Sunday, February 11, 2024

பிறப்பும், வாழ்க்கையும்.

பிறப்பும், வாழ்க்கையும்.

பிறப்பையும், வாழ்க்கையையும் பிரிக்க முடியாது.

ஒரு முறை பிறக்கிறோம், ஒரு முறை வாழ்கிறோம் என்று மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு முறை வாழ ஒரு முறை தான் பிறக்கிறோம்.

ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று விதமான வாழ்க்கைகள் இருக்கின்றன.

ஆகவே மூன்று விதமான பிறப்புகளும் இருக்கின்றன.

மூன்று வித வாழ்க்கைகள்:

1. லௌகீக வாழ்க்கை.
2. ஆன்மீக வாழ்க்கை.
3. நிலை வாழ்வு.

ஒவ்வொரு வித வாழ்க்கைக்கும்
ஒவ்வொரு வித பிறப்பு.

ஒவ்வொரு மனிதனும் ஆன்மாவும், உடலும் இணைந்தவன்.

உடல் சார்ந்த, உடல் ரீதியாக மட்டும் வாழப்படும் வாழ்க்கை லௌகீக வாழ்க்கை.


லௌகீக வாழ்க்கை வாழ்பவர்கள் உடல் சார்ந்த இன்பத்துக்காக மட்டும் வாழ்வார்கள்.

இன்றைய உலகில் வாழ்பவர்களில் பெரும்பாலான பேர் இந்த விதமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகின்றனர்.

லௌகீக வாழ்க்கை வாழ்பவர்கள் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றியோ, நிலை வாழ்வைப் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.

உலகில் வாழ்ந்தாலும் தங்கள் ஆன்மாவுக்காக மட்டும் வாழ்பவர்கள் ஆன்மீக வாதிகள்.

அவர்களுடைய உடலும் அவர்களுடைய ஆன்மீக நலனுக்காக மட்டும் வாழும்.

ஆன்மீக வாழ்வுக்கும், நிலை வாழ்வுக்கும் நெருங்கிய பிரிக்க முடியாத தொடர்பு உண்டு.

நிலை வாழ்வு மறுவுலகில் வாழப்படும் வாழ்வு.

இவ்வுலகில் நாம் வாழும் ஆன்மீக வாழ்வு நமது நிலை வாழ்வுக்காக வாழப்படுவதுதான்.

நிலை வாழ்வுக்கு ஏற்றவர்களாக நம்மை மாற்றுவதற்காகத்தான் இவ்வுலகில் நாம் ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம்.

லௌகீக வாழ்க்கை தற்காலிகமானது.

நிலை வாழ்வு நிரந்தரமானது.

மூவகைப் பிறப்பு:

முதலில் பெற்றோரிடமிருந்து பிறப்பது நமது முதல் பிறப்பு.

மூவகை வாழ்க்கைகளுக்கும் முதல் ஆரம்பம்.

பிறந்த பின்பு நாம் லௌகீக வாழ்க்கை வாழ வேண்டுமா, அல்லது ஆன்மீக வாழ்க்கை வாழ வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

நம்மைப் படைத்த கடவுளைப் பற்றிக் கவலைப் படாமல் உடல் இன்பத்துக்காக மட்டும் வாழ்வோர் அப்படியே வாழ்க்கையைத் தொடர்வர்.

மனம் போன போக்கில் வாழ்வர்.

அவர்களது ஆன்மா வாழாது.

கடவுளுக்காக வாழத் தீர்மானிப்பவர்கள் ஆன்மீக வாழ்வின் ஆரம்பத்தைத் தேடுவோர்.

இறை மகன் இயேசுவின் நற்செய்தியின் அடிப்படையில் வாழப்படும் வாழ்க்கைதான் உண்மையான ஆன்மீக வாழ்வு.

நாம் பெற்ற ஞானஸ்நானம் தான் ஆன்மீக வாழ்வின் பிறப்பு.


தண்ணீராலும் தூய ஆவியாலும் நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும்.

"இயேசு அவரைப் பார்த்து, "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்."
(அரு. 3:5)

  தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பைக் கொண்டிருப்பார்கள். 

அதாவது கடவுளின் இயல்பைக் கொண்டிருப்பார்கள்.

கடவுளின் இயல்பு உள்ளவர்களால் தான் கடவுளுக்காக வாழ முடியும்.

இவ்வுலகில் நமது மரணம்தான் கடவுளுக்காக வாழ்பவர்களின் மறுவுலகப் பிறப்பு.

இறப்பு = பிறப்பு.

இவ்வுலக வாழ்வின் முடிவு 
நிலை வாழ்வின் ஆரம்பம்.


இறை அருள் தான் ஆன்மாவின் உயிர்.

உயிருள்ள ஆன்மாதான் நிலை வாழ்வு வாழும்.

மனிதர்கள் செய்யும் சாவான பாவம் இறையருளை நீக்கி ஆன்மாவைக் கொன்று விடுகிறது.

இறந்த ஆன்மாவால் நிலை வாழ்வுக்குள் நுழைய முடியாது, 

அது பேரிடர் வாழ்வுக்குள் நுழையும்.

ஆக சாவான பாவம் இல்லாத ஆன்மாதான் உயிருள்ள ஆன்மா.

சாவான பாவம் செய்ய நேர்ந்தால் உடனடியாக பாவ சங்கீர்த்தனம் செய்து பாவத்தை நீக்கி ஆன்மாவுக்கு உயிர் கொடுத்து விட வேண்டும்.

எப்போதும் உயிருள்ள ஆன்மாவோடு வாழ வேண்டும்.

ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீக வாழ்வுக்கு பிறப்பு உண்டு, இறப்பு இல்லை.

பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுகிறோம்.

பரிசுத்த ஆவியுடனே என்றென்றும் வாழ்கிறோம்.

தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பைக் கொண்டிருப்பார்கள். 

தூய ஆவியின் இயல்பு நித்தியமாக வாழ்வது.

தூய ஆவியால் பிறப்பவர்கள் அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வார்கள்.

நாம்  தூய ஆவியால் 
பிறந்தவர்கள்.

அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment