக்காகத்தான்.

பொருளைக் கொடுப்போம்,

அருளைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment